Wednesday 14 January 2015

செய்திகள் - 12.01.15

செய்திகள் - 12.01.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பயங்கரவாதம், கடவுளையும், மனிதரையும் புறக்கணிக்கின்றது

2. திருத்தந்தை - இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களுக்காக என்னுடன் இணைந்து செபியுங்கள்

3. திருத்தந்தை சமுதாயத்தில் நலிந்தோரில் இயேசுவின் முகத்தைக் கண்டுகொள்வோம் 

4. 33 குழந்தைகளுக்குத் திருத்தந்தை திருமுழுக்கு, இறைவார்த்தை விசுவாசத்தில் வளர உதவுகின்றது

5. கர்தினால் கிரேசியஸ் - சமயத் தீவிரவாதம் மத உணர்வைச் சிதைக்கின்றது

6. தீவிரவாதத்துக்கு எதிரான பேரணிக்கு பான் கீ மூன் வரவேற்பு

7. மகாத்மா காந்தியின் அரசியல், ஆன்மீகக் கொள்கைகளை ஐ.நா. கடைப்பிடிக்கும்

8. இந்தியாவில் காச நோய் கட்டுப்பாடு வேகம் போதாது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பயங்கரவாதம், கடவுளையும், மனிதரையும் புறக்கணிக்கின்றது

சன.12,2015. பாரிஸ் படுகொலைகள், மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் சண்டைகள் போன்றவற்றைத் தூண்டும் சமய அடிப்படைவாதப் போக்கைக் கண்டித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேவேளை, இப்படுகொலைத் தாக்குதல்களை நடத்துபவர்கள், பொது மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்வதற்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தும் சமயத்தின் மாறுபட்ட வடிவங்களுக்கு அடிமைகளாக உள்ளார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருப்பீடத்துக்கான அரசியல் தூதர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை, அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் ஒரேமனதுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய வன்முறைகளை நியாயப்படுத்துவதற்கு தங்களின் விசுவாசத்தை விளக்கமளிக்கும் பயங்கரவாதிகளை முஸ்லிம் தலைவர்கள் கண்டிக்குமாறும்  கேட்டுள்ள திருத்தந்தை, இத்தாக்குதல்கள் புறக்கணிக்கும் கலாச்சாரத்தின் விளைவே  என்றும், இக்கலாச்சாரத்தில் மனிதர்களும், ஏன், கடவுளும்கூட ஒரேயடியாகப் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறினார்.
இரண்டாம் உலகப்போரின் சொல்லமுடியாதப் பாதிப்புக்களின் பயனாக, நாடுகள் மத்தியில் உரையாடலையும் சந்திப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவானதையும், இந்நிறுவனம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் நினைவுகூரப்படுவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகில் அமைதி ஏற்படுமாறும், அமைதி, மனமாற்றத்தின் கனியே என்றும் கூறினார் திருத்தந்தை.
இளையோர் பற்றிப் பேசும்போது கடந்த ஆகஸ்டில் நான் மேற்கொண்ட எனது கொரியப் பயணத்தைக் குறிப்பிட விரும்புகிறேன், கொரியாவில் ஆறாவது ஆசிய இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளையோரைச் சந்தித்தபோது, நம் இளையோர் என்ற சொத்துக்களைப் பாதுகாக்கவேண்டிய தேவை பற்றியும் குறிப்பிட்டேன், இந்தப் பெரிய ஆசியக் கண்டத்தின் மக்கள்மீது நான் கொண்டிருக்கும் ஆர்வத்தால் இன்று மாலை மீண்டும் ஆசியாவுக்குப் புறப்படுகிறேன், இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ்க்குச் செல்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை.
மேலும், குடும்பம், குடியேற்றதாரர், அமெரிக்க ஐக்கிய நாடு-கியூபா உரையாடல், எபோலா நோயாளிகள், நவீன அடிமைமுறைகள், உக்ரேய்ன் பிரச்சனை என பல தலைப்புகளில் நீண்ட உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போது திருப்பீடம் 180 நாடுகளுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ளது. மேலும் இது, 7 ஐ.நா. நிறுவனங்களில் நிரந்தரப் பார்வையாளராகவும் உள்ளது. 

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை - இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களுக்காக என்னுடன் இணைந்து செபியுங்கள்

சன.12,2015. இலங்கை மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு நான் பயணத்தைத் துவக்கும் நாளன்று, இந்நாடுகளில் உள்ள மக்களுக்காக என்னுடன் இணைந்து செபிக்குமாறு உங்களைக் கேட்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டரில் இத்திங்களன்று எழுதியுள்ளார்.
இத்திங்கள் உரோம் நேரம் இரவு 7 மணிக்கு ஆல் இத்தாலியா A 320 விமானத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்புவுக்குப் புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
7630 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணி 40 நிமிடங்கள் பயணம் செய்து இச்செவ்வாய் காலை 9 மணிக்கு கொழும்பு சென்றடையும் திருத்தந்தை, கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பில் பங்கெடுத்தல், புதிய அரசுத்தலைவர் சந்திப்பு, பல்சமயத் தலைவர்கள் சந்திப்பு, முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவித்தல், மடு அன்னை திருத்தலம் செல்லல் என பல முக்கிய நிகழ்வுகளை நிறைவேற்றுகிறார்.
வருகிற வியாழன் காலை இலங்கையிலிருந்து பிலிப்பீன்ஸ் சென்று அங்கு திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து இம்மாதம் 19ம் தேதி காலை 10 மணிக்கு மனிலாவிலிருந்து உரோம் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். 
24 ஆயிரம் பேர் திருத்தந்தையின் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை சமுதாயத்தில் நலிந்தோரில் இயேசுவின் முகத்தைக் கண்டுகொள்வோம் 

சன.12,2015. இத்திங்கள் இரவு 7 மணிக்கு இலங்கைக்கும் பிலிப்பீன்ஸ்க்கும் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணத்திற்காகச் செபிக்குமாறு அனைவரையும் இஞ்ஞாயிறன்று கேட்டுள்ளார்.
இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்களது செபத்தால் என்னோடு பயணம் செய்யுங்கள் என்றும், உரோமையிலுள்ள இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் மக்களும் எனக்காகச் செபியுங்கள் என்றும் கூறினார்.
மழை பெய்ந்துகொண்டிருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் மூவேளை செப உரையைக் கேட்டு ஆசீர் பெறுவதற்காக நின்றுகொண்டிருந்த நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளிடம், இயேசுவின் திருமுழுக்கு விழா பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.
இன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருமுழுக்கோடு "மூடிய வானங்களின்" நேரம், அதாவது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் பிரிவு முடிந்துவிட்டது, மனிதர் மத்தியில் கடவுள் குடியிருக்கும் இடமாக இந்தப் பூமி மாறிவிட்டது என்று கூறினார் திருத்தந்தை.
நாம் ஒவ்வொருவரும் இறைமகனின் அன்பையும், அவரின் எல்லையில்லா கருணையையும் அனுபவித்து அவரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெறுகிறோம், அவரை அருளடையாளங்களில், நம் சகோதர சகோதரிகளில், குறிப்பாக, ஏழைகள், நோயாளிகள், கைதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரில் அவரின் முகத்தைக் கண்டுகொள்ள முடியும், அவர்களே, துன்புறும் கிறிஸ்துவின் உயிருள்ள சதை மற்றும் காணக்கூடாத கடவுளின் காணக்கூடிய சாயல் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் திருமுழுக்கோடு வானங்கள் மட்டும் திறக்கவில்லை, ஆனால் திருமுழுக்குப் பெற்ற இறைமனிதரில் குடியிருக்கும் பேருண்மையை கடவுளின் குரல் அறிவித்தது, மனிதனாகப் பிறந்த இறைமகனான இயேசுவே இறைவார்த்தை என்பதை தந்தையாம் கடவுள் உலகுக்குச் சொல்ல விரும்பினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த இறைவார்த்தையை உற்றுக்கேட்டு, அவரைப் பின்பற்றி அவருக்குச் சாட்சியாக வாழ்வதால் மட்டுமே, நம் திருமுழுக்கு நாளில் நம்மில் வைக்கப்பட்ட விதையெனும்  நம் விசுவாச அனுபவத்தை முழுவதும் பயனுள்ளதாக ஆக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

4. 33 குழந்தைகளுக்குத் திருத்தந்தை திருமுழுக்கு, இறைவார்த்தை விசுவாசத்தில் வளர உதவுகின்றது

சன.12,2015. இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 20 ஆண் மற்றும் 13 பெண் குழந்தைகள் என 33 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு வழியாக நாம் திருஅவையின் அங்கங்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறுகின்றோம் என்று கூறினார்.
திருஅவை என்ற உடலில், இம்மக்களின் பயணத்தில் விசுவாசம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்படுகிறது, இதுவே திருஅவையின் விசுவாசம், விசுவாச மெழுகுதிரியை ஒரு கையிலிருந்து அடுத்த கைக்குக் கொடுப்பது எத்துணை அழகு என்றும் கூறினார் திருத்தந்தை.
தாய்மார்க்காகச் செபிப்போம், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க இயலா நிலையில் நிறையத் தாய்மார் உள்ளனர் என்றும், இந்தத் தாய்மார்க்காகச் செபித்து அவர்களுக்கு உதவுவோம் என்றும் கூறிய திருத்தந்தை, இந்தக் குழந்தைகள் மூவொரு கடவுள் சூழலில் குடும்பங்களில் வாழ்வதற்குத் தூய ஆவியாரிடம் செபிப்பது முக்கியமானது என்றும் கூறினார்.
அன்புப் பெற்றோர்களே, ஞானப் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நன்றாக வளர்வதற்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக மாற நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியாகிய கடவுளின் வார்த்தையைக் கொடுங்கள், அவர்கள் தூய ஆவியில் வளர உதவுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
நல்ல தாய் தந்தை போன்று கடவுளும் தம் பிள்ளைகளுக்கு நல்ல பொருள்களைக் கொடுக்க விரும்புகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

5. கர்தினால் கிரேசியஸ் - சமயத் தீவிரவாதம் மத உணர்வைச் சிதைக்கின்றது

சன.12,2015. சமயத் தீவிரவாதிகள் மத உணர்வைச் சிதைக்கின்றனர் மற்றும் பயங்கரமானக் குற்றங்களைச் செய்வதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர் என்று இந்தியத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
ப்ரெஞ்ச் சார்லி ஹெப்டோ நையாண்டி வார இதழ் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிராகத் தனது கண்டனத்தை வெளியிட்ட மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று வத்திக்கான் வானொலியில் கூறினார்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 2008ம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டு, தங்களின் வன்முறையை நியாயப்படுத்த கடவுளைப் பயன்படுத்தும் ஆபத்தான சமய அடிப்படைவாதத்திற்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்றும் கூறினார்.
நாம் எப்போதும் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், அதேநேரம், ஒரு மத நம்பிக்கையாளர் குழுவில் அதன் உறுப்பினர்கள்மீது முற்சார்பு எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆபத்துக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. தீவிரவாதத்துக்கு எதிரான பேரணிக்கு பான் கீ மூன் வரவேற்பு

சன.12,2015. இஞ்ஞாயிறன்று பாரிசில் 56 உலகத் தலைவர்கள் உட்பட ஏறக்குறைய 36 இலட்சம் பேர் கலந்துகொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணிக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த புதனன்று பாரீசில் சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியை தான் வரவேற்பதாகவும், உலகில் தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதற்கெதிரான எதிர்ப்பை பதிவுசெய்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளார் பான் கீ மூன்.
இஞ்ஞாயிறன்று நடைபெற்ற மாபெரும் பேரணி, பிரான்சின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பேரணி என்று ப்ரெஞ்ச் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாரீசில் பத்திரிகை அலுவலகத்திலும், கொஷார் சூப்பர்மார்க்கெட்டிலும் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அங்கு கொல்லப்பட்ட ஒரு காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்து பாரீசில் ஞாயிறன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். 
இப்பேரணியில் பான் கீ மூன் அவர்கள் சார்பாக தனது சிறப்புத் தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்தூராவை அனுப்பி, செய்தி ஒன்றையும் வைத்திருந்தார் பான் கி மூன்.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி                           

7. மகாத்மா காந்தியின் அரசியல், ஆன்மீகக் கொள்கைகளை ஐ.நா. கடைப்பிடிக்கும்

சன.12,2015. இவ்வுலகில் வளர்ந்துவரும் தீவிரவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகியவை, மகாத்மா காந்தியின் அரசியல் மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
"7-வது எழுச்சிமிகு குஜராத்' உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்றிருக்கும் பான்-கி-மூன் அவர்கள் இஞ்ஞாயிறன்று புதுடெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது,  சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், அனைவருக்கும் மாண்பையும் நீதியையும் உறுதி செய்யவும் ஐ.நா. தன்னைத் தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்றும் உறுதியளித்தார்.
இந்த மாநாடு குஜராத் தலைநகர் காந்தி நகரில் இஞ்ஞாயிறன்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் பான்-கி-மூன்.
அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் அவர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தையும் பார்வையிடுகிறார். இதனைத்தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் பான்-கி-மூன் சந்தித்துப் பேசுகிறார் என்றார் வினோத் ராவ்.
இதற்கிடையே, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் திறந்து வைப்பார் என அந்த மாநில மின்துறை அமைச்சர் சௌரவ் படேல் தெரிவித்தார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி

8. இந்தியாவில் காச நோய் கட்டுப்பாடு வேகம் போதாது

சன.12,2015. இந்தியாவில் காச நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக நலவாழ்வு அமைப்பின் இலக்கை எட்டுவதற்கு இந்த வேகம் போதாது என அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி நதா மெனப்தே அவர்கள், வரும் 2050-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானால் இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 விழுக்காட்டு அளவுக்கு இந்த நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது ஆண்டுக்கு வெறும் 2 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்று கூறினார்.
எனினும், இப்போதுள்ள செயல்திட்டம் மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்தினாலே வரும் 2025-ம் ஆண்டுக்குள் காச நோய்க் கட்டுப்பாட்டை 10 விழுக்காடாக அதிகரிக்க முடியும். மேலும், காசநோய்க் கட்டுப்பாட்டு வேகத்தை அதிகரிக்க புதிய செயல்திறன் மிக்க தடுப்பு மருந்துகள், தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான புதிய உத்திகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் கூறினார் நதா மெனப்தே .
அதேநேரம், ஊட்டச்சத்து குறைபாடு, குடிசைப் பகுதிகளில் மக்கள் நெருக்கம், காற்றோட்ட வசதி இல்லாதது, புகைப்பழக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டியது அவசியம். நகர்ப்புற காச நோயாளிகளில் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் திருப்திகரமாக இல்லை. கடுமையான விதிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment