Friday, 9 January 2015

செய்திகள் - 09.01.15

செய்திகள் - 09.01.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - தூய ஆவி நம் இதயங்களை இறைவனின் அன்புக்குத் திறக்கிறார் 

2. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் திருத்தூது ஏடு

3. திருத்தந்தை, யஜிதி இனப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

4. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவு, வத்திக்கானில் கூட்டம்

5. இலங்கையின் புதிய அரசுத்தலைவர் நியாயமாகச் செயல்படுவார், தலத்திருஅவை நம்பிக்கை 

6. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் உள்ளது, ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள்

7. ப்ரெயில் எழுத்தில் விவிலியப் பிரதிகள்

8. உலகில் இன்னும் 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - தூய ஆவி நம் இதயங்களை இறைவனின் அன்புக்குத் திறக்கிறார் 

சன.09,2015. ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளோ, யோகா அமர்வுகளோ அல்லது சென் ஆன்மீகப் பயிற்சிகளோ அல்ல, ஆனால் தூய ஆவியே நம் இதயங்களை இறைவனுக்கும், அவரின் அன்புக்கும் திறக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு கடலில் நடந்து வருவதைக் கண்ட திருத்தூதர்கள் எவ்வாறு அச்சம் கொண்டனர் என்பதைக் கூறும் இவ்வெள்ளி திருப்பலி நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, திருத்தூதர்களின் இதயங்கள் கடினப்பட்டு இருந்ததே அவர்கள் பயந்து நடுங்கியதற்கான காரணம் என்று கூறினார்.
இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட வேதனையான அனுபவம் போன்று, ஒருவரின் இதயத்தைக் கடினப்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும், அதோடு மனிதர் தங்களுக்குள்ளே வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்களின் இதயங்கள் கடினப்படும் என்றும் கூறினார்.
வீண் தற்பெருமை, தன்னிறைவு, பாதுகாப்பற்றநிலை போன்ற காரணங்களாலும் ஒருவரின் இதயம் கல்லாக மாறும் என்றும், இதயம் கல்லாக மாறும்போது அது சுதந்திரமாக இருக்காது, அப்போது அதனால் அன்புகூர முடியாது, நிறைவான அன்பு அச்சத்தை அகற்றுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அன்புகூருவது எவ்வாறு என்பதையும், நம் கடின இதயங்களிலிருந்து நாம் விடுதலையடையவும் தூய ஆவி நமக்குக் கற்பிக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நீங்கள் ஆயிரக்கணக்கான மறைக்கல்வி வகுப்புகளையும், ஆயிரக்கணக்கான யோகா அமர்வுகளையும், ஆயிரக்கணக்கான சென் ஆன்மீகப் பயிற்சிகளையும்  பின்பற்றலாம், ஆனால் இவற்றில் எதுவுமே நீங்கள் கடவுளின் குழந்தை என்ற சுதந்திரத்தை உங்களுக்கு வழங்க இயலாது, மாறாக, தூய ஆவி ஒருவரே கடவுளை, அப்பா என அழைப்பதற்கு உதவுகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் திருத்தூது ஏடு

சன.09,2015. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது ஏடு இந்த ஆண்டு கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்கானத் திருத்தூதுப் பயணம் பற்றி பத்திரிகையாளர்களிடம் விளக்கியபோது சுற்றுச்சூழல் பற்றிய இத்திருத்தூது ஏடு பற்றியும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
சுற்றுச்சூழல் பற்றிய திருத்தூது ஏடு இன்னும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறிய அருள்பணி லொம்பார்தி, சுற்றுச்சூழல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிப் பேசி வருவதையும் குறிப்பிட்டார்.
எனினும், இத்திருத்தூது ஏட்டைத் தயாரிப்பதற்கு அதிக காலம் தேவைப்படுவதால், இது வருகிற கோடை காலத்துக்குள் வெளியிடப்படக்கூடும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை, யஜிதி இனப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு

சன.09,2015. பிற சிறுபான்மை இனத்தவர் போன்று வன்முறையையும் அடக்குமுறையையும் சந்திக்கும் யஜிதி இனத்தவர்க்கு நீதியும், சுதந்திரமும் அமைதியும் கிடைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல இடங்களில் வாழும் யஜிதி இனத்தவரின் பிரதிநிதி குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்காலத்தில் பல்வேறு துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் யஜிதி இன மக்களுடன் ஆன்மீக முறையில் தான் நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இக்குழுவில் ஒருவர் திருத்தந்தையை, ஏழைகளின் தந்தை என அழைத்தார் என்றும், இவ்வின மக்களுக்கு திருத்தந்தை வழங்கிவரும் ஆதரவுக்கு இக்குழுவினர் நன்றி தெரிவித்தனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உலகின் யஜிதி இன மக்கள் தலைவர் Tahsin Said Ali Beg, அவ்வினத்தவரின் ஆன்மீகத் தலைவர் Skeikh Kato ஆகிய இருவர் தலைமையிலான குழு திருத்தந்தையைச் சந்தித்தது.  இந்த ஆன்மீகத் தலைவர் Baba Sheikh என அழைக்கப்படுகிறார்.
உலகில் ஏறக்குறைய 15 இலட்சம் யஜிதி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஐந்து இலட்சம் பேர் ஈராக்கிலும், மற்றவர்கள் துருக்கி, ஜார்ஜியா, ஆர்மேனியா, இன்னும் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவு, வத்திக்கானில் கூட்டம்

சன.09,2015. கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தாம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு, வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வு : ஹெய்ட்டியில் நிலநடுக்கம் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் அதன் நினைவுகளும் நம்பிக்கையும் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தின் ஒரு நிகழ்வாக இதில் பங்கு கொள்ளும் பிரதிநிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார்கள்.
திருப்பீடத்தின் Cor Unum பிறரன்பு அமைப்பு, திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை, ஹெய்ட்டி ஆயர்கள் பேரவை ஆகியவற்றின் முயற்சியினால் நடத்தப்படும் இக்கூட்டத்தில் 200 பேர் தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
2010ம் ஆண்டு சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர், மூன்று இலட்சம் பேர் காயமடைந்தனர் மற்றும் 12 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிவாரணப் பணியில் திருஅவையின் முயற்சியினால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, இன்னும் ஏறக்குறைய 200 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்று ஹெய்ட்டி கர்தினால் Chibly Langlois அவர்கள் கூறினார். வத்திக்கானில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கென ஹெய்ட்டிலிருந்து 12 பேர் உரோம் வந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இலங்கையின் புதிய அரசுத்தலைவர் நியாயமாகச் செயல்படுவார், தலத்திருஅவை நம்பிக்கை 

சன.09,2015. இலங்கையில் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள், நாட்டினர் அனைவரும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உதவுவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
இலங்கையில் இவ்வியாழனன்று நடந்து முடிந்த அரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் 51.28 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது குறித்து வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசி பேட்டியளித்த யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் இடம்பெறும் ஆட்சி மாற்றம், நாட்டினர் எல்லாரும், குறிப்பாக தமிழ் மக்கள் சுதந்திரமாகக் கடமைகளை ஆற்றுவதற்கும், ஒற்றுமையாகச் செயல்படுவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.
புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களை அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது என்றும், இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், ஆயினும், மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் நியாயத்தோடு செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறார் என்றும் கூறினார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ்.
இலங்கையின் ஏழாவது அரசுத்தலைவர் தேர்தலில் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 57 இலட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளுடன், 47.58 விழுக்காட்டு வாக்குகளையே ஆளுங்கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் உள்ளது, ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள்

சன.09,2015. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் வைக்கப்படுகின்றது என்றும், மதங்களை மதிக்கும் தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டுமென்றும் பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் தலைவர்கள் கூறினர்.
ப்ரெஞ்ச் ஆயர்கள் குழுவின் பிரிதிநிதிகளுடன் வந்த ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று, இரண்டு நாள்கள் வத்திக்கானைப் பார்வையிட்ட பின்னர், திருப்பீட பல்சமய உரையாடல் அவையுடன் இணைந்து இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.
பாரிசில் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது அக்குழு.
அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo வார இதழ் அலுவலகத்தின்மீது இப்புதன் நடுப்பகலில் நடத்தப்பட்ட தாக்குதலில், அவ்விதழின் ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : CNA

7. ப்ரெயில் எழுத்தில் விவிலியப் பிரதிகள்

சன.09,2015. இங்கிலாந்தை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று பார்வையிழந்தவர்களுக்கென ப்ரெயில் எழுத்தில் விவிலியத்தை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.
இதன் மூலம், உலகிலுள்ள 28 கோடியே 50 இலட்சம் பார்வையற்ற மக்கள் தங்களின் விசுவாசத்தை மட்டுமல்ல, தங்களின் அன்றாட வாழ்வையும் சிறப்பாக வாழ்வதற்கு உதவி வருகின்றது அந்நிறுவனம்.
இங்கிலாந்தை மையமாகக் கொண்ட United Bible கழகம், 40க்கும் மேற்பட்ட  மொழிகளில் ப்ரெயில் எழுத்தில் முழு விவிலியத்தையும், 200க்கு மேற்பட்ட  மொழிகளில் விவிலியத்தின் ஒரு பகுதியையும் மொழி பெயர்த்து விநியோகித்து வருகின்றது. இவ்விவிலியக் கழகம் வழியாக 50 நாடுகளில் ப்ரெயில் விவிலிய மறைப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சாதாரண எழுத்தில் ஒரு விவிலியத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவைவிட ப்ரெயில் எழுத்தில் அச்சிடுவதற்கு ஆகும் செலவு 50 மடங்கு அதிகம் என்றும், ப்ரெயில் எழுத்தில் முழு விவிலியத்தையும் அச்சிடுவதற்கு ஏறக்குறைய 600 டாலர் செலவாகின்றது என்றும் இவ்விவிலியக் கழகம் கூறுகின்றது. 
மற்ற மொழிகளில் விவிலியத்தை அச்சடித்து 200க்கு மேற்பட்ட நாடுகளில் United Bible கழகங்கள் விநியோகித்து வருகின்றன.

ஆதாரம் : CNA

8. உலகில் இன்னும் 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர்

சன.09,2015. சிறார் தொழில்முறை உலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றபோதிலும், உலகில் இன்னும் 5 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 14 கோடியே 40 இலட்சம் சிறார் தொழிலாளர் உள்ளனர், இவர்களில் பெரும்பான்மையினர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கூறியது.
ஹொண்டூராஸ் நாட்டில் 5 இலட்சம் சிறார் வேலை செய்கின்றனர் என்றும், இவர்கள் அந்நாட்டின் இளையோர் எண்ணிக்கையில் ஏறக்குறைய 15 விழுக்காடு என்றும் அந்நாட்டின் தேசிய கணக்கெடுப்பு கூறுகிறது.
ஹொண்டூராஸ் நாட்டின் Tegucigalpa நகரின் குப்பை மேடுகளில் பல சிறார் சாக்குகளில் பொருள்களை நிரப்புவதைக் காண முடிகின்றது என்றும், மற்ற சிறார் போதைப்பொருள்களை விற்று குற்றக் கும்பல்களுக்குப் பணம் கொடுக்கின்றனர் என்றும் 
அக்கணக்கெடுப்பு கூறுகிறது.
ஹொண்டூராஸ் நாட்டில் சட்டமுறையான குறைந்த மாத ஊதியமான 380 டாலரைவிடக் குறைவாகவே சிறார் தொழிலாளர் பெறுகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
     
ஆதாரம் : AP

No comments:

Post a Comment

Pope: ‘Synod final document forms part of papal Magisterium’

  Pope: ‘Synod final document forms part of papal Magisterium’ Pope Francis publishes a note accompanying the Final Document of the Synod of...