Monday, 16 November 2020

ஜோ பைடன் அவர்களுக்கு, திருத்தந்தை நல்வாழ்த்து

 திருத்தந்தையும், ஜோ பைடன் அவர்களும் - கோப்புப் படம் (2016)

கரங்களை நீட்டுவதற்கு நம்மிடமுள்ள ஆற்றல், வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் வழிகளில் நாம் இயல்பாகச் செயல்படுவதற்குத் திறமையை கொண்டிருக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 15 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் நான்காவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் உலக நாள் (#WorldDayOfThePoor) என்ற ஹாஷ்டாக்குடன், நவம்பர் 13 இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“நம் கரங்களை நீட்டுவதற்கு உள்ள ஆற்றல், வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கும் வழிகளில் நாம் இயல்பாகச் செயல்படுவதற்குத் திறமையை கொண்டிருக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தொலைப்பேசி உரையாடல்

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் (Joseph Robinette Biden) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நவம்பர் 12, இவ்வியாழனன்று, தொலைப்பேசியில் அழைத்து, தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர், மத்தேயோ புரூனி அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், ஜோ பைடன் அவர்களுக்குமிடையே இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலை உறுதிசெய்த புரூனி அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், புதிய அரசுத்தலைவருக்கு வாழ்த்துக் கூறியதைத் தொடர்ந்து, திருத்தந்தையும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 35வது அரசுத்தலைவராகப் பணியாற்றிய, கத்தோலிக்கரான ஜான் எப் கென்னடி (John Fitzgerald Kennedy) அவர்களுக்குப்பின், தற்போது கத்தோலிக்கரான ஜோ பைடன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டிருந்த அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான, பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள், ஜோ பைடன் அவர்களுக்கு ஆயர்கள் சார்பில், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

நாட்டுத் தலைவர்கள் அனைவரும், தேசிய ஒன்றிப்பு உணர்வில் இணைந்து, பொது நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு, காலம் கனிந்துள்ளது என்றும், கத்தோலிக்கர் மற்றும், அமெரிக்கர்கள் என்ற முறையில், அனைவரும் கிறிஸ்துவுக்குச் சான்று பகரவேண்டும் மற்றும், இவ்வுலகில் அவரது இறையாட்சியைக் கட்டியெழுப்பவேண்டும் என்றும், பேராயர் கோமஸ் அவர்கள், அச்செய்தியில் கூறியிருந்தார்.

இந்த மிகப்பெரும் நாடு கட்டியெழுப்பப்பட்ட அதே இலக்கோடு, தற்போது அனைவரும் உழைப்பதற்கு, அந்நாட்டின் பாதுகாவலராகிய புனித கன்னி மரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவதாகவும், பேராயர் கோமஸ் அவர்கள், அச்செய்தியில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment