மேரி தெரேசா: வத்திக்கான்
ஆசிரியர் ஒருவரிடம் படித்து வந்த மாணவர்கள் ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அவர்களில் ஒரு மாணவன் மற்ற மாணவர்களைவிட, மிகுந்த அறிவாளியாக விளங்கினான். ஒவ்வொரு நாளும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினான். படிப்பு, நடிப்பு, விளையாட்டு போன்ற எல்லாத் துறைகளிலும் சிறந்தவனாக, அவனே வகுப்பில் நம்பர் 1 ஆகத் திகழ்ந்தான். பொதுவாகவே, இத்தகைய மாணவர்களிடம் ஆசிரியர்களுக்கு ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அந்த மாணவனின் வகுப்பு ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும், அக்கறையும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அந்த மாணவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லாரையும் ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்தான். தன்னைவிட மூத்த மாணவர்களைக்கூட அவன் மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமானக் கேள்விகள் கேட்டு, அவர்கள் பதில் தெரியாமல் விழிப்பதைப் பார்த்து, கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தால் அழும்வரை கேலிசெய்யத் தொடங்கினான். இந்த விடயம் வகுப்பு ஆசிரியரின் காதுகளுக்கு எட்டியது. பன்முக அறிவாளியான தனது மாணவனை, இந்த ஆணவம் அழித்துவிடும் என்பதை உணர்ந்த ஆசிரியர், அவனது நெறிதவறிய போக்கை அவனுக்கு உணர்த்த விரும்பினார். அவனுக்கு நேரடியாக அறிவுரை சொன்னால், அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில், அவன் தன்னையேகூட எதிர்த்துப் பேசக்கூடும் என்று உணர்ந்த ஆசிரியர், வேறொரு வழியில் சிந்தித்தார்.
அடுத்த நாள் ஆசிரியர், அந்த மாணவனைத் தன்னிடம் அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் மெய்யியலைக் கரைத்துக் குடித்தவர். அவர், இருநூறுக்கும் அதிமான நூல்களை எழுதியிருப்பவர். மத்திய அரசிடம் பத்து முறை சிறந்த அறிஞருக்கான விருதினையும் பெற்றிருப்பவர். அவரிடம் கற்ற பல மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்ந்த பதவியில் உள்ளனர். இப்போது நீ பக்கத்துத் தெருவிலுள்ள தச்சுத் தொழிலாளரிடம் சென்று விவரத்தைச் சொல்லி, அழகான ஒரு சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். அந்தப் பெட்டி, இன்று மதியம், இறந்த என் நண்பரின் அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்று சொன்னார். உடனே அந்த மாணவன் ஆசிரியரிடம், இதோ, உடனே செய்து முடிக்கின்றேன், ஐயா என்று சொல்லிவிட்டு தச்சுத் தொழிலாளர் வீட்டுக்கு விரைந்தான். அந்த தச்சுத் தொழிலாளரும் அவனை வரவேற்று, அவன் வந்த விடயத்தைக் கேட்டார். அவனும், இன்று 12 மணிக்குள், அழகான சவப்பெட்டி ஒன்று வேண்டும் என்று சொன்னான். உடனே, தச்சுத் தொழிலாளரும், இறந்தவர் குறித்த விவரங்களைக் கேட்டார். அந்த மாணவனும், இறந்தவர் பற்றி, ஆசிரியர் சொன்ன அனைத்துப் பெருமைகளையும் அப்படியே ஒப்பித்தான். உண்மையான ஞானம்
அந்த மாணவன் சொல்லி முடிப்பதற்குள், அந்த தச்சுத் தொழிலாளர் சூடாகி விட்டார். "ஏன்டா! இன்னிக்கு நீ பொழுதுபோக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம, வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்று கோபமாகக் கேட்டார். இந்தக் கேள்வி அவனுக்கு அடங்காத கோபத்தை மூட்டியது. அவன் அவரிடம், இறந்தவர் பற்றி இவ்வளவு சொல்லியும் புரியவில்லை என்றால், நீங்கள்தான் ஒரு அடி முட்டாள் என்றான். அந்த தச்சுத் தொழிலாளரும், "அறிவு கெட்டவனே! என்னதான் படித்திருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும், எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது, அந்த சடலத்தினுடைய உயர, அகலந்தான். நீங்கள் படிக்கும் படிப்பெல்லாம் உடம்பில் உயிர் உள்ளவரைக்கும்தான். உனக்குச் சவப்பெட்டி வேண்டும் என்றால், மரியாதையாகப் போய் சடலத்தை அளவெடுத்துக்கொண்டு வா" என்றார். அந்தச் சொற்கள், அவனுக்கு. எங்கோ பளீரென்று அடி விழுந்ததுபோல் இருந்தது. மனித அறிவு இவ்வளவுதானா? இதற்காகவா இத்தனை பேரை நான் அவமதித்தேன்? என்று சிந்தித்தான். அவனுக்கு தன்னை நினைத்து அவமானமாக இருந்தது. அவன் கூனிக்குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான். "என்ன மகனே! சவப்பெட்டி தயாரா?" என்று ஆசிரியர் கேட்டார். அதற்கு அவன், ஐயா, "அடிச்சாச்சு. ஆனா சவப்பெட்டியை அல்ல, என்னோட தலைகனத்தை" என்று பதில் சொன்னான். உடனே ஆசிரியர் அவனை அரவணைத்து, புன்னகைத்துக்கொண்டே சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும், எவ்வளவுதான் அறிவில் சிறந்து விளங்கினாலும், நமது உடம்பு, அழியப்போவதுதான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்! என்று.
உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த தேர்தல் முடிவுகள் பற்றி ஊடகங்கள் தங்களது அலசல்களைப் பதிவுசெய்துள்ளன. பிபிசி தமிழ் ஊடகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் அவர்கள், ஒருவரை சுட்டு இருந்தால்கூட, அவரது ஆதரவாளர்கள், அவருக்கே வாக்களித்திருப்பார்கள். ஆனால் அவரின் ஆணவம் மற்றும், அவரின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை, அவரை நான்கு ஆண்டுகளுக்குமுன் ஆதரித்தவர்களைக்கூட, இந்த முறை ஆதரிக்கவிடாமல் செய்துவிட்டன. இந்த விடயம், குறிப்பாக, அமெரிக்க புறநகர் பகுதிகளில் நடந்து இருக்கின்றன.
விகடன் ஊடகம், தனது அலசலில் இவ்வாறு பதிவுசெய்துள்ளது. அதாவது, அமெரிக்காவை, அந்நாட்டினர் பார்க்கும்விதம் வேறு. அதேநேரம் உலகம், அமெரிக்காவை முதிர்ச்சியாகவும் பக்குவமாகவும் முடிவுகள் எடுக்கும் சனநாயக நாடாகப் பார்க்கிறது. இன்னொரு பக்கம் விஷம் தோய்ந்த கருத்துகளால் அமெரிக்கச் சமூகத்தையே பிளவுபடுத்தியவர், கொரோனாவை அலட்சியம் செய்து 2,35,000 அமெரிக்கர்கள் பலியாகக் காரணமாக இருந்தவர், வரலாறு காணாத அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படும் வகையில் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தியவர்... இப்படியெல்லாம், ட்ரம்ப் அவர்களை உலகம் பார்க்கிறது.
கோவிட்-19 பாடங்கள்
இந்த உலகத்திலிருந்து குறைந்தது போன்ற மாயையை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்கிருமி, இப்போது பல நாடுகளில் மீண்டும், இன்னும் வீரியமாக தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. அதேநேரம், இது சில பாடங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா, ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல், மூன்றாவது உலகப் போரில் வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் வெளிப்படையாய்க் காட்டிக்கொள்வதுபோன்று, கல்வியில் கற்றுத்தேர்ந்தவர்கள் அல்ல. உண்மையில் வறியோரைவிட, செல்வந்தர்களே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவானவர்கள். அருள்பணியாளர், கோவில் குருக்கள், ஜோதிடர்கள் போன்ற எவராலும், எந்த நோயாளியையும் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவ மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களே, விளையாட்டு வீரர்களைவிட அதிக மதிப்புமிக்கவர்கள். விலங்குகள், விலங்கியல் காட்சியங்களில் உணர்வதுபோலவே, மனிதர்களும், கோவிட்-19 கொள்ளைநோய் Quarantineல் உணர்கின்றனர். பூமிக்கோளம், மனிதரின் செயல்பாடின்றி விரைவில் மீண்டும் தானாக உற்பத்தி செய்கிறது. பதப்படுத்தப்பட உணவு இன்றி, நாம் அனைவருமே உயிர் வாழலாம். இவ்வாறு ஏறத்தாழ 12 பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது.
குப்பை வண்டி விதி
‘குப்பை வண்டி விதி’ பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கலாம். ஒரு சமயம், ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், பணி காரணமாக, வாடகை வாகனம் ஒன்றில், வேகமாக இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் இவர்களுக்கு முன்னாள் சென்ற வாகனம் ஒன்று, திரும்புவதற்கான அறிகுறி எதையுமே கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட, ஒரு கணம் நிலை தடுமாறிய, அந்த அதிகாரி சென்ற வாகனத்தின் ஓட்டுனர், சாமார்த்தியமாக, எவ்வித விபத்தும் இன்றி தனது வாகனத்தை நிறுத்தினார். ஆனால், அவருக்கு முன்னே சென்ற அந்த வாகனத்தின் ஓட்டுனர், திரும்பிப் பார்த்து, இந்த ஓட்டுனரை நா கூசும் வார்த்தைகளால் திட்டினார். அதற்கு வசை வார்த்தைகளால் பதிலடி கொடுக்காமல், ஏதோ நண்பரிடம் நடந்துகொள்வதுபோல், புன்னகையோடு கைகளை காட்டினார், வாடகை வாகன ஓட்டுனர். இதனை வியப்போடு கவனித்த அந்த அதிகாரியிடம், அந்த ஓட்டுனர், இவ்வாறு சொன்னார். ஐயா, இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கின்றனர். விரக்தி, ஏமாற்றம், கோபம், எரிச்சல் போன்ற, நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும் மனம் நிறைய வைத்திருக்கின்றனர். அந்த குப்பைகள் சேரச் சேர, அவற்றை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவைப்படுகின்றது. சில நேரங்களில் அவர்கள் அவற்றை என்னைப் போன்றவர்களிடம் இறக்கி வைப்பார்கள். அதை நாம் நமக்கென எடுத்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே அவர்களைப் பார்த்து, ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு, நாம் நம் வழியில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நம்மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்துகொண்டுபோய், நாம் பணிபுரியும் இடத்திலோ வீட்டிலோ, அல்லது, பொதுவில் மற்றவர்களிடமோ கொட்டக் கூடாது. அப்படிச் செய்தால் நமது பெயர்தான் கெட்டுவிடும் என்று, வாடகை கார் ஓட்டுனர் சொல்ல, அந்த அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்தார்.
ஆணவம், வெறுப்பு, கோபம் போன்ற குப்பை வண்டிகள் தலைகளை நிறைத்திருந்தால், வாழ்வில் மதிப்பும், வெற்றியும் பெறுவது கடினமே. அந்த வாடகை வாகன ஓட்டுனர் போன்று, நாமும், நம் மீது, யாராவது, எந்த இடத்திலாவது, காரணமின்றி எரிச்சல்பட்டாலோ, வன்சொற்களை வீசினாலோ, அல்லது கொடுமைகள் புரிந்தாலோ, பதிலடி கொடுக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுவதே நம் மனதிற்கு நிம்மதி தரும். மற்றவர் மனம் நிறையக் குவித்து வைத்திருக்கும் இத்தகைய குப்பைகள் நம்மீது கொட்டப்பட நம்மை ஒருபோதும் அனுமதிக்காதிருப்போம். அதேநேரம், நம்மைப் புரிந்து நடத்துகிறவர்களை நன்றியோடு நினைப்போம். அவ்வாறு நடத்தாதவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்.
No comments:
Post a Comment