Friday, 2 July 2021

திருத்தந்தையுடன் பூர்வீகக் குடிமக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு

 


கனடா ஆயர்கள் : பூர்வீகக் குடிமக்களும், கனடா திருஅவையும், அமைதி, மற்றும் இணக்கம் நிறைந்த வருங்காலத்தை பகிர்வதற்கு உதவும் சந்திப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனடா நாட்டு, பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று, இவ்வாண்டு டிசம்பர் 17ம் தேதி முதல், 20ம் தேதி முடிய, திருத்தந்தையைச் சந்திக்கவிருப்பது, கனடா திருஅவைக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் இடையே நிலவும் உறவில் நல்லதொரு இணக்கத்தை உருவாக்குமென்ற நம்பிக்கையை, அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

பூர்வீகக் குடிமக்களும், கனடா திருஅவையும், அமைதி, மற்றும் இணக்கம் நிறைந்த வருங்காலத்தை பகிர்வதற்கு இந்த சந்திப்பு உதவும் என்றும் திருத்தந்தையுடன் பூர்வீகக்குடிமக்கள் கொள்ளும் சந்திப்பு, கலந்துரையாடல், மற்றும் குணப்படுத்தலை வளர்க்கும் சந்திப்பாக அமையும் என்றும், கனடா ஆயர்கள், மேலும் கூறியுள்ளனர்.

கனடாவின் Kamloops என்னுமிடத்திலுள்ள பூர்வீகக்குடிமக்களின் குழந்தைகளுக்குரிய தங்கும் விடுதியில், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி, பூர்வீகக்குடிமக்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்திருந்த அந்நாட்டு ஆயர்கள்,  பூர்வீகக்குடிமக்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து, திருத்தந்தையை, இவ்வாண்டு இறுதியில் சந்தித்து, கலந்துரையாட உள்ளனர்.

கனடா நாட்டில், குழந்தைகள் தங்கும் விடுதியின் நிலத்தில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியிடப்பட்டவுடன், ஜூன் 6ம் தேதி, தன் நண்பகல் மூவேளை செப உரையில், ஆழ்ந்த அதிர்ச்சியையும், கனடா மக்களுடன் நெருக்கத்தையும், பூர்வீகக் குடிமக்களுடன் ஒருமைப்பாட்டையும், அறிவித்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 20ம் தேதி முடிய, திருத்தந்தையுடன் திட்டமிடப்பட்டுள்ள இச்சந்திப்பில், பூர்வீகக் குடிமக்களின் பிரதிநிதிகள், நாட்டு அறிஞர்கள் குழுவின் பிரதிநிதிகள், பூர்வீகக் குடிமக்களின் குழந்தைகள் தங்கும் விடுதியில் பயின்றோரின் பிரதிநிதிகள், நாட்டின் இளையோர் பிரதிநிதிகள், ஆயர் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...