Saturday, 3 July 2021

அறிவியல், அமைதியைக் கட்டியெழுப்ப மிகப்பெரும் வளம்

 


மாறிவரும் உலகத்திற்கு, அறிவின் புதிய சீடர்கள் தேவைப்படுகின்றனர். அறிவியலாளர்கள், அமைதியை உருவாக்கும் புதிய தலைமுறையின் ஆசிரியர்கள் -திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், அறிவியல் சார்ந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளுமாறு, “அமைதிக்காக அறிவியல்” என்ற தலைப்பில் நடைபெறும் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் பங்குகொள்ளும் அனைத்து அறிவியலாளர்களுக்கும், அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 02, இவ்வெள்ளி, 03, இச்சனி ஆகிய இருநாள்களில், திருப்பீட அறிவியல் கழகம் நடத்தும் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும், இத்தாலிய, மற்றும், ஐரோப்பிய அறிவியல் ஆய்வகங்கள், மற்றும், நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், இவ்வெள்ளியன்று காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, பெருந்தொற்றுக்குப் பின்வரும் காலத்தில், உலகைக் கட்டியெழுப்ப, புதிய வழிமுறைகளைக் காணுமாறு கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கையின் கொடை

இந்த பன்னாட்டு கூட்டம், மனித சமுதாயத்திற்கு, நம்பிக்கையின் மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ளது எனவும், இன்றையச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அறிவியல் ஆய்வுகள், எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றன எனவும், மதநம்பிக்கைக்கும், அறிவியலுக்கும் இடையே எவ்வித முரண்பாடும் இருக்கமுடியாது என்பதை, இக்கூட்டம் தொடர்ந்து உறுதி செய்கின்றது எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti) என்ற தன் திருமடலில் வலியுறுத்தியுள்ள கருத்துக்களை இக்காணொளிச் செய்தியில் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து உலகைக் கட்டியெழுப்புதல் அவசரத் தேவையாக உள்ளது என்றும், அறிவியலாளர்கள், தங்களின் பணிகளை, அனைவருக்கும் ஏற்றதாக அமைக்குமாறும் கூறியுள்ளார்.

எவ்வித அறிவியல் சார்ந்த அறிவும், தன்னிறைவு பெற்றதாக கருதப்படமுடியாது எனவும், அனைத்து மனிதரின் மாண்பு, மற்றும், வளர்ச்சியை ஊக்குவிப்பதன் வழியாக, சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் புதிய கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு அறிவியல் ஆய்வு உதவவேண்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.  

அமைதியைக் கட்டியெழுப்ப அறிவியல்

அறிவியல், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு மிகப்பெரும் வளமாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, புதிய தலைமுறைகளை உற்சாகப்படுத்தி, அவர்களின் உருவாக்குதலில் உடன்பயணிக்குமாறு அறிவியலாளர்களிடம் விண்ணப்பித்தார்.

நேர்மையோடு ஆய்வுகளை மேற்கொள்பவர், உண்மையைக் கண்டுகொள்வார் என்றும், மாறிவரும் உலகத்திற்கு, அறிவின் புதிய சீடர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், அறிவியலாளர்கள், அமைதியை உருவாக்கும் புதிய தலைமுறையின் ஆசிரியர்கள் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவியலாளர்களை ஊக்கமூட்டினார்.

வியாகுலங்களின் புனித கபிரியேல் திருத்தலம் அமைந்துள்ள Gran Sasso மலையடிவாரத்தில், அப்புனிதரின் யூபிலியை முன்னிட்டு, இந்த பன்னாட்டு அறிவியலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த இடத்தில், இத்தாலியின் தேசிய அணு இயற்பியல் ஆய்வகங்கள் அமைந்துள்ளன.

மேலும், இந்த பன்னாட்டு கூட்டத்தில், திருப்பீட அறிவியல் கழகத்தின் உதவி சான்சிலர் அருள்பணி Dario Edoardo Vigano அவர்களும் உரையாற்றினார்.


No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...