Wednesday, 14 July 2021

ஆகஸ்ட் 7ல், உலகின் நலவாழ்வுக்காக இந்தியத் திருஅவை செபம்

 


கோவிட்-19ஆல் இறந்தவர்களின் ஆன்மா நிறையமைதி அடையவும், அவர்களின் குடும்பங்களோடு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கவும், இந்தியத் திருஅவை தேசிய அளவில் இறைவேண்டல் நிகழ்வு ஒன்றை நடத்துகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த ஆன்மாக்கள் நிறையமைதி அடையவும், அவர்களின் இழப்பால் வருந்தும் குடும்பங்கள், மற்றும், குழுமங்களுடன் தோழமையை வெளிப்படுத்தவும், உலகின் நலவாழ்வுக்காகவும், தேசிய அளவில் இறைவேண்டல் நாள் ஒன்றை, CCBI எனப்படும், இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, சனிக்கிழமை, இந்திய நேரம் இரவு 8.30 மணி முதல், 9.30 மணி வரை, தேசிய அளவில், ஒரு மணி நேரம் இறைவேண்டல் நடைபெறும் எனக் கூறியுள்ள CCBI ஆயர் பேரவை, அந்நேரத்தில், வேறு எந்த நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யவேண்டாம் என, அனைத்து மறைமாவட்டங்கள், துறவு சபைகள், பக்த சபைகள், மற்றும், கத்தோலிக்க இயக்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

புனித தோமையார், புனித பிரான்சிஸ் சேவியர், புனித அன்னை தெரேசா ஆகியோரின் கல்லறைகளிலும், பாண்ட்ரா (மும்பை), சர்தானா (மீரட்), சிவாஜி நகர் (பெங்களூரு), வேளாங்கன்னி (தமிழகம்) ஆகிய நகரங்களிலுள்ள அன்னை மரியா பசிலிக்காக்களிலும், ஒரு மணி நேர இறைவேண்டல் நடைபெறும்.

திருநற்கருணை ஆசீரோடு நிறைவடையும் இந்த இறைவேண்டல், மாதா, ஷலோம், குட்னெஸ், பிரார்த்தனா பவன், தியாவானி, போன்ற கத்தோலிக்கத் தொலைக்காட்சிகள், முக்கிய கத்தோலிக்க யூடியூப் வலைக்காட்சிகள் ஆகியவை வழியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வருகிற ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ள இந்த இறைவேண்டல் நிகழ்வில் அனைவரும், குறிப்பாக, குடும்பங்களும், துறவு சபை குழுமங்களும் கலந்துகொள்ளுமாறும், வெளிநாடுகளில் வாழ்கின்ற தங்களின் உறுப்பினர்களும் இதில் இணையத் தூண்டுமாறும், CCBI ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது.

ஜூலை 10, கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட, இறைவேண்டல் குறித்த இந்த அறிக்கையில், CCBI ஆயர் பேரவையின் தலைவர் கோவா மற்றும், டாமன் பேராயர் பிலிப் நேரி ஃபெராவோ, உதவித்தலைவர் சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, பொதுச்செயலர் டெல்லி பேராயர் அனில் கூட்டோ ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர். 


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...