மேரி தெரேசா: வத்திக்கான்
15ம் நூற்றாண்டில் மிக உயர்ந்த நிலையில் ஞானம் பெற்றிருந்த கபீர் தாசர் அவர்களும், ரகீப் அவர்களும், ஒரே நேரத்தில், கிராமம் ஒன்றிற்கு வந்தனர். இவ்வளவு பெரிய ஞானிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பது சாதாரணமாக நடப்பது அல்ல. எனவே, அன்று அந்த இரு ஞானிகளும் தங்கள் கிராமத்திற்கு வந்திருப்பதை அறிந்து மக்கள் மகிழ்ந்தனர். அந்த மக்கள், அந்த ஞானிகளுடைய சீடர்களிடம் சென்று, அந்த இரு மகான்களும் நேருக்கு நேர் சந்தித்து, தங்களுக்கிடையே பேசிக்கொள்வதைக் நாங்கள் கேட்கவேண்டும், அதைப் பார்த்து நாங்கள் பரவசப்படவேண்டும் என்று கூறினர். சீடர்களும், ஞானிகளிடம் சென்று மக்களின் ஆவலைத் தெரிவித்தனர். அந்த ஞானிகளும், எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ஒரு மாலை நேரத்தில், ஓரிடத்தில் சந்திப்பதற்கு இசைவு தெரிவித்தனர். அன்று அவ்விருவரும் சந்திக்கும் அந்த அற்புதத்தைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சந்திப்பில், அவ்விரு ஞானிகளும், பல மணி நேரங்கள் எதுவுமே பேசாமல், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். இருவர் முகங்களிலும் ஒளிமயமான புன்னகை ததும்பியது. இவ்வாறு அவர்கள் இருவரும், நள்ளிரவுவரை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, எதுவுமே பேசாமல், ஒருவரை ஒருவர் வணங்கி விடைபெற்றுச் சென்றனர். பின்னர் அவர்களுடைய சீடர்கள் அவர்களிடம், மகான்களே, உங்களிடமிருந்து வெளிவரும் ஞானம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர், ஆனால் நீங்களோ ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மௌனமாக இருந்துவிட்டு வந்துவிட்டீர்களே என்று கேட்டனர். அப்போது அந்த இரு ஞானிகளும், பேசிவைத்தாற்போல், அன்பின் உச்சகட்டத்தில் வார்த்தைகள் வராது என்று கூறினர்.
வயது முதிர்ந்த தம்பதியரோ, நீண்டகாலம் சென்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் நண்பர்களோ, உறவுகளோ, தங்களுக்குள் பரிமாறும் மொழி மௌனம். ஆம். அன்பின் உச்சகட்டத்தில் பேச்சு செயலற்றுபோகும். அந்நிலையில் பேச வார்த்தைகள் உண்டா? (bing.com தினம் ஒரு கதை)
No comments:
Post a Comment