Monday 16 November 2020

கடல்தாவரங்கள் வளர்ப்பால் உலகில் பசியை அகற்ற முடியும்

 தென்னாப்ரிக்காவில் சுற்றுச்சூழல் நாள்


கடல் தாவரங்கள், மீத்தேன் வாயு வெளியேற்றத்தை, 90 விழுக்காடு குறைக்கும், இவை உணவில் சேர்க்கப்படும்போது, அவை செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தேவைகளைக் குறைக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெருங்கடலில், கடல்தாவரங்களை இரண்டு விழுக்காட்டுப் பகுதியில் மட்டும் பயிர்செய்தாலே, இந்த உலகில் நிலவும் பசிப்பிரச்சனையை முற்றிலுமாக அகற்ற முடியும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கடல்தாவரங்களை பயிர்செய்தால், அது, காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் மற்றும், கடல் மாசுபடுதலைக் குறைக்கவும், 2030ம் ஆண்டுக்குள் உலகில் நிலவும் பசிக்கொடுமையை முற்றிலும் அகற்றும் ஐ.நா.வின் இலக்கை நிறைவேற்றவும் உதவும் என்று, ஐ.நா. வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

பெருங்கடலில் இரண்டு விழுக்காட்டுப் பகுதியை மட்டுமே பயிர்செய்தால், இந்த உலகின் 12 பில்லியன் மக்களுக்குத் தேவையான புரோட்டின் சத்தை விநியோகிக்கலாம் என்றும், ஐ.நா.வின் பெருங்கடல் சார்ந்த மூத்த ஆலோசகர் Vincent Doumeizel அவர்கள் கூறினார்.

கடல்தாவரங்களில், புரோட்டின் சத்து மிக அதிகமாகவும், தேவையற்ற கொழுப்பு சத்தும், மாவுச் சத்தும் குறைவாகவும், வைட்டமின்கள், இரும்புச் சத்து, மற்றும், துத்தநாகம் அதிகமாகவும் உள்ளன என்றும், Doumeizel அவர்கள் கூறினார்.

ஆசியாவில் கடல்தாவர உணவு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது என்றும், ஜப்பானில் பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு மூன்றுவேளை இந்த உணவை உண்கின்றனர் என்றும், கொரியாவில் பல உணவுத் தயாரிப்புக்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன என்றும் சீனாவில் பலர் இவற்றை உண்கின்றனர் என்றும், Doumeizel அவர்கள் கூறினார்.

கடல் தாவரங்களால், மீத்தேன் வாயு வெளியேற்றம், 90 விழுக்காடு குறைக்கப்படும், இவை உணவில் சேர்க்கப்படும்போது, அவை செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும், நோய் எதிர்ப்பு மருந்துகளின் தேவைகளைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நமிபியா கடற்பகுதியில் ஏறத்தாழ எழுபதாயிரம் ஹெக்டேர் பகுதியில் கடலுக்கடியில் கடல்தாவரக் காடுகளை வளர்ப்பதற்கு, Kelp Blue என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், அதனைச் சுற்றி இருபது விழுக்காட்டுப் பகுதியில் மீன்வளத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. (UN)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...