Wednesday, 14 July 2021

ஒன்றிப்பு, நீதி, மற்றும் அமைதிக்காக, Chad திருஅவையின் பணி

 


Chad நாட்டு ஆயர்கள்: நாட்டின் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன, தேசிய அளவில், பேச்சுவார்த்தைகள், மற்றும் ஒப்புரவின் தேவை அதிகம் அதிகமாக உணரப்பட்டு வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டின் தேசிய ஒன்றிப்பை மனதில்கொண்டு சாட் (Chad) நாட்டின் அனைத்துத் தரப்பினரும் உரையாடல்களை மேற்கொள்ள முன்வரவேண்டுமென அழைப்புவிடுத்துள்ள அந்நாட்டு ஆயர்கள், ஒன்றிப்பு, நீதி, மற்றும், அமைதிக்காக, திருஅவை தன்னையே அர்ப்பணிக்கும் என்று மீண்டும் உறுதியளித்துள்ளனர்.

நாட்டில் சமுதாய, மற்றும், பொருளாதாரக் குழுக்களிடையே நேர்மையான கலந்துரையாடல்கள் தேசிய அளவில் இடம்பெறாமல் இருப்பதே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறும் ஆயர்கள், அரசுத்தலைவர் Idriss Deby Itno, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் திடீர் மரணமடைந்ததிலிருந்து, நாட்டின் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும், தேசிய அளவில், பேசுசுவார்த்தைகள், மற்றும், ஒப்புரவின் தேவை அதிகம் அதிகமாக உணரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அரசுத்தலைவரின் மரணத்திற்குப்பின், இடைக்கால அரசை நிர்வகித்து வருவோர், கடந்த காலத் தோல்விகளிலிருந்து தங்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளனர் Chad நாட்டு ஆயர்கள்.

புதிய மாற்று நிர்வாகத்தை உருவாக்க உதவும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்காலக் குழுவில், நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை, என்று மக்கள் குற்றச்சாட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், நாட்டின் அமைதி பேச்சுவார்த்தைகள், மற்றும், ஒப்புரவுக்கு பொறுப்பான துறைக்கு முழு சுதந்திரமும் அதிகாரமும் வழங்கப்படவேண்டுமெனவும் விண்ணப்பித்துள்ளனர்.

Chadன் நட்பு நாடுகள், மக்களின் அமைதி, மற்றும், நிலையான அரசுக்கான ஏக்கங்களைப் புரிந்துகொண்டு, அதற்கியைந்த வகையில் உதவவேண்டும் என கேட்டுள்ள ஆயர்கள், ஒன்றிப்பு, நீதி, மற்றும், அமைதித் தொடர்புடையவைகளில் தலத்திருஅவை எப்போதும் மக்களுக்கு பக்கபலமாக இருக்குமென்ற உறுதியையும் வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...