Wednesday 14 January 2015

செய்திகள் - 13.01.15

செய்திகள் - 13.01.15
------------------------------------------------------------------------------------------------------


Pope Fra

திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயண விளக்கம்முதல் நாள்

சன.13,2015. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக போரின் கொடுமைகளை அனுபவித்துள்ள இலங்கை நாடு, போரின் கொடுமைகள் பற்றிய உண்மையை அறிவதில் பழைய காயங்களைத் திறக்காமல், குணப்படுத்தும் வழிகளையும், ஒப்புரவை ஏற்படுத்தும் வழிகளையும் தேட வேண்டும் என்ற அழைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கைக்குத் தனது முதல் திருத்தூதுப் பயணத்தை இச்செவ்வாயன்று தொடங்கி, முதல் நாள் பயணத்திட்டங்களை நிகழ்த்தினார். இத்திங்கள் இரவு ஏழு மணிக்கு உரோமையிலிருந்து ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை, அவ்விமானத்தில் தன்னோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராக கைகுலுக்கி வாழ்த்தினார். 9 மணி, 40 நிமிடங்கள் கொண்ட இந்த நீண்ட பயணத்தில் அவர் கடந்து சென்ற அல்பேனியா, கிரீஸ், துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு குடியரசு, ஓமன், இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளையும், அந்நாடுகளுக்குத் தனது ஆசீரையும் அனுப்பினார். கொழும்பு பண்டார நாயக்க அல்லது கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தை இச்செவ்வாய் இலங்கை நேரம் காலை 8.51 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தைக்கு சிவப்பு கம்பள அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 21 துப்பாக்கிகள் முழங்க, வத்திக்கான் மற்றும் இலங்கை நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. புதிய அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா உட்பட பல தலைவர்கள் அங்கு இருந்தனர். இப்பயணம் எளிமையாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப, இவ்வரவேற்பு நிகழ்வில், கொழும்பு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சிறார் குழு ஒன்று ஆங்கிலம், இத்தாலியம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில், திருத்தந்தையின் இதயத்தில் கடவுளின் அமைதி இருக்கின்றது. இந்தச் சமுதாயத்துக்கு அமைதியே தேவை என்ற பொருளில் பாடினர். ஒரு சிறுமி திருத்தந்தையின் கழுத்தில் மலர் மாலை அணிவிக்க, ஒரு சிறுவன் 77 வெற்றிலை இலைகளைக் கொடுத்தான். பின்னர் இவ்விருவரும் திருத்தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். இந்த மாலை வத்திக்கான் நிறங்களான மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்தால் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வரவேற்பு நிகழ்வில் ஒரு யானைக் குட்டியும் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் இலங்கை புதிய அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இலங்கை புதிய அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள், இப்பதவியை ஏற்ற பின்னர் சந்திக்கும் முதல் உலகத் தலைவர் திருத்தந்தை என்பதும், அவரிடம் ஆசீர் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையும் இவ்வரவேற்பு நிகழ்வில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இலங்கை பாரம்பரிய முறைகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த வரவேற்பு நிகழ்வை முடித்து, அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. செல்லும் வழியில் ஏறக்குறைய 40 யானைகள் புத்தமத துறவிகளுடன் நின்று திருத்தந்தையை வாழ்த்தின. கிறிஸ்தவம், இஸ்லாம் இந்து, புத்தம் என அனைத்து மத மக்களும் வழியில் பாப்பிறைக் கொடிகளுடன் நின்று கொண்டிருந்தனர். ஒரு நீண்ட விமானப் பயணத்தை முடித்து 30 டிகிரி செல்சியுஸ் வெப்பத்தில் திறந்த காரில் சென்ற திருத்தந்தை களைப்பாகத் தெரிந்தார். ஆயினும், கண்களை நம்ப முடியாத அளவுக்கு சாலையெங்கும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தவுடன் அவர்களைக் கையசைத்து வாழ்த்தினார். இந்தத் திறந்த கார் பயணத்தில், இடையில் இறங்கி மக்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. களைப்பு காரணமாக, திருப்பீடத் தூதரகத்தில் திருத்தந்தை இலங்கை ஆயர்களுடன் தனியாக கூட்டம் நடத்தவில்லை. ஆனால் அவர்களுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தினார். அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட உரை ஆயர்களிடம் கொடுக்கப்பட்டது. அவ்வில்லத்தில் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார் திருத்தந்தை. தாமிரத்தில் எழுதப்பட்ட “SANNAS”  என்ற ஆவணத்தையும் திருத்தந்தை, இலங்கை ஆயர்களுக்குப் பரிசாக அளித்தார். இது, கண்டி மன்னர் Keerthi Sri Rajasinghe அவர்கள் புனித பிலிப்நேரி சபையைச் சார்ந்த அருள்பணி ஹூவான் சில்வெய்ராவுக்கு 1694ம் ஆண்டு ஏப்ரலில் பௌணர்மி நாளன்று வழங்கப்பட்ட ஆவணமாகும்.  புனித பிலிப்நேரி சபையினர் இலங்கையில் அனைத்து மதத்தினருக்கும் நற்செய்தி அறிவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஆவணம் இது. மதியம் ஓய்வெடுத்த பின்னர், இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு இலங்கை அரசுத்தலைவர் மாளிகை சென்று அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அரசுத்தலைவர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தார். அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பண்டார நாயக்க நினைவு அனைத்துலக சொற்பொழிவு அறையில் பல்சமய பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை. பாரம்பரியப் பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றன.

அங்கு தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்டார் திருத்தந்தை. ஆயர் Cletus Perera வரவேற்புரை நிகழ்த்தினார். புத்தமதத் துறவி Kaburugamuwe Vajira அவர்கள், Pirith என்ற புத்தமதப் பாடலைப் பாடினார். நல்லூர் கோவில் இந்து மத சுவாமி சோமசுந்தரம் அவர்கள் தமிழில் திருத்தந்தையை வாழ்த்தினார். முஸ்லிம் குரு Ash-Sheikh M.F.M. Fazil அவர்கள், ஆங்லிக்கன் ஆயர் Diloraj Kanakasabei ஆகியோரும் செபம் செய்தனர். புத்தமதத் துறவி Vigithasiri Niyangoda Thero அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இச்சந்திப்பை நிறைவு செய்து திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இலங்கையில் இந்த முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. இந்நாளைய தினத்தாள்களும், ஊடகங்களும் திருத்தந்தையின் பல புகைப்படங்களைப் பிரசுரித்து, இத்திருத்தந்தை யார் என்ற கேள்வியுடன் அவரைப் பற்றி புகழ்ந்து எழுதியிருந்தன. பாதங்களைக் கழுவிய திருத்தந்தை, ஊழியர் தலைவர் என்றெல்லாம் திருத்தந்தையைப் புகழ்ந்து எழுதியுள்ளன. இப்பயணத்தின் நினைவாக இலங்கை அரசு இரு தபால்தலைகளையும் வெளியிட்டுள்ளது. 

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment