ஆற்றில் செத்து மிதக்கும் பன்றிகள்: சீனாவில் தொடரும் அவலம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் ஹுவான்க்பூ நதியில் ஆயிரக்கணக்கான பன்றிகள் செத்து மிதந்தன.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றில் இறந்த பன்றிகள் கிடந்தது வணிக மையமான அந்தப் பகுதியின் நீர் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றிய விமர்சனங்களைப் பொதுமக்களிடம் எழுப்பியது.
ஹுவான்க்பூ ஆற்றின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் ஷெஜியாங் மாகாணத்தின் ஜியாசிங் நகரமே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக அப்போது குறிப்பிடப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு நதியில் பன்றிகள் செத்து மிதந்தது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியான்ங்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங்கில் ஓடும் கஞ்சியாங் நதியின் ஒரு பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இறந்த பன்றிகள் மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 758 கி.மீ தூரத்திற்குப் பாயும் இந்த நதி அந்தப் பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரத்தை அளிக்கும் யாங்சி நதியின் முக்கிய துணை நதியாகும்.
நதியின் மேற்பகுதியில் அமைந்துள்ள இடங்களில் இருந்து இந்தப் பன்றிகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறும் நகராட்சி அதிகாரிகள், இதுவரை 131 பன்றிகளை நதியிலிருந்து எடுத்துள்ளனர். பின்னர் இவை பாதுகாப்பாக அழிக்கப்பட்டதாக கூறிய அதிகாரிகள், இன்னமும் ஆற்றினை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அதிகாரிகள் நகரம் முழுவதிலும் உள்ள நீர் சேமிப்புத் தொட்டிகளை ஆய்வு செய்து நீர் பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment