Wednesday, 14 July 2021

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – திருப்பீடம் கண்டனம்

 


பாலியல் வன்முறையைக் குறித்து பலரும் மௌனம் காப்பதும், இவற்றிற்கு தகுந்த நீதியை வழங்க அரசுகள் காட்டும் தயக்கமும், இந்த வன்முறை தொடர்ந்து இடம்பெறுவதற்கு வழி வகுக்கிறது - திருப்பீடம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வடிவமான வன்முறைகளும், குறிப்பாக, குடும்பங்களுக்குள் ஏற்படும் வன்முறைகளும், மனித உரிமைக்கு எதிரான மிகப்பெரும் குற்றம் என்று திருப்பீடத்தின் பிரதிநிதிகள், பன்னாட்டு கூட்டமொன்றில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஜூன் 21ம் தேதி துவங்கி, ஜூலை 13, வருகிற செவ்வாய் முடிய, ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை, ஜெனீவாவில் நடத்திவரும் 47வது கூட்டத்தில், பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைக் குறித்து, திருப்பீடம் தன் கருத்துக்களை வெளியிட்டது.

வன்முறைகளிலேயே மிகக் கொடியது, பாலியல் வன்முறை என்றும், இதைக் குறித்து பலரும் மௌனம் காப்பதும், இவற்றிற்கு தகுந்த நீதியை வழங்க அரசுகள் காட்டும் தயக்கமும், இந்த வன்முறை தொடர்ந்து இடம்பெறுவதற்கு வழி வகுக்கிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது.

பாலியல் வன்புணர்ச்சி காரணமாக கருவுறும் குழந்தைகள், வாழ்வதற்கு உரிமை பெற்றுள்ளனர் என்பதையும் வலியுறுத்தும் திருப்பீடம், அவ்வாறு கருவுறும் குழந்தைகளை அழிப்பது, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் இரட்டைக் குற்றம் என்றும் கூறியுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 47வது கூட்டத்தின் மற்றொரு அமர்வில், தரமான கல்வி அனைவரின் உரிமை என்பதை வலியுறுத்தி திருப்பீடம் தன் கருத்துக்களைப் பதிவு செய்தது.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது ஒவ்வோர் அரசின் கடமை என்பதை வலியுறுத்திக் கூறிய திருப்பீடம், குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்கைக் குறித்தும் எடுத்துரைத்தது.

குழந்தைகளின் கல்வி என்று சொல்லும்போது, அதில், அக்குழந்தையின் உடல், அறிவு, மனம், ஆன்மா என்ற அனைத்து அம்சங்களும் நலமான வழிகளில் முன்னேறுவதை கண்காணிப்பது பெற்றோரின் முக்கிய கடமை என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...