மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
தந்தை ஆபிரகாம், இறைவனால் வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குப் பயணத்தைத் தொடங்கிய ஊர் என்ற நகரில், புதிய ஆலயம் ஒன்று எழுப்பப்படுவதற்கு, திட்டம் ஒன்று, பாக்தாத் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டின் Dhi Qar பகுதியில் அமைந்துள்ள ஊர் நகரில் ஆலயம் ஒன்றைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றை, கல்தேய கத்தோலிக்கரான பொறியியலாளர் Adour Ftouhi Boutros Katelma அவர்கள், கர்தினால் சாக்கோ அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.
பொறியியலாளர் Boutros Katelma அவர்கள், இந்த திட்டத்தை, தனது நன்கொடையாக வழங்கியுள்ளவேளை, ஈராக் பிரதமர் Mustafa al Kadhimi அவர்களும், இதற்கு அனுமதியளித்துள்ளார் எனவும், கர்தினால் சாக்கோ அவர்களும், இதற்கு உதவத் திட்டமிட்டுள்ளார் எனவும், பீதேஸ் செய்தி கூறுகிறது.
தந்தை ஆபிரகாம் வாழ்ந்த ஊர் நகரில், ஆலயம் ஒன்று கட்டப்படுவதன் வழியாக, ஈராக் மற்றும், உலகெங்கிலுமிருந்து, திருப்பயணிகள் செல்வதற்கு வழியமைக்கும் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.
தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் அதாவது, Ibrahim al Khalil அவர்களுக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் ஈராக் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தில், 6ம் தேதி, கல்தேயர்களின் ஊர் நகருக்குச் சென்றார் என்பதும், அங்கு பல்சமய பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
மேலும், இவ்வாண்டு மே மாதம் 8ம் தேதி, உலகின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் முக்கிய பிரதிநிதிகள் 12 பேர், கல்தேயர்களின் ஊர் நகர் சென்று, தந்தை ஆபிரகாம் குடியிருந்த இடத்தில் செபித்தனர், மற்றும், திருப்பயணிகள் அப்பகுதிக்குச் செல்லவும் அவர்கள் ஊக்கப்படுத்தினர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)
No comments:
Post a Comment