Wednesday, 13 March 2019

வாழ்விடத்தைத் தூய்மையாக்குவோம்

வாழ்விடத்தைத் தூய்மையாக்குவோம் நைரோபி மறுசுழற்சி தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள்

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி, காகிதம் மற்றும் சணல் பைகளைத் தீவிரமாக தயாரித்து வருகின்றனர்
மேரி தெரேசா - வத்திக்கான்
ஆப்ரிக்காவின் கென்யா நாட்டில், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசுகேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், அராபிய பாரம்பரிய முக்கோண பாய்மரப் படகு (dhow) ஒன்று, மறுசுழற்சி செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருள்களாலே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படகு FlipFlopi எனப்படுகிறது. முப்பதாயிரம் flip-flop பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து பல வண்ணங்களில் அமைக்கப்பட்டதால், இதற்கு flip-flopi என்ற பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சனவரி 23ம் தேதி கென்யா நாட்டு Lamu தீவிலிருந்து, இந்தப் படகுப் பயணம் தொடங்கியது.  பிப்ரவரி 7ம் தேதி, டான்சானியா நாட்டு ஜான்சிபார் தீவில் முடிவுற்றது. ஐந்நூறு கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பயணத்தை இந்தப் படகு மேற்கொண்டது. அடுத்த Flipflopi படகுப் பயணம், கென்யத் தலைநகர் நைரோபிக்கு மேற்கொள்ளவிருக்கிறது. ஏனெனில் அந்நகரில்தான், மார்ச் 11 இத்திங்களன்று, ஐ.நா.வின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் உலக மாநாடு தொடங்குகின்றது. இம்மாநாடு, மார்ச் 15, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இம்மாநாட்டில், நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புதிய சிந்தனையாளர்கள், அரசு-சாரார அமைப்பினர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் போன்றோர் கலந்துகொள்கின்றனர். ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, கென்யாவில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. 2017ம் ஆண்டு ஆகஸ்டில், கென்யா, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டத்தையும் மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவோர்க்கு நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது நாற்பதாயிரம் கென்ய ஷில்லிங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. கென்ய அரசு, இந்நடவடிக்கை வழியாக, உலக அளவில், பிளாஸ்டிக் மாசுகேட்டைக் குறைக்கும் முயற்சியில் முன்னணியில் நிற்க விரும்புகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 
பெருங்கடல்களில் பிளாஸ்டிக் பொருள்கள்
உலகில் பிளாஸ்டிக் பொருள்கள், 1907ம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டன. இந்தத் தொழிலின் அதிவேக வளர்ச்சியை, 1950ம் ஆண்டு வரை எவரும் கண்டுகொள்ளவில்லை. 1950ம் ஆண்டில், ஆண்டுக்கு இருபது இலட்சம் டன்கள் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அதற்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும், அந்த உற்பத்தி ஏறக்குறைய இருநூறு மடங்காக அதிகரித்து, 2015ம் ஆண்டில், அந்த உற்பத்தியின் அளவு, 38 கோடியே பத்து இலட்சம் டன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தது. இந்நிலை, உலகின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதிக்குச் சமமாக இருந்தது.  2008ம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற நிதி நெருக்கடி காரணமாக, 2009ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த உற்பத்தி கொஞ்சம் மந்தமாக இருந்தது.
பெருங்கடல்களில் சேர்ந்துள்ள குப்பைக்கூளங்களில் எண்பது விழுக்காடு பிளாஸ்டிக் பொருள்களாகும். ஒவ்வோர் ஆண்டும் எண்பது இலட்சம் டன்களுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் பெருங்கடல்களில் குவிகின்றன. இவை, கடல்சார்ந்த சுற்றுச்சூழவியலுக்கு குறைந்தது 800 கோடி டாலர் இழப்பை உண்டுபண்ணுகிறது. ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு 2017ம் ஆண்டில், கடல்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியது. 2022ம் ஆண்டுக்குள், பெருங்கடல்களைச் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. முயற்சித்து வருகிறது. அதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஐந்து கோடி டன்கள் எலெக்ட்ரானிக் கழிவுகள் குப்பைகளில் கொட்டப்படுகின்றன என ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்தியாவில் பிளாஸ்டிக் மாசுகேடு
இந்தியாவின் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் நாளொன்றிற்கு ஏறக்குறைய 15 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு, பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2011ம் ஆண்டு முதல் அமலில் இருந்தாலும், மாநிலங்களால் அதனை முழுமையாகச் செயல்படுத்த இயலவில்லை. மேலும், எழுபது விழுக்காடு பிளாஸ்டிக் பொருள்கள், மறுபடியும் பயன்படுத்தப்பட முடியாமல் தூக்கி எறியப்படுகின்றன. மாசுகேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில், ஐம்பது விழுக்காட்டிற்கு அதிகமாக, பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் புட்டிகள் போன்றவை உள்ளன. பிளாஸ்டிக் பொருள்கள், நீண்ட காலம் அழியாமல் இருப்பதாலும், அவற்றின் பல்வகை பயன்களினாலும், நீர் உறிஞ்சாத் தன்மையாலும், இலகுவாகத் தயாரிக்க முடிவதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், மக்கள், இயற்கை பொருள்களைத் தவிர்த்து முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்புவியின் சுற்றுச்சூழல் மாசுகேட்டைப் பெரிதும் அச்சுறுத்தும் பொருள்களில் பிளாஸ்டிக் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்வுலகில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஞ்சள் பைகளைக் கிண்டல் செய்த தாலே, பிளாஸ்டிக் பயன்பாடு வந்தது என, ஒருவர் வாட்சப்பில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை
தமிழகத்தில், 2019ம் ஆண்டு, சனவரி, முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தொலைதூர கிராமங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர். இம்முயற்சி பற்றித் தெரிவித்த, சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன் அவர்கள், கிராமங்களில் அமைக்கப்படும் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும், மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 2,000 முதல் 2,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும், தேசிய நெடுஞ்சாலைகளில் 4,000 கிலோ முதல் 8,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும் பயன்படுத்த முடியும் என்று சொல்லியுள்ளார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையால், சில இடங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட மக்கள், பனை ஓலைகளில் செய்யப்படும் பொருள்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் கறிக் கடை முதல், காய்கறி கடை வரை மக்கள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பனை ஓலைப் பொருள்கள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்கள் பிபிசி தமிழ் ஊடகத்திடம் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2500 ஏக்கரில் ஏறக்குறைய ஒரு கோடியே 80 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பொதுவாகவே தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரை மட்டுமே பனை வெல்லம் தயாரிக்கும் பனைத் தொழில் இருக்கும். அதன் பிறகு மீதி உள்ள ஆறு மாத காலங்களுக்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகளை வெட்டி, காயவைத்து அதன் மூலம் பாய்கள், விசிறிகள், கூடைகள், பைகள், கொட்டான்கள் போன்ற பனை ஓலைகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை வந்தபிறகு, பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு பனை ஒலைகளால் நவீன தொழில்நுட்ப முறையில், கைவினைப் பொருள்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகின்றது. சுய உதவி குழுக்கள் மூலமாக மூவாயிரம் பெண்கள் பனை ஓலைகளைக் கொண்டு கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளில் பொருள்கள் வாங்கினால் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பனை ஓலைகளில் மீன்கள் வாங்கினால் அவை சீக்கிரம் கெட்டு போகாது என, மக்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் என, மீனவர்கள் சொல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி, காகிதம் மற்றும் சணல் பைகளைத் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு, பை தைத்து கொடுப்பது, வண்ண அச்சுகளைப் பொறிப்பது போன்ற வேலைகள் கிடைத்துள்ளன.
நார்வேயில் பிளாஸ்டிக்
நார்வே நாடு பிளாஸ்டிக் பிரச்சனைக்குத் தீர்வாக, வேறொரு முறையைக் கையாள்கிறது. அந்நாட்டில், 2016ம் ஆண்டில் அறுபது கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன. அது மொத்த பயன்பாட்டில் 97 விழுக்காடாகும். பெரும்பாலும் காலி பாட்டில்கள் தெருவிலோ குப்பையிலோ வீசப்படும். ஆனால் நார்வேயில் அவற்றை கடைகளே திருப்பி வாங்கிக் கொள்கின்றன. ஒரு பாட்டில் சோடா வாங்கினால், ஒரு கிரோன் பணம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அதைத் திருப்பி ஒப்படைத்தால் அந்தப் பணம் மீண்டும் திருப்பி கிடைக்கும். இந்த திட்டத்தால் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதற்கான தேவை குறைந்துள்ளது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை 12 முறை மறுசுழற்சி செய்யலாம். நிறமற்ற மற்றும் நிறமுள்ள புட்டிகளைப் பிரித்தெடுத்து, நிறமற்ற புட்டில்களிலிருந்து புதிய புட்டிகளைத் தயார் செய்கின்றனர். இந்த நடவடிக்கையில் குளிர்பான நிறுவனங்கள் கலந்துகொண்டால்,  அவர்களுக்கு வரி குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடற்ற சுதந்திரமும், சுதந்திரமில்லாத கட்டுப்பாடும் உருப்படாது என்று ஒரு சமூக ஆர்வலர் சொன்னார். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தூய்மையான ஒரு நாடோ, மாநிலமோ, நகரமோ உருவாக வேண்டுமென்றால், அதில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குப்பைகளை, கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வது என்பதை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மைகொண்ட பொருள்களைப் பயன்படுத்துவோம். நாம் குடியிருக்கும் வீட்டை, நாம் வாழ்கின்ற தெருவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். சமுதாய உணர்வுடன் நம் வாழ்விடங்களைத் தூய்மையாக்குவோம். சொல்வது யாருக்கும் எளிது. எனவே நாம் செயல்வீரர்களாக விளங்குவோம்

No comments:

Post a Comment