Catholic Tamil News - 08.01.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்
2. பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது
3. திருத்தந்தை - அன்பு இறைவனிடம் இட்டுச் செல்கின்றது
4. எபோலா நோயாளிகளுக்கு தலத்திருஅவைகள் ஆற்றும் சேவைக்குப் பாராட்டு
5. திருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம், அவர் ஆசியா மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது
6. இலங்கை செல்லும் கோவா திருப்பயணிகளுக்கு அரசு உதவி
7. 2ம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன்,இரஷ்யர்கள் இணைந்து கிறிஸ்மஸ்
8. மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிப்போம்
சன.08,2015.
மனிதர்களிடம் இவ்வளவு வன்முறை உணர்வுகள் உள்ளனவே என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியின்போது, இப்புதனன்று பாரிஸ் மாநகரில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட கொடுமையைக் குறித்து தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இந்த வன்முறையால் கொல்லப்பட்டவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையாளர்களின் மனமாற்றத்திற்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது முகமூடி அணிந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இப்புதன் நடுப்பகலில் நடத்திய தாக்குதலில், ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்று மரணத்தோடு போராடி வருகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பாரிஸ் வன்முறை அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது
சன.08,2015. பாரிஸ் நகருக்காகச் செபிக்குமாறு, இவ்வியாழன் காலையில் தனது டுவிட்டரில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், பாரிஸ் நகரில் இப்புதன் நடுப்பகல் வேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய இப்படுகொலையைக் கண்டித்து, பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களுக்கு, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வன்முறை, அமைதியை விரும்பும் அனைத்து மனிதர்களின் மனங்களையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது எனவும், இதில்
உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரோடும் மனத்தளவில் ஒன்றித்துச்
செபிக்கும் உலகத்தினர் அனைவரோடும் தானும் இணைந்து செபிப்பதாகவும்
அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
மனித உயிரை மதிக்க மறுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிப்பதற்கு, நல்மனம் கொண்டோர் இணைந்து வரவேண்டும் என்ற வேண்டுகோளையும் திருத்தந்தை தனது செய்தியில் விடுத்துள்ளார்.
இத்தந்திச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
மேலும், பாரிஸ் கர்தினால் André Vingt-Trois அவர்களும், இத்தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி, சமுதாயத்தில் ஒருவர் ஒருவரை மதித்து அமைதியில் வாழும் உறவுகளைக் கட்டியெழுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை - அன்பு இறைவனிடம் இட்டுச் செல்கின்றது
சன.08,2015. கிறிஸ்தவ அன்பு, வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது, மாறாக அவ்வன்பு செயல்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 08, இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இறைவன் அன்பு நிறைந்த பாதையில் வழிநடத்துகிறார் மற்றும் அன்பின் வழியாக நாம் இறைவனை அறிகிறோம் என்றும் கூறினார்.
இவ்வாண்டின்
இக்காலத்தில் திருவழிபாட்டில் இடம்பெறும் முக்கிய வார்த்தையாகிய
வெளிப்படுத்துதல் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, மூன்று கீழ்த்திசை ஞானிகளுக்குத் திருகாட்சியில், திருமுழுக்கில், கானாவூர் திருமணத்தில் இயேசு தம்மை வெளிப்படுத்தினார் என்று கூறி, நாம் எப்படி இறைவனை அறிய முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இறைவனே அன்பு, அன்பின் பாதையில் இறைவனை நாம் அறிய வருகிறோம், அன்பை அறியாதபோது நாம் எப்படி அன்புகூர முடியும் என்றும் கேட்டுள்ள திருத்தந்தை, அன்பு கடவுளிடமிருந்து வருவதால் நாம் ஒருவர் ஒருவரை அன்புகூர வேண்டுமென்றும் கூறினார்.
கடவுளின் அன்பு எப்போதும் நமக்காகக் காத்திருக்கின்றது, அவ்வன்பு எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது, நம்மை மிகவும் அன்புகூரும் நம் வானகத்தந்தை நம்மை மன்னிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார், இதனை உணருவதற்கு வரங்களை இறைஞ்சுவோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. எபோலா நோயாளிகளுக்கு தலத்திருஅவைகள் ஆற்றும் சேவைக்குப் பாராட்டு
சன.08,2015. எபோலா உயிர்க்கொல்லி நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கினி, லைபீரியா, சியெரா
லியோன் ஆகிய நாடுகளின் கத்தோலிக்கத் தலத்திருஅவைகள் இந்நோய்
நெருக்கடிகளுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவையைப் பாராட்டியுள்ளது
திருப்பீடம்.
இந்த
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயாளிகள் மத்தியில் தலத்திருஅவைகள்
ஆற்றிவரும் பணிகளை மேலும் ஊக்குவித்து உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நிதி
உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.
எபோலா நோய்ப் பாதிப்பால் கடுமையாய்த் துன்புறும் நம் சகோதர சகோதரிகளுடன் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டும் விதமாக, தனியாகவோ, குழுவாகவோ நிதி உதவி வழங்கப்படுவதையும் ஊக்குவித்துள்ளது திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.
இந்தப் பாராட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, கத்தோலிக்கத்
தலத்திருஅவை இந்நோயாளிகள் மத்தியில் ஆற்றிவரும் துணிச்சலான சேவைகளை மேலும்
விரிவுபடுத்தும் நோக்கத்தில் நிதி உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது.
2013ம் ஆண்டில் எபோலா நோய்த் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7,905 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தையின் 2வது ஆசியத் திருத்தூதுப் பயணம், அவர் ஆசியா மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது
சன.08,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவுக்கு இரண்டாவது தடவையாக மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணம், அவர் இந்தப் பெரிய கண்டத்தின்மீது கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகின்றது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சனவரி 12, வருகிற திங்கள் இரவு 7 மணிக்கு, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தொடங்கும் அவரின் இரண்டாவது ஆசியத் திருத்தூதுப் பயணம்
பற்றி பத்திரிகையாளரிடம் விளக்கிய இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ
லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆகஸ்டில் தென் கொரியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, மீண்டும் ஆசியாவுக்குச் செல்லவிருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் ஆசியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள இயலாமல் போனதால், ஒரு திருத்தந்தையின் பிரசன்னம் ஆசியாவுக்குத் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று கூறினார்.
சனவரி 13, வருகிற
செவ்வாயன்று இலங்கையின் கொழும்புவில் தனது இந்த இரண்டாவது ஆசியத்
திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலங்கையில் 48 மணி நேரப் பயண நிகழ்வுகளை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், 15ம்
தேதி வியாழன் காலை 9 மணிக்கு கொழும்புவிலிருந்து பிலிப்பீன்ஸ்க்குப்
புறப்படுவார். அன்று மாலை 5.45 மணிக்கு மனிலா சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து 19ம் தேதி மாலை 5.40 மணிக்கு உரோம் வந்தடைவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. இலங்கை செல்லும் கோவா திருப்பயணிகளுக்கு அரசு உதவி
சன.08,2015.
முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வில்
கலந்து கொள்வதற்கு இலங்கை செல்லும் 500 கோவா கத்தோலிக்கர்களுக்கு பயணச்
செலவுகளை ஏற்பதாக கோவா அரசு அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 14, வருகிற
புதனன்று கொழும்புவில் முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக
அறிவிக்கும் திருப்பலியில் கலந்துகொள்வதற்கு கோவாவிலிருந்து செல்லும்
திருப்பயணிகளுக்கு கோவா மாநில அரசு உதவுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இப்புதனன்று கோவா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய
கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு நான்கு நாள் திருப்பயணம் மேற்கொள்ளும்
திருப்பயணிகளின் விமானக் கட்டணத்தில் பாதியை அரசு ஏற்கிறது.
மேலும், இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு இருவரே, அதிலும் ஆண்டு வருமானம் மூன்று இலட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களே அரசின் இச்சலுகையைப் பெறுவார்கள்.
1651ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் அவர்கள், 1686ம் ஆண்டில் இலங்கை சென்று கத்தோலிக்கத்தைப் பரப்பினார்.
கோவாவின் ஒரு கோடியே 50 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
ஆதாரம் : UCAN
7. 2ம் உலகப் போருக்குப் பின்னர், முதன்முறையாக உக்ரேய்ன்-இரஷ்யர்கள் இணைந்து கிறிஸ்மஸ்
சன.08,2015. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்,
முதன்முறையாக உக்ரேய்ன் மற்றும் இரஷ்ய கிறிஸ்தவர்கள் இணைந்து கிறிஸ்மஸ்
பெருவிழாவைச் சிறப்பித்தனர் என்று உக்ரேய்ன் கிரேக்க-கத்தோலிக்கப் பேராயர் Sviatoslav Shevchuk கூறினார்.
உக்ரேய்ன் நாட்டில் போர்ச்சூழல் நிலவி வருவதற்கு மத்தியிலும், Donbass மாநிலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்ததாகக் கூறிய Kyiv-Halych பேராயர் Shevchuk அவர்கள், உக்ரேய்னில் அமைதி நிலவுமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
பொதுவான கருத்து வாக்கெடுப்புகளில் மட்டுமல்லாமல், தங்களின் அன்றாட வாழ்விலும் விசுவாசிகள் தங்களின் கிறிஸ்தவ விசுவாசத்திற்குப் பிரமாணிக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார் பேராயர் Shevchuk.
இரஷ்ய அர்த்தடாக்ஸ் சபை சனவரி 7ம் தேதியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கின்றது
ஆதாரம் : AsiaNews
8. மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு
சன.08,2015. நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதியவகை ஆண்டிபயாடிக் மருந்து ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நுண்கிருமிகளை
வளர்ப்பதில் அமெரிக்க அறிவியலாளர்கள் கடைப்பிடித்த புதிய வழிமுறைகள் 25
புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கின்றன. இதில் ஒரு
ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு, மருத்துவ
உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான
புதியவகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும்
நம்பப்படுகிறது.
1950களிலும்
1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால்
1987ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை எந்தப் புதிய ஆண்டிபயாடிக் மருந்தும்
கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
No comments:
Post a Comment