தம்பிக்காக மேற்கொண்ட கடின உழைப்பால் உருவிழந்துபோன அண்ணன் ஆல்பர்ட் அவர்களின் 'செபிக்கும் கரங்கள்', கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இறைவேண்டல் செய்வதற்கு, நம்மை அழைக்கிறது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
15ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் 18 குழந்தைகள் இருந்தனர். வறுமை மிகுந்த அக்குடும்பத்தில் பிறந்த மூத்த இரு சகோதரர்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்ததால், ஓவியக் கலையைப் பயில விரும்பினர். இருந்தாலும், வீட்டின் வறுமையை எண்ணி தங்கள் கனவை நனவாக்க முடியாமல் தவித்தனர். ஒரு சில ஆண்டுகளுக்குப்பின், அவ்விருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, சகோதரர்களில் ஒருவர், நான்கு ஆண்டுகள் ஓவியக் கலைக்கூடத்திற்கு படிக்கச் செல்வார், அவரது கல்விக்கு உதவிசெய்ய, மற்றொரு சகோதரர் சுரங்கத்தில் தொழில் செய்வார். நான்கு ஆண்டுகள் சென்றபின், ஓவியக் கலையைப் படித்தவர், தன் ஓவியங்களை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டோ, அல்லது அவரும் சுரங்கத்தில் உழைத்தோ, அதுவரை சுரங்கத்தில் உழைத்த சகோதரரைப் படிக்க அனுப்பவேண்டும். இதுதான் அவர்கள் எடுத்த முடிவு. அதன்படி, அவ்விருவரும் சீட்டுக் குலுக்கி போட்டபோது, ஆல்பர்ட், ஆல்ப்ரெக்ட் (Albert, Albrecht) என்ற அந்த இரு சகோதரர்களில், ஆல்பர்ட் அவர்கள், உழைப்பார் என்றும், ஆல்ப்ரெக்ட் அவர்கள், ஓவியப் பள்ளிக்குச் செல்வார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆல்ப்ரெக்ட் அவர்கள், தன் ஓவியத் திறமையில், மிக அற்புதமாக வளர்ச்சியடைந்தார். அவரது புகழ் நாடெங்கும் பரவியது. நான்கு ஆண்டுகள் கழிந்து, ஒரு தலைசிறந்த ஓவியர் என்ற புகழுடன் அவர் வீடு திரும்பியபோது, ஊரே திரண்டு வந்து, அவருக்கு விருந்து கொடுத்தது. விருந்தின் முடிவில், ஆல்ப்ரெக்ட் அவர்கள், எழுந்து, இத்தனை ஆண்டுகள் தனக்காக உழைத்த தன் சகோதரரை அனைவர் முன்னிலையிலும் பாராட்டியபின், அவரை நோக்கி, "ஆல்பர்ட், நாம் எடுத்த முடிவின்படி, இனி நான் சம்பாதிக்கப் போகிறேன், நீ ஓவியப்பள்ளிக்கு படிக்கச்செல்" என்றார். ஆல்பர்ட் அவர்கள் எழுந்து, "தம்பி, மிக்க நன்றி. ஆனால், என்னால் இப்போது பள்ளிக்குச் சென்று ஓவியம் படிக்க இயலாது. இந்த நான்கு ஆண்டுகள் நான் சுரங்கத்தில் வேலை செய்ததால், என் கை விரல்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. இனி என்னால் தூரிகை பிடித்து படம் வரையமுடியாது" என்று கூறினார். உருக்குலைந்து போயிருந்த தன் சகோதரரின் கரங்களை, தன் இரு கரங்களாலும் இறுகப் பற்றி, அவற்றை, தன் கண்ணீரால் நனைத்தார் ஆல்ப்ரெக்ட்.
Albrecht Dürer அவர்கள் உருவாக்கிய பல அழகான ஓவியங்கள், மிகவும் புகழ்பெற்றதாய் விளங்கின. ஆனால், தன் அண்ணனின் பழுதடைந்த கரங்களை வைத்து அவர் தீட்டிய ஓர் ஓவியம், நம்மில் பலருக்கு மிகவும் பழக்கமான ஓர் ஓவியம். 'கரங்கள்' என்று தலைப்பிட்டு அவர் தீட்டியிருந்த அந்த ஓவியம், 'செபிக்கும் கரங்கள்' என்ற பெயருடன், இன்று, உலகின் பல ஆலயங்களிலும், இல்லங்களிலும் காணப்படுகிறது. தம்பிக்காக மேற்கொண்ட கடின உழைப்பால் உருவிழந்துபோன அண்ணன் ஆல்பர்ட் அவர்களின் 'செபிக்கும் கரங்கள்', கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, இறைவேண்டல் செய்வதற்கு, நம்மை அழைக்கிறது.
No comments:
Post a Comment