மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் வறியோர் உலக நாளில், இந்தியத் திருஅவை, ஏழைகளுக்கு, உதவியையும், அன்பையும் வழங்குகின்றது என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், நான்காவது வறியோர் உலக நாள் பற்றி ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நாம் பிறரன்புச் செயல்கள் ஆற்றுகையில், அன்பையும் சேர்த்தே வழங்குகின்றோம் என்றும், ஏழைகளுக்கு பணத்தை மட்டும் கொடுக்கவேண்டாம், உங்கள் அன்புக் கரத்தை நீட்டுங்கள் என்றும், புனித அன்னை தெரேசா அவர்கள் அடிக்கடி கூறுவார் என்பதைக் குறிப்பிட்டார்.
அன்பு என்பது இரக்கப்படுவது அல்ல என்றும், இந்த கொள்ளைநோய் காலத்தில், இந்தியத் திருஅவை, ஏழைகளுக்கு கரத்தை நீட்டுகின்றது என்றும் கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உங்கள் கரங்களைத் தொண்டாற்றவும், உங்கள் இதயங்களை அன்புகூரவும் பயன்படுத்துங்கள் என்ற அன்னை தெரேசாவின் வார்த்தைகளை, வறியோர் உலக நாளில் தொடர்ந்து செயல்படுத்துகிறோம் என்று கூறினார்.
இவ்வாண்டு வறியோர் உலக நாள், தீபங்களின் விழாவான தீபாவளி நாளையொட்டி சிறப்பிக்கப்படுகின்றது, இந்தியத் திருஅவையால் பரப்பப்பட்ட அன்பு மற்றும், பிறரன்பு ஒளி, துன்பம், வறுமை மற்றும், பசி ஆகியவற்றுக்கு மத்தியில் மெல்லிய கீற்றாக உள்ளது என்று உரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருமுழுக்கு மற்றும், உறுதிபூசுதல் ஆகிய அருளடையாளங்கள் வழியாக, நாம் உலகின் ஒளியாகத் திகழவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தியத் திருஅவை, சிறுபான்மையாக இருந்தாலும், இந்த கொள்ளைநோய் காலத்தில், 2 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, 130 கோடி ரூபாய் செலவில், நிவாரண உதவிகளை ஆற்றியுள்ளது என்பதையும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் குறிப்பிட்டார். (AsiaNews)
No comments:
Post a Comment