செய்திகள் - 22.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இலங்கையின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் Pierre Nguyên Van Tot
2. திருத்தந்தை பிரான்சிஸ், நைஜீரிய அரசுத்தலைவர் சந்திப்பு
3. இயேசுவின் மீட்பளிக்கும் அன்பின் சக்தியினின்று நம்மை எதுவும் பிரிக்க முடியாது, திருத்தந்தை பிரான்சிஸ்
4. சிறாரைப் பாதுகாக்கும் புதிய திருப்பீடப் பணிக்குழு
5. திருத்தந்தை பிரான்சிஸ் மாஃபியாவிடம் : நரகத்தின் பாதையிலிருந்து இப்பொழுதே திரும்பி வாருங்கள்
6. மாஃபியாக் குற்றக் கும்பல், "நம்பிக்கையின் கொலையாளிகள்",Libera நிறுவனர்
7. இத்தாலியின் இளம் அருள்சகோதரி ஒருவரின் அசத்தலான தொலைக்காட்சி நிகழ்ச்சி
8. இத்தாலிய அருள்பணியாளர் ஒருவருக்கு ஐ.நா. மக்கள்தொகை விருது
9. இந்தியா, சிங்கப்பூர் நீர் நிறுவனங்களுக்கு 2014ம் ஆண்டின் வாழ்வுக்கான தண்ணீர் விருது
10. "உலகிலேயே குற்றங்கள் நிறைந்த நகரம் பாக்தாத்'
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இலங்கையின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் Pierre Nguyên Van Tot
மார்ச்,22,2014. இலங்கையின் புதிய திருப்பீடத் தூதராக, பேராயர் Pierre Nguyên Van Tot அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் Nguyên Van Tot அவர்கள், 1949ம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார். இவர் 1974ம் ஆண்டில் குருவாகவும், 2003ம் ஆண்டில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2008ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல் கோஸ்தா ரிக்கா நாட்டின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய பேராயர் Nguyên Van Tot அவர்கள், பெனின், டோகோ, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சாட் ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலும் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், வியட்நாம் நாடாளுமன்றத் தலைவர் Nguyen Sinh Hung அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், நைஜீரிய அரசுத்தலைவர் சந்திப்பு
மார்ச்,22,2014. நைஜீரிய அரசுத்தலைவர் Ebele Jonathan Goodluck அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck.
திருப்பீடத்துக்கும் நைஜீரிய நாட்டுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு, கல்வி, நலவாழ்வு, பல்சமய
உரையாடல் போன்ற துறைகளில் திருஅவை ஆற்றிவரும் பணிகள் போன்ற விவகாரங்கள்
இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மனித மாண்பையும், சமய சுதந்திரம் தொடங்கி அனைத்து அடிப்படை உரிமைகளையும் பாதுகாத்தல் போன்ற விவகாரங்கள் வலியுறுத்தப்பட்டதோடு, அந்நாட்டில் இடம்பெறும் அனைத்து வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது எனக் கூறிய திருப்பீட பத்திரிகை அலுவலகம், அந்நாடு விரைவில் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையும் இச்சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியது.
ஆப்ரிக்காவின் மத்திய மற்றும் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம்பெறும் மோதல்கள் குறித்தும், நைஜீரியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைமை குறித்தும், உலகை அச்சுறுத்திவரும் பல்வேறு மோதல்கள், உரையாடல் மூலமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
நைஜீரியாவின் முஸ்லிம் பிரதிநிதி தவிர மற்ற மதங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் Goodluck அவர்கள், திருத்தந்தைக்கு கம்பளம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இயேசுவின் மீட்பளிக்கும் அன்பின் சக்தியினின்று நம்மை எதுவும் பிரிக்க முடியாது, திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,22,2014. இயேசுவே நம் நம்பிக்கை; தீமை அல்லது மரணம்கூட, எதுவும் நம்மை இயேசுவின் மீட்பளிக்கும் அன்பின் சக்தியினின்று பிரிக்க முடியாது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலிய கத்தோலிக்க வானொலி-தொலைக்காட்சி ஊடகத்துறைகள் அமைப்பான “Corallo”வின் ஏறக்குறைய 400 உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனிமனிதர், குடும்பங்கள், சமூகம் ஆகியவற்றின் வாழ்வில் காணப்படும் முக்கியமான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும், அவ்வாறு செயல்படும்போது பொதுநலன் மற்றும் உண்மைக்கு நேர்மையுடன் பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்களின் ஒளி-ஒலி நிகழ்ச்சிகளில், மனிதரின் வரலாறுகள் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இவர்கள் தங்கள் பணிகளில் மனித மற்றும் அறநெறிப் பண்புகளை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளை வழங்குமாறும் கூறினார்.
நல்ல சமாரியர் பணிசெய்யும் திருஅவையின் முகங்களாக இந்த ஊடகப் பணியாளர்கள் மாறுமாறும் பரிந்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிறாரைப் பாதுகாக்கும் புதிய திருப்பீடப் பணிக்குழு
மார்ச்,22,2014. சிறாரைப் பாதுகாக்கும் புதிய திருப்பீடப் பணிக்குழுவை இச்சனிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தகையதொரு குழு உருவாக்கப்படும் என்று 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்தார்.
பிரான்சின் மருத்துவர் Catherine Bonnet , அயர்லாந்தின் திருமதி Marie Collins, பிரிட்டனின் பேராசிரியர் Sheila Hollins, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Sean Patrick O’Malley, OFM, இத்தாலியின் பேராசிரியர் Claudio Papale, போலந்தின் மேதகு Hanna Suchocka, அர்ஜென்டீனாவின் அருள்பணி Humberto Miguel Yañez, ஜெர்மனியின் அருள்பணி Hans Zollner சே.ச., ஆகியோர்
இப்பணிக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் மேலும் சில
உறுப்பினர்கள் வருங்காலத்தில் இணைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்குழுவின் பணிகள் மற்றும் அதன் சட்ட விதிமுறைகளைத் தயார் செய்வது இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் மாஃபியாவிடம் : நரகத்தின் பாதையிலிருந்து இப்பொழுதே திரும்பி வாருங்கள்
மார்ச்,22,2014. மாஃபியாக் குழுவின் ஆண்களே, பெண்களே, தயவுகூர்ந்து உங்கள் வாழ்வை மாற்றுங்கள், மனம் திரும்புங்கள், தீமை செய்வதை நிறுத்துங்கள், உங்களின் நன்மைக்காகக் கேட்கிறேன், முழந்தாள்படியிட்டு உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன் என்று இவ்வெள்ளி மாலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியில்
மாஃபியாக் குற்றக் கும்பலுக்குப் பலியாகியுள்ள ஏறக்குறைய 15 ஆயிரம் பேரின்
குடும்பங்களின் 700 பிரதிநிதிகளுடன் இவ்வெள்ளி மாலை உரோம் புனித 7ம்
கிரகரி ஆலயத்தில் செப வழிபாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், இந்த மாஃபியாக் குற்றக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றங்களைக் கைவிடவும், நித்திய அழிவைத் தவிர்த்து நடக்கவும் கேட்டுக்கொண்டார்.
நீங்கள் தற்போது கொண்டிருக்கும் இந்த வாழ்வு, உங்களுக்கு இன்பத்தைத் தாரது, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது, உங்களுக்கு ஆனந்தத்தைத் தாரது என்று மாஃபியாக் குற்றக் கும்பலுக்குக் கூறிய திருத்தந்தை,
பல்வேறு அழுக்கு நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் தற்போது கொண்டிருக்கும்
வல்லமையும் பணமும் பல மாஃபியாக் குற்றங்களிலிருந்து வந்த
இரத்தக்கறைப்படிந்த பணம், இரத்தக்கறைப்படிந்த சக்தி, இவற்றை உங்களால் அடுத்த வாழ்வுக்கு உங்களோடு எடுத்துச் செல்லமுடியாது என்றும் கூறினார்.
இதே பாதையில் நீங்கள் தொடர்ந்து சென்றால், உங்களுக்காகக் காத்திருக்கும் நரகத்தில் கொண்டுபோய் உங்களைச் சேர்க்கும், ஆனாலும் இப்பாதையைக் கைவிடுவதற்கு இன்னும் அவகாசம் உள்ளது, உங்களுக்கு அப்பாவும் அம்மாவும் இருக்கின்றனர், அவர்களை
நினைத்துப் பார்த்து சிறிது கண்ணீர் சிந்தி மனம் திரும்புங்கள் என்றும்
மாஃபியாக் குற்றக் கும்பலை நோக்கிக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இச்செப வழிபாட்டில் கலந்துகொண்டவர்களிடம், ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து நடத்துமாறும், அதற்கு இறைவன் சக்தியைத் தருவதற்கு ஒன்றிணைந்து செபிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாஃபியாக் குற்றக்கும்பலுக்கு எதிராக, இத்தாலியில் 1996ம் ஆண்டில் Libera என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது முதல், ஆண்டுதோறும், வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21ம் தேதியன்று, மாஃபியாக் குற்றக் கும்பலுக்குப் பலியாகியுள்ளவர்கள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மாஃபியாக் குற்றக் கும்பல், "நம்பிக்கையின் கொலையாளிகள்",Libera நிறுவனர்
மார்ச்,22,2014. இத்தாலிய மாஃபியாக் குற்றக்கும்பலுக்கு எதிராக 1996ம் ஆண்டில் Libera என்ற அமைப்பை உருவாக்கிய அருள்பணி Luigi Ciotti அவர்கள், இவ்வெள்ளி மாலை செப வழிபாட்டில் பேசியபோது, மாஃபியாக் குற்றக்கும்பல், "நம்பிக்கையின் கொலையாளிகள்" என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய அருள்பணி Ciotti, தாங்கள் ஒரு தந்தையைக் கண்டெடுத்துள்ளதாக நினைத்தோம், ஒரு சகோதரரையும் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறி, மாஃபியாக் குற்றக்கும்பலுக்குப் பலியாகியுள்ள பல்வேறு மக்கள் பற்றி விளக்கினார்.
மனித வணிகத்தில் சிக்கியிருந்த பெண்கள், நச்சுகலந்த கழிவுகளைச் சட்டத்துக்குப் புறம்பே வெளியேற்றும் தீமைக்கு உள்ளானவர்கள், போதைப்பொருள் தொடர்பான கடனைக் கட்ட முடியாததற்குப் பழிதீர்க்கும் விதமாக, கொல்லப்பட்ட 11 வயது Domenico Gabriele, 3 வயது Nicola Campolongo ஆகியோர் உட்பட பலர் குறித்த விபரங்களை எடுத்துச்சொன்னார் அருள்பணி Ciotti.
11 வயது Domenico Gabriele, 2009ம் ஆண்டில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டான்.
அருள்பணி Ciotti அவர்கள், ஏறக்குறைய 45 நிமிடங்கள் பேசினார். அப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலையைக் கவிழ்ந்தவண்ணம், கைகளைக் கூப்பிச் செபித்துக் கொண்டிருந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இத்தாலியின் இளம் அருள்சகோதரி ஒருவரின் அசத்தலான தொலைக்காட்சி நிகழ்ச்சி
மார்ச்,22,2014. இத்தாலியின் ஊர்சுலைன் திருக்குடும்பச் சபையைச் சேர்ந்த 25 வயது அருள்சகோதரி Cristina Scuccia, "The Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியின் நான்கு புகழ்பெற்ற நடுவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மார்ச் 19, இப்புதனன்று "The Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருள்சகோதரி Cristina, அமெரிக்கப் பாடகரும், கவிதை எழுதுபவரும், நடிகையுமான Alicia Keys அவர்களின் “No One” என்ற பாடலைப் பாடினார்.
பொதுவாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது நடுவர்கள், போட்டியாளரைப்
பார்க்காத வகையில் பின்பக்கமாகத் திரும்பியிருப்பார்கள். பாடுபவரின் குரல்
பிடித்திருந்தால் மட்டுமே அவர்கள் திரும்புவார்கள். அப்படி அவர்கள்
திரும்பிப் பார்த்தபோது ஓர் அருள்சகோதரி பாடிக்கொண்டிருப்பதையும், அவரது திறமையையும், துறவற ஆடையையும் கண்டு வியந்துள்ளனர்.
அருள்சகோதரி Cristina, இந்நிகழ்ச்சியில் பாட வந்ததற்கான காரணத்தையும், உண்மையிலேயே அவர் அருள்சகோதரி தானா எனவும் நடுவர்கள் கேட்டபோது, தான் உண்மையிலேயே, உண்மையிலேயே அருள்சகோதரிதான் எனவும், நான் பெற்றுள்ள இந்தக் கொடையைப் பகிர்ந்துகொண்டு நற்செய்தி அறிவிக்க வந்தேன் எனவும் கூறியுள்ளார்.
Raffaella Carra, J-Ax, Noemi, Piero Pelu ஆகிய நான்கு புகழ்பெற்ற இத்தாலியப் பாடகர்கள் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்தனர்.
அருள்சகோதரி Cristina, தனது திறமையை இத்தாலிய மக்களோடு பகிர்ந்துகொண்டது குறித்து திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்கள் டுவிட்டர் செய்தியில், உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள் என எழுதியுள்ளார்
(1 பேதுரு4:10)”.
ஆதாரம் : EWTN
8. இத்தாலிய அருள்பணியாளர் ஒருவருக்கு ஐ.நா. மக்கள்தொகை விருது
மார்ச்,22,2014.
மக்கள்தொகை மற்றும் நலவாழ்வுத் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப்
படைத்துள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அளிக்கப்படும் ஐக்கிய நாடுகள்
நிறுவனத்தின் 2014ம் ஆண்டின் மக்கள்தொகை விருது ஓர் இத்தாலிய கத்தோலிக்க
அருள்பணியாளருக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு தன்னார்வ நிறுவனத்துக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மக்கள்தொகை நிதி நிறுவனம்(UNFPA), 2014ம் ஆண்டின் மக்கள்தொகை விருதுக்கென, மருத்துவரான
அருள்பணியாளர் ஆல்தோ மார்க்கெசினி மற்றும் பன்னாட்டு மகப்பேறு மருத்துவக்
கல்விக்கான ஜான் ஹாப்கின்ஸ் தன்னார்வ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள்தொகை குறித்த விவகாரங்களில் பணியாற்றிவரும் அருள்பணியாளர் மார்க்கெசினி அவர்கள், ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் பல ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் என்றும், இவர் அந்நாட்டின் உள்நாட்டுப் போரின்போது பல தடவைகள் கடத்தப்பட்டார் மற்றும் சிறைசெய்யப்பட்டார் என்றும் UNFPA நிறுவனம் கூறியது.
மகப்பேறு
இறப்புக்களைத் தடுப்பதற்காக 1973ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜான் ஹாப்கின்ஸ்
நிறுவனம் ஏறக்குறைய 160 நாடுகளில் உதவிகளைச் செய்துள்ளது. இன்னும், மகப்பேறு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு விடயத்தில் 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.
1981ம் ஆண்டில் ஐ.நா.பொது அவையால் உருவாக்கப்பட்ட இவ்விருது வருகிற ஜூன் 12ம் தேதி ஐ.நா.வில் வழங்கப்படும்.
ஆதாரம் : UN
9. இந்தியா, சிங்கப்பூர் நீர் நிறுவனங்களுக்கு 2014ம் ஆண்டின் வாழ்வுக்கான தண்ணீர் விருது
மார்ச்,22,2014.
தண்ணீர் வளங்களைச் சிறந்த விதமாகக் கையாள்கின்றவர்களுக்கு வழங்கப்படும்
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2014ம் ஆண்டின் வாழ்வுக்கான தண்ணீர் விருது, ஓர் இந்திய மற்றும் ஒரு சிங்கப்பூர் நீர் நிர்வாக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்விருது அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் டாட்டா தண்ணீர்க் கொள்கைத் திட்டத்தின், பன்னாட்டு நீர் நிர்வாக நிறுவனமும்(IWMI), சிங்கப்பூர் “NE தண்ணீர்த் திட்ட அமைப்பும் இவ்விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் “NE தண்ணீர்த் திட்ட அமைப்பு, சிங்கப்பூரின் அன்றாடத் தண்ணீர்த் தேவைகளில் 30 விழுக்காட்டுத் தேவையை நிறைவு செய்கின்றது.
ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதியன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
ஆதாரம் : UN
10. "உலகிலேயே குற்றங்கள் நிறைந்த நகரம் பாக்தாத்'
மார்ச்,22,2014. அரபு நாடுகளுக்கு எடுத்துக்காட்டான நகரம் என்ற பாராட்டைப் பெற்றிருந்த பாக்தாத் நகரம், தற்போது குற்றங்கள் அதிகம் நிகழும் மோசமான நகரமாக மாறிவிட்டது என்று மெர்சர் கன்சல்டிங் நிறுவனம் விமர்சித்துள்ளது.
உலகின் 239 நகரங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம், அரசியல் நிலைத்தன்மை, குற்றங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றின் அடிப்படையில் அண்மையில் ஆய்வு நடத்திய மெர்சர் கன்சல்டிங் நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.
பாக்தாதில் தீவிரவாதிகளின் தாக்குதல், கடுமையான மின்தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, மோசமான நிலையில் கழிவுநீர் அமைப்புகள், ஊழல்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தினந்தோறும் சந்திப்பதாக ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாக்தாதில் செய்தித்தாள் விற்கும் ஹமீது என்பவர் கூறுகையில், "செல்வந்தராக
இருந்தாலும் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற பீதியிலேயே மக்கள்
இருக்கிறார்கள். மரணம் எந்த நேரத்திலும் வரும் என்ற அச்சத்துடனே நாங்கள்
வாழ்ந்து வருகிறோம்' என்று கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment