Thursday, 8 January 2015

செய்திகள் - 07.01.15

---------செய்திகள் -  07.01.15---------

1. எபோலா நோயாளியைக் குணப்படுத்திய இத்தாலிய மருத்துவர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

2. திருத்தந்தை - லெபனானில் அமைதிப் பணியாற்றும் இத்தாலிய படைவீரர்களுக்கு வாழ்த்துச் செய்தி

3. மியான்மார் புதிய கர்தினால் சமய சகிப்புத்தன்மைக்கு அழைப்பு

4. இறையியலாளர் அருள்பணி இராயன் அவர்களுக்குப் பாராட்டு

5. மத்திய தரைக் கடலில் குடியேற்றதாரரைக் கைவிடும் கப்பல்கள் அதிகரிப்பு

6. கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கு இஸ்லாமியத் தீவிரவாதம் முக்கிய காரணம்

7. நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன

8. பூமியைப் போன்ற எட்டு கோளங்கள் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. எபோலா நோயாளியைக் குணப்படுத்திய இத்தாலிய மருத்துவர்களுக்கு திருத்தந்தை பாராட்டு

சன.07,2015. எபோலா உயிர்க்கொல்லி நோய்த் தாக்கிய நோயாளி ஒருவரை இத்தாலிய நலவாழ்வுப் பணியாளர்கள் குணமாக்கியதைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எபோலா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சியெரா லியோன் நாட்டில் அந்நோயாளிகள் மத்தியில் பணிசெய்தபோது அந்நோயால் தாக்கப்பட்ட நேப்பிள்ஸ் மருத்துவர் Fabrizio Pulvirenti அவர்களுக்கு, உரோம் Lazzaro Spalanzani மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, அவர் குணமடைந்துள்ளார்.
இத்தாலிய மருத்துவர்களின் இப்பணியை முன்னிட்டு இத்தாலிய நலவாழ்வு அமைச்சர் Beatrice Lorenzin அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
மருத்துவர் Pulvirenti அவர்களுக்கு ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்று Lazzaro மருத்துவமனை கடந்த வெள்ளியன்று அறிவித்தது. மேலும், இந்நோயாளியின் இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட நிணநீர் பிற நோயாளிகளைக் குணமாக்குவதற்கு உதவும் என்றும் அம்மருத்துவமனை அறிவித்தது.
2013ம் ஆண்டில் எபோலா நோய்த் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7905 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை - லெபனானில் அமைதிப் பணியாற்றும் இத்தாலிய படைவீரர்களுக்கு வாழ்த்துச் செய்தி

சன.07,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாக்கும் இராணுவ அமைப்பின்கீழ், லெபனான் நாட்டில் பணியாற்றும் இத்தாலிய படைவீரர்களை ஊக்கப்படுத்தி தனது ஆசீரை வழங்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருகாட்சிப் பெருவிழாவான இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தி பற்றிக் கூறிய இத்தாலிய இராணுவத்தின் ஆன்மீக வழிகாட்டி ஆயர் Santo Marciano அவர்கள், இராணுவம் ஆற்றிவரும் பணிகளுக்குத் திருஅவை பரிவோடு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறினார்.
திருஅவை அமைதியைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அமைதி என்ற கடவுளின் கொடையைப் பெறுவதற்காக இடைவிடாமல் செபிக்க வேண்டும் என்று திருத்தந்தை தொடர்ந்து கூறி வருவதைச் சுட்டிக் காட்டினார் ஆயர் Marciano.
இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவைத் துண்டு துண்டாக்கியது என்றும், மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டைகள் நம் அனைவரையும் அமைதி குறித்து சிந்திக்க வைத்துள்ளன என்றும் திருத்தந்தை அடிக்கடி கூறிவருவதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் Marciano.
லெபனானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பணியாற்றி வரும் UNIFIL என்ற ஐ.நா. அமைதிப் பணி அமைப்பில், இத்தாலியப் படைவீரர்கள் அதிகம் உள்ளனர் என்றும்  ஆயர் Santo Marciano அவர்கள் கூறினார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மியான்மார் புதிய கர்தினால் சமய சகிப்புத்தன்மைக்கு அழைப்பு

சன.07,2015. மியான்மாரில் இடம்பெறும் வகுப்புவாத வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார், கர்தினாலாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டுப் பேராயர் Charles Maung Bo.
இம்மாதம் 4ம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில் ஒருவராகிய யாங்கூன் பேராயர் Charles Bo அவர்கள், அந்நாட்டில் சமய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தமதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில், குறிப்பாக, Rakhine மற்றும் Kachin மாநிலங்களில் அண்மை ஆண்டுகளில் வகுப்புவாதப் பதட்டநிலைகள் அதிகம் காணப்படும்வேளை, அந்நாட்டில் சமய சகிப்புத்தன்மை காக்கப்படுவதற்கு உழைக்கவிருப்பதாக பேராயர் Charles Bo அவர்கள், கூறினார்.
மியான்மாரில் வாழும் ஏறக்குறைய எட்டு இலட்சம் ரோகின்யா இனத்தவர்,  உலகில் அதிகமாக நசுக்கப்படும் சிறுபான்மை இனத்தவரில் ஓர் இனமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் கொண்ட கச்சின் மாநிலத்தில் 17 ஆண்டுகள் இடம்பெற்ற மோதல்களில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : AFP                             

4. இறையியலாளர் அருள்பணி இராயன் அவர்களுக்குப் பாராட்டு

சன.07,2015. இந்தியாவின் புகழ்பெற்ற இறையியலாளர், இயேசு சபை அருள்பணி சாமுவேல் இராயன் அவர்களைக் கவுரவிக்கும் விதமாக, நான்கு நாள் தேசியக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளனர் இந்திய இறையியலாளர்கள்.
கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில், 94 வயது நிரம்பிய அருள்பணி இராயன் அவர்களைப் பாராட்டிப் பேசிய, கேரள இயேசு சபை மாநில அதிபர் அருள்பணி M.K. George அவர்கள், அருள்பணி இராயன் அவர்கள் சிந்தனையாளர் மற்றும் படைப்புத்திறன்மிக்க கவிஞர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், இக்கருத்தரங்கில் பேசிய தெற்காசிய இயேசு சபை அதிபர் அருள்பணி George Pattery அவர்கள், அருள்பணி இராயன் அவர்களின் எழுத்துக்கள் உண்மையிலேயே இறைவாக்குப் பண்பு கொண்டவை மற்றும் படைப்புத்திறன் மிக்கவை எனப் பாராட்டினார்.
கேரளாவின் கும்பளம் என்ற ஊரில் 1920ம் ஆண்டு பிறந்த அருள்பணி இராயன் அவர்கள், 1939ம் ஆண்டில் இயேசு சபையில் சேர்ந்தார். 1971ம் ஆண்டில் டில்லி வித்யஜோதி இயேசு சபை இறையியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். 94 வயது நிரம்பிய இவர் தற்போது காலடி எனுமிடத்தில் வாழ்ந்து வருகிறார்.
அருள்பணி இராயன் அவர்கள், பல்வேறு பன்னாட்டு கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உரையாற்றி இருக்கிறார். இவரது எழுத்துக்கள் எப்போதும் ஒருவித புதிய கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பவை.

ஆதாரம் : UCAN                         

5. மத்திய தரைக் கடலில் குடியேற்றதாரரைக் கைவிடும் கப்பல்கள் அதிகரிப்பு

சன.07,2015. ஐரோப்பாவில் நுழைய முயற்சிக்கும் குடியேற்றதாரரை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்து அக்கப்பல் ஓட்டுனர்கள் அவற்றை மத்திய தரைக் கடலில் கைவிடும் புதிய பழக்கம் அதிகரித்து வருவது, கவலை தருகிறதென்று, அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனமான IOM தெரிவித்தது.
இவ்வாறு கடலில் கைவிடப்படும் குடியேற்றதாரரில் பலர், சிரியாவில் இடம்பெறும் சண்டையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அப்பாவி மக்கள் என்றும், மற்றவர்கள் லிபியாவிலிருந்தும், வேறுபல நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்றும் IOM நிறுவனம் கூறியது.
இவ்வாறு ஓட்டுனர்களால் கைவிடப்படும் கப்பல்கள், மாயக் கப்பல்கள் என்ற புனைப்பெயரையும் பெற்றுள்ளன.
கடந்த சில வாரங்களில் இத்தகைய இரண்டு மாயக் கப்பல்கள் இத்தாலியக் கடற்கரையை வந்தடைந்துள்ளன. Blue Sky M என்ற கப்பலில் 736 குடியேற்றதாரரும், Ezadeen என்ற கப்பலில் 359 குடியேற்றதாரரும் இருந்தனர்.
2014ம் ஆண்டில் 11 மாதங்களில் 1,63,368 குடியேற்றதாரரை இத்தாலிய அரசு, கடலில் மீட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, 2013ம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கு இஸ்லாமியத் தீவிரவாதம் முக்கிய காரணம்

சன.07,2015. உலகில் கடந்த ஆண்டில், கிறிஸ்தவர்களை நசுக்கியவர்களில் முக்கியமானவர்களாக, முஸ்லிம் தீவிரவாதிகள் இருந்தனர் என்றும், மத்திய கிழக்குப் பகுதியில் மட்டுமின்றி, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் துன்புற்றனர் என்றும், உலகில் மத சுதந்திரம் குறித்து ஆய்வு நடத்திய ஓர் அமைப்பு இப்புதனன்று கூறியது.
உலக அளவில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் Open Doors    என்ற பன்னாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இவ்வாறு தெரிய வந்துள்ளது.
கிறிஸ்தவர்கள் தங்களின் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு அதிகமாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முக்கிய இருபது நாடுளில், பதினெட்டு நாடுகளில்  இஸ்லாமியத் தீவிரவாதம் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது என அவ்வறிக்கை கூறுகிறது.
ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகள் நடத்தும் அடக்குமுறையால், மத்திய கிழக்கிலிருந்து வெளியேறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் அதிகரித்திருந்தது என, இவ்வமைப்பு கூறுகிறது.
நைஜீரியாவில் 2,484 கிறிஸ்தவர்களும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 1,088  கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறும் Open Doors அமைப்பு, கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்கூட பாகுபாடு, ஒதுக்கப்படல் மற்றும் வன்முறையை கிறிஸ்தவர்கள் எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.
அச்சுறுத்தலுக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் என்று பார்க்கையில், பன்னிரண்டில் எட்டு பேர் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள்தான் என்றும், கிறிஸ்தவர்கள் அதிகப் பிரச்சனைகளைச் சந்திக்கக்கூடிய நாடு என்றால், அது தொடர்ந்து, வடகொரியாதான் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Reuters

7. நைஜீரியாவில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன

சன.07,2015. மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ஏறக்குறைய 200 கிறிஸ்தவ ஆலயங்கள் போகோ ஹாரம் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவால் அழிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் Borno, Adamawa ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் நகரங்களும் கிராமங்களும் போகோ ஹாரம் குழுவின் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இம்மாநிலங்களில் 185 ஆலயங்களுக்கு நெருப்பு வைக்கப்பட்டுள்ளன மற்றும் 1,90,000த்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இச்செயல்கள் குறித்து கவலை தெரிவித்த அந்நாட்டின் Maiduguri மறைமாவட்டத்தின் கத்தோலிக்க சமூகத் தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி Gideon Obasogie அவர்கள், இது நாட்டின் ஒருமைப்பாட்டையும் பொதுநலனையும் பாதிக்கின்றது என்று கூறினார். 
நைஜீரியாவில் போகோ ஹாரம் இஸ்லாமியக் குழுவால் 2012ம் ஆண்டில் 900 கிறிஸ்தவர்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர், மற்றும், எண்ணிக்கையற்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டன.

ஆதாரம் : Agencies

8. பூமியைப் போன்ற எட்டு கோளங்கள் கண்டுபிடிப்பு

சன.07,2015. பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோளங்களைத் அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நாசா நிறுவனத்தின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு, இக்கோளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோளங்களில், பூமியைப் போலவே பாறைகள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், நீர் நிரம்பிய கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய பிற விடயங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்தக் கோளங்கள் பூமியைவிட இரண்டு மடங்குக்கும் மேல் குறைவான அளவுள்ளவை, அவை மிக அதிக வெப்பமோ அல்லது மிகக் குளிரான வெப்பநிலையோ இல்லாதவை என்று அறிவியலாளர்கள் கூறினர்.
ஆனால் இந்த கோளங்களில் ஏதாவது ஒன்றாவது வாழ்வதற்குரிய இடமாக இருக்குமா என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. இவை நம்பிக்கையளிக்கும் இடங்கள் என்று மட்டும் கூறினர்.
ஆனாலும், இந்த கோளங்களுக்கு மனிதர்களால் விரைவில் சென்றுவிட முடியாது. ஏனென்றால் அவை பல நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன.
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மையத்தைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தங்களின் இந்த முடிவுகளை வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

ஆதாரம் : BBC                             

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...