Sunday 11 January 2015

செய்திகள் - 10.01.15

செய்திகள் - 10.01.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - திருஅவையின் செயல்களில் மனிதர் மையப்படுத்தப்படுகின்றார்

2. ஆண்டவரின் நாளில் ஆண்டவரோடு இருப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்போம்

3. நல்லிணக்கச் சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதில் மதங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது

4. ஐரோப்பிய விசுவாசக் கோட்பாட்டுப் ஆணையங்களின் கூட்டம்

5. திருத்தந்தையின் இலங்கை திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் அடையாளம்

6. போக்கோ ஹாரம் குழுவின் அண்மைத் தாக்குதல்களில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு

7. குடியேற்றதாரரை வெளியேற்றுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான நிலையை கண்டறிய வேண்டும்

8. ஈராக்கில் ஈராயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் விசுவாசம் எளிதாக மறைந்துவிடாது

9. உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரையில் வெளியீடு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - திருஅவையின் செயல்களில் மனிதர் மையப்படுத்தப்படுகின்றார்

சன.10,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றபோதிலும், இன்னும் நிறையப் பணிகள் ஆற்ற வேண்டியிருக்கின்றன என்பதை நாம் புறக்கணிக்கக் கூடாது என்று இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று கூட்டம் நடத்திய 100 பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மனிதர், திருஅவை ஒன்றிப்பு, தலத்திருஅவை ஆகிய மூன்று உறுதியான தூண்களில் ஹெய்ட்டியில் நாம் இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் அமைந்துள்ளன என்று கூறினார்.
நாம் இப்போது சிறப்பித்து முடித்துள்ள கிறிஸ்மஸ், மனிதர் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துகின்றது என்றும், ஒவ்வொரு மனிதரையும் முழுமையாகக் கட்டியெழுப்பாமல் அந்நாட்டில் உண்மையான கட்டியெழுப்புதல் கிடையாது, திருஅவையின் செயல்களில் மனிதர் மையமாக இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவையின் பல பிறரன்பு மற்றும் துறவு நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒன்றிப்பு அவசியம் என்றும், இவை ஒவ்வொன்றும் தங்களின் வழியில் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றன, ஆயினும், பிறரன்பு என்பது பிறருக்கு உதவுவது மட்டுமல்ல, ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்குத் தடையாய் இருப்பவைகளைத் தகர்த்து ஒன்றிணைந்து செய்வதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஹெய்ட்டியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஊக்குவித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, இதில் ஈடுபட்டுள்ள ஹெய்ட்டி ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பிறர் இப்பிறரன்புப் பணிகளில் நற்செய்திக்குச் சாட்சிகளாகத் திகழுமாறும் கேட்டுக்கொண்டார்.
திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வு : ஹெய்ட்டியில் நிலநடுக்கம் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் அதன் நினைவுகளும் நம்பிக்கையும் என்ற தலைப்பில் இக்கூட்டம் வத்திக்கானில் நடைபெற்றது.
திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அமைப்பு, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை, ஹெய்ட்டி ஆயர்கள் பேரவை ஆகியவற்றின் முயற்சியினால் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர், மூன்று இலட்சம் பேர் காயமடைந்தனர் மற்றும் 12 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஆண்டவரின் நாளில் ஆண்டவரோடு இருப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்போம்

சன.10,2015. ஞாயிறு ஆண்டவரின் நாள். நாம் ஆண்டவரோடு இருப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்போம் என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி 33 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பார் திருத்தந்தை.
பின்னர் பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்குவார் திருத்தந்தை.
இயேசுவின் திருமுழுக்கு விழாவன்று, குழந்தைகளுக்குத் திருத்தந்தையர் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கி வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நல்லிணக்கச் சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதில் மதங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது

சன.10,2015. அமைதியான மற்றும் நல்லிணக்கமுள்ள சமுதாயங்களைக் கட்டியெழுப்புவதில் மதங்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்று, புதிதாக கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பாங்காக் பேராயர் Kriengsak Kovitvanit அவர்கள் கூறினார்.
தங்களின் மனச்சாட்சியின்படி ஒருவர் ஒருவரை அன்புகூருவதற்கு, தங்களின் விசுவாசிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார் பாங்காக் பேராயர் Kovithavanij.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில் உறுப்பினர்களாக உள்ள மூன்று தென்கிழக்கு ஆசியக் கர்தினால்கள், அப்பகுதியில் கத்தோலிக்கத் திருஅவையை மேலும் பிரபலமடையச் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்தார் பேராயர் Kovithavanij.
இம்மாதம் 4ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில், 66 வயதாகும் பாங்காக் பேராயர் Kriengsak Kovitvanit அவர்களும் ஒருவர். மேலும், மியான்மார் பேராயர் சார்லஸ் போ, வியட்நாம் பேராயர் நுகுயென் வான் நோன் ஆகியோரும் புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides                           

4. ஐரோப்பிய விசுவாசக் கோட்பாட்டுப் ஆணையங்களின் கூட்டம்

சன.10,2015. திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையங்களின் தலைவர்களும் அடுத்த வாரத்தில் ஹங்கேரி நாட்டு எஸ்டர்காம் நகரில் மூன்று நாள் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
ஆயர் பேரவைகளுக்குள் விசுவாசக் கோட்பாட்டு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டு,  அந்த ஆணையங்களுக்கு விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் உதவி செய்யுமாறு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் தலத்திருஅவைகளின் ஆணையங்களுக்கும், விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்திற்மிடையே அவ்வப்போது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் இம்மாதம் 13 முதல் 15 வரை திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர்களுக்கும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் விசுவாசக் கோட்பாட்டு ஆணையங்களின் தலைவர்களுக்கும் இடையே கூட்டம் நடைபெறவுள்ளது.
இலத்தீன் அமெரிக்காவின் போகோட்டாவில் 1984ம் ஆண்டிலும், ஆப்ரிக்காவின் கின்ஷாசாவில் 1987ம் ஆண்டிலும், ஐரோப்பாவின் வியன்னாவில் 1989ம் ஆண்டிலும்,   ஆசியாவின் ஹாங்காங்கில் 1993ம் ஆண்டிலும், இலத்தீன் அமெரிக்காவின் குவாதலஹாராவில் 1996ம் ஆண்டிலும், வட அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1999ம் ஆண்டிலும் இத்தகைய கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையின் இலங்கை திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் அடையாளம்

சன.10,2015. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் அடையாளமாக அமையும் என்று கூறியுள்ளார் இலங்கை தலத்திருஅவை அதிகாரி ஒருவர்.
வருகிற செவ்வாயன்று இலங்கையில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகளைவிட, அச்சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் சைகைகள் ஒரு செய்தியாக இருக்கும் என்று கொழும்பு உயர்மறைமாவட்ட அருள்பணியாளர் பிரசாத் ஹர்ஷன் கூறினார்.
எவ்விதப் புறத்தூண்டுதல் இல்லாமல் அவர் தானாக வெளிப்படுத்தும் செயல்கள், அவர் சில காரியங்களைச் செய்யும் முறைகள் போன்றவைகளைப் பார்ப்பதற்குத் தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார் அருள்பணியாளர் பிரசாத் ஹர்ஷன்.
என் அன்பில் நிலைத்திருங்கள் என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கை திருத்தூதுப் பயணம் நடைபெறவுள்ளது. இத் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் இம்மாதம் 13 முதல் 15 காலை வரை நடைபெறும்.
இலங்கையின் 2 கோடியே 4 இலட்சம் மக்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் புத்த மதத்தினர்.

ஆதாரம் : CNA

6. போக்கோ ஹாரம் குழுவின் அண்மைத் தாக்குதல்களில் இரண்டாயிரம் பேர் உயிரிழப்பு

சன.10,2015. நைஜீரியாவில் போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவ்வாரத்தில் நடத்திய தாக்குதல்களில் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கையை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று அந்நாட்டுத் தலத்திருஅவைத் தலைவர் கூறினார்.
போக்கோ ஹாரம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவ்வாரத்தில் நடத்திய வன்முறைத் தாக்குதல்களையடுத்து, அந்நாட்டு இராணுவம் இச்சனிக்கிழமையன்று தீவிரவாதிகளுடன் போரிட்டுவரும்வேளை வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama அவர்கள் இவ்வாறு கூறினார்.
அந்நாட்டில் போக்கோ ஹாரம் குழு, இப்புதனன்று Baga நகர்மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன, ஆனால் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லையென பேராயர் Kaigama மேலும் கூறினார்
இதற்கிடையே, போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்தியுள்ள அண்மைத் தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன என்று அபுஜா உயர்மறைமாவட்ட சமூகத் தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி Patrick Tor Alumuki கூறினார்.
Baga பகுதியைவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர் எனவும், பன்னாட்டு அமைதி காக்கும் இராணுவப்பணி மையத்தையும் போக்கோ ஹாரம் குழு கைப்பற்றியிருப்பதாகவும் அருள்பணி Patrick கூறினார்.
நைஜீரியாவில், வருகிற பிப்ரவரியில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளவேளை, அரசு இவ்வன்முறையில் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை என்றும் அருள்பணி Patrick, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
போக்கோ ஹாரம் குழு, லிபியா மற்றும் மாலி நாடுகளிலிருந்தும் ஆட்களைத் தனது குழுவில் சேர்ப்பதாகவும் அருள்பணி Patrick குறை கூறினார்.

ஆதாரம் : CNA

7. குடியேற்றதாரரை வெளியேற்றுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான நிலையை கண்டறிய வேண்டும்

சன.10,2015. குடியேற்றதாரர் விவகாரத்தில் அனைத்துலக சட்டத்தை மதிக்கவும், சட்டங்களை அமல்படுத்துவதற்கும் உதவியாக, குடியேற்றதாரரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு முன்னர் அவர்கள் சொல்வதற்குச் செவிசாய்க்குமாறு இஸ்பானிய அரசிடம் கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
குடியேற்றதாரரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு முன்னர், அவர்களுக்கு உண்மையிலேயே புகலிடம் தேவைப்படுகிறதா அல்லது அவர்கள் வன்முறைக்கு அல்லது மாஃபியா குற்றக்கும்பலின் வர்த்தகத்துக்குப் பலியானவர்களா என்பதை அறிய வேண்டியது அவசியம் என இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
இம்மாதம் 18ம் தேதி இஸ்பெயினில் கடைப்பிடிக்கப்படவுள்ள உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென அந்நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத் தலைவர் ஆயர் Ciriaco Benavente அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அரசை வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியின் லாம்பெதுசா, அமெரிக்காவின் அரிசோனா ஆகிய இரு இடங்களுடன் இஸ்பெயினும் குடியேற்றதாரர் அதிகமாக வந்திறங்கும் இடங்களாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர், இஸ்பெயினில் தற்போது ஏறக்குறைய 50 இலட்சம் வெளிநாட்டவர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் எனக் கூறினார்.
எல்லைகள் இல்லாத திருஅவை, அனைவருக்கும் தாய் என்ற தலைப்பில் இஸ்பானியத் திருஅவை இவ்வுலக தினத்தைச் சிறப்பிக்கின்றது.

ஆதாரம் : Fides                          

8. ஈராக்கில் ஈராயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் விசுவாசம் எளிதாக மறைந்துவிடாது

சன.10,2015. ஈராக்கில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ விசுவாசம் எளிதாக மறைந்துவிட இயலாது என்று அந்நாட்டுக் கத்தோலிக்கப் பேராயர் ஒருவர் கூறினார்.
கடந்த கோடை காலத்திலிருந்து ஐஎஸ் இஸ்லாமிய நாட்டினரின் கைவசம் இருக்கின்ற மொசூல் நகரின் கல்தேய கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் எமில் நோனா அவர்கள் CNA செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார்.
ஈராக் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசம் முக்கியமானது, இது தங்களின் வாழ்வு, இது தங்களின் தனித்துவம், இது தங்களின் வாழ்வுமுறை, எந்த வழியிலும் தங்களின் வாழ்விலிருந்து விசுவாசத்தை அகற்ற முடியாது என்றுரைத்த பேராயர் நோனா அவர்கள், ஈராக் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ விசுவாசத்தை எளிதாக அழித்துவிட இயலாது என்று கூறினார்.
இதற்கிடையே, சிரியா நாட்டில் தெருவில் வித்தைகள் காட்டும் ஒருவரின் தலையை வெட்டிக் கொன்றுள்ளனர் ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள்.
இவ்வித்தைக்காரர், இஸ்லாமுக்கு எதிராக வித்தைகளைக்  காட்டுகிறார், கடவுளை அவமதிக்கிறார், போலிகளை உருவாக்குகிறார் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் குற்றம் சுமத்தியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.  
    
ஆதாரம் : CNA

9. உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரையில் வெளியீடு

சன.10,2015. தமிழர் பண்பாட்டு மையமும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து  சென்னை மெரினா கடற்கரையில் இஞ்ஞாயிறன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது.
1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள ப்ளெக்ஸ் பேனர் என்று சொல்லப்படும் பதாகையில் அச்சிடப்ட்டு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.  திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறளின் பெருமையை இந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கும் சென்று சேர வேண்டும், இந்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், வடநாட்டவர்களுக்கு திருக்குறள் ஒரு பாடமாக கற்பிக்கப்படுதல் வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது.
இந்திய ஆட்சியாளர்களும் திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த, மொழி, இன சமத்துவத்தைப் பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு இந்த சாதனை முயற்சியை இந்த அமைப்புகள் எடுத்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமணி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...