Monday 16 November 2020

நவம்பர் 15 - நான்காவது உலக வறியோர் நாள் நிகழ்வுகள்

 2019 உலக வறியோர் தினமன்று வறியோருடன் உணவருந்தும் முன்னர் செபிக்கும் திருத்தந்தை (17112019)


உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 60 பங்குத்தளங்களில் உள்ள 5000 குடும்பங்கள் சமைப்பதற்கு, ஒவ்வொரு நாளும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன - பேராயர் Fisichella

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 15 வருகிற ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில், நான்காவது வறியோர் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு முயற்சிகளை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், விளக்கிக் கூறினார்.

நவம்பர் 12 இவ்வியாழனன்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி நேரடி ஒளிபரப்பில், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella அவர்கள், வறியோர் உலக நாளைக் குறித்த விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கினார்.

சீராக்கின் ஞானம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள, “ஏழைகளுக்குத் தாராளமாய்க் கொடு” (சீராக்.7:32) என்ற அறிவுரையை மையப்படுத்தி, நான்காவது வறியோர் உலக நாள் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 விளைவித்துள்ள துன்பங்களுக்கு நாம் தரக்கூடிய பதிலிறுப்பை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் என்று பேராயர் Fisichella அவர்கள், இச்சந்திப்பின் துவக்கத்தில் கூறினார்.

நவம்பர் 15 இஞ்ஞாயிறன்று காலை 10 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், குறிப்பிட்ட அளவு விசுவாசிகளின் பங்கேற்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலி, Rai 1, TV2000, Telepace உட்பட, உலகின் பல்வேறு கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று பேராயர் Fisichella அவர்கள் கூறினார்.

கடந்த மூன்று வறியோர் உலக நாள்களையொட்டி, புனித பேதுரு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் மருத்துவமனை, மற்றும் வறியோருடன் திருத்தந்தை கலந்துகொண்ட மதிய உணவு ஆகிய நிகழ்வுகள், இவ்வாண்டு, கொள்ளைநோயின் தடுப்பு விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பதை, பேராயர் Fisichella அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

அதேவேளை, இந்தக் கொள்ளைநோய் ஆரம்பமானதிலிருந்து, திருத்தந்தையின் தர்மப்பணி அலுவலகம் நடத்தி வரும் மருத்துவமனை வழியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும், குறைந்தது 50 பேருக்கு கொரோனா தொற்றுக்கிருமி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதையும் பேராயர் Fisichella அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Roma Cares மற்றும் Elite Supermarkets ஆகிய நிறுவனங்களின் தாராள உதவிகளுடன் உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 60 பங்குத்தளங்களில் உள்ள 5000 குடும்பங்கள் சமைப்பதற்கு, ஒவ்வொரு நாளும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருவதையும் பேராயர் Fisichella அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

UnipolSai Assicurazioni நிறுவனத்தின் உதவியுடன், 15,000 மாணவர்களுக்குத் தேவையான 3,50,000 முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதையும் கூறிய பேராயர் Fisichella அவர்கள், 4வது வறியோர் உலக நாளன்று கத்தோலிக்கத் திருஅவையில் பல்வேறு முயற்சிகள், அந்தந்த நாட்டு அரசுகளின் விதிமுறைகளை கடைப்பிடித்து மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...