மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் மாதம் வெளியிட்ட, "Fratelli tutti", அதாவது, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற புதிய திருமடலை, நம்பிக்கையாளர்கள் அனைவரும் வாசித்து, தியானிக்குமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 12, இவ்வியாழனன்று, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் நடத்திய, இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய, அந்நிறுவனத்தின் தலைவரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், பாரபட்சமின்றி, அனைத்து மக்களையும், தெளிவான செயல்கள் வழியாக அன்புகூரக் கற்றுக்கொள்ளுமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டார்.
அனைவரும் உடன்பிறந்தோர் திருமடலின் ஒளியில், அன்பு, அல்லது, பிறரன்பை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது குறித்து நடைபெற்ற இந்த மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், இத்திருமடலில் திருத்தந்தை வலியுறுத்தியுள்ள, உலகளாவிய அன்பு, சந்திப்பு கலாச்சாரம் ஆகிய இரு கூறுகள் பற்றி விளக்கினார்.
உலகளாவிய அன்பு
கடவுள் அனைவரையும் அன்பு கூர்கிறார், இந்த அன்பையே இயேசு வெளிப்படுத்தினார் என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இயேசு எல்லாரையும், குறிப்பாக, அன்புகூரத்தகுதியற்றவர்கள், புறவினத்தார் என்று, சமுதாயம் ஒதுக்கியவர்களை அன்புகூர்ந்தார், என்பதை, நாம் நல்ல சமாரியர் உவமை வழியே அறிந்துகொள்கிறோம் என்று கூறினார்.
நல்ல சமாரியர் உவமை, நமக்கு அறிமுகமில்லாதவர்களை அன்புகூர அழைப்பு விடுக்கின்றது, இதுவே உலகளாவிய அன்பு என்றும், இந்த அன்பில், பிறரன்புச் செயல்கள் ஆற்ற தூண்டப்படுகிறோம் என்றும் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், உலகளாவிய அன்பு, சந்திப்பு கலாச்சாரத்தோடு இணைந்து செல்லவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
சந்திப்பு கலாச்சாரம்
ஒருவர் மற்றவரோடு உரையாடுகையில், நாம், மறுக்கப்படாத நமது தனித்துவம் மற்றும், பாதுகாப்பாக இருக்கும் சமய தனித்துவம் பற்றியும் அறியவருகிறோம். இது, பல்சமய உரையாடலுக்குத் திறந்தமனம் உள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது என்றுரைத்தார், கர்தினால் தாக்லே.
சந்திப்பு கலாச்சாரத்தின் வழியாக, பல்வேறு கலாச்சாரங்களைச் சந்திக்கின்றோம், இந்நிலையில், அரசியல், பொருளாதாரம், கலவரங்களுக்குத் தீர்வு, நட்பு கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றை சிறப்பாக ஆற்றுவதற்கு வழிகளைக் காண்கிறோம் என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இவையனைத்தும் பொது நலனுக்காகப் பணியாற்ற நம்மை இட்டுச் செல்கின்றது என்று கூறினார்.
மேலும், கர்தினால் தாக்லே அவர்கள், நவம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment