Saturday, 22 March 2014

செய்திகள் - 21.03.14

செய்திகள் - 21.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. மால்ட்டா அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தையைக் கொலை செய்யாதீர்கள்

3. நோயையும், இறப்பையும் இயேசுவின் பிரசன்னத்தில் எதிர்கொள்ள வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

4. உலகின் மிகப்பெரிய தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், Fortune இதழ்

5. வத்திக்கான் நூலகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அபூர்வக் கையெழுத்துப் பிரதிகள், 2018ம் ஆண்டுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்குத் திட்டம்

6. பாகிஸ்தானில் இந்துமதத் திருத்தலம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்

7. இப்பூமியின் நுரையீரல்களான காடுகளைப் பாதுகாப்பதற்கு பான் கி மூன் வலியுறுத்தல் 

8. இனப்பாகுபாட்டைத் தூண்டும் அனைத்துச் செயல்களை விட்டொழிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

9. அனைத்துலக மகிழ்ச்சி நாளில் வறுமையை ஒழிக்க அனைவருக்கும் அழைப்பு, ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. மால்ட்டா அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு

மார்ச்,21,2014. மால்ட்டா அரசுத்தலைவர் George Abela அவர்கள் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி  ஆகிய இருவரையும் சந்தித்தார் மால்ட்டா அரசுத்தலைவர் Abela.
மால்ட்டா மக்களின் வரலாற்றிலும், கலாச்சாரத்திலும், வாழ்விலும் வேரூன்றியுள்ள கிறிஸ்தவத்தின் ஆழமான சுவடுகள் பற்றியும், திருப்பீடத்துக்கும் மால்ட்டாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் நினைவுகூரப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர் மால்ட்டாவுக்கு மேற்கொண்ட திருப்பயணங்கள், மால்ட்டாவில் கல்வி, நலவாழ்வு உட்பட பொதுப்பணித்துறைகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாக அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மால்ட்டாவின் பங்கு, இன்னும், மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை, ஐரோப்பாவுக்கு வரும் குடியேற்றதாரரின் நிலைமை போன்ற தலைப்புகளும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவார்த்தையைக் கொலை செய்யாதீர்கள்

மார்ச்,21,2014  நம் இதயங்களில் இறைவார்த்தையைக் கொலை செய்யாதிருப்பதற்கு, நாம் தாழ்மையுள்ளவர்களாகவும், செபிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளி காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கொடிய குத்தகைக்காரர் உவமை குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்த உவமையில் வரும் பரிசேயர்களும், மூப்பர்களும், குருக்களும் இறைவார்த்தைக்குத் தங்கள் இதயங்களைத் திறக்காமல் இருந்ததால்  தவறிழைத்தனர் எனக் கூறினார்.
இந்த மக்களின் நடவடிக்கைகள் நம் நடவடிக்கைகளாகவும் இருக்கின்றன எனவும், இந்த மக்களின் சொந்த ஆதாயங்கள், சொந்தக் கருத்துக்கள் ஆகியவற்றின்படி இறைவார்த்தை இருந்தது எனவும், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம்போல் செய்தனர், இது அவர்கள் கொலை செய்வதற்கும் இட்டுச் சென்றது எனவும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர் தாழ்ச்சியுடன் இல்லாவிட்டால், அவர் செபிக்காவிட்டால்  இறைவார்த்தையை தனது விருப்பப்படி அமைக்கும் ஆபத்தை அவர் எதிர்கொள்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இறைவார்த்தையைக் கொலை செய்யாதிருப்பதற்கும், தூய ஆவியை அணைத்துவிடாதிருக்கவும் முதலில் நாம் தாழ்ச்சியுடன் இருக்க வேண்டும், இரண்டாவது நாம் செபிக்க வேண்டுமென்றும்    கூறினார்.
தாழ்ச்சியுடனும், செபத்துடனும் இறைவார்த்தையை நாம் கேட்டு அதற்குப் பணிந்து நடக்க வேண்டும், திருஅவையில் தாழ்ச்சியும், செபமும் அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. நோயையும், இறப்பையும் இயேசுவின் பிரசன்னத்தில் எதிர்கொள்ள வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,21,2014. நோயும், இறப்பும் முட்டுக்கட்டைகள் அல்ல, அவை உண்மையானவை, அவற்றை இயேசுவின் பிரசன்னத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், பிரான்ஸ் நாட்டின் L’Arche” பிறரன்புக் குழுவின் நிறுவனர் Jean Vanier அவர்களையும் இவ்வெள்ளியன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1964ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட L’Arche” பிறரன்புக் குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகின்றது. 
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி மாலை உரோம் புனித 7ம் கிரகரி ஆலயம் சென்று, மாஃபியா குற்றக்கும்பலின் வன்முறைக்குப் பலியானவர்களின் 700 குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உலகின் மிகப்பெரிய தலைவர்திருத்தந்தை பிரான்சிஸ், Fortune இதழ்

மார்ச்,21,2014. மனிதர் தலைமைப் பதவிக்காக ஏங்கும் இந்த உலகில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை உலகின் மிகப்பெரிய தலைவர்எனப் பெயரிட்டுள்ளது உலகளாவிய வணிக இதழான Fortune.
உலகில் மிகவும் புகழ்பெற்றுள்ளவர்கள், சிறிதளவு புகழ்பெற்றுள்ளவர்கள் எனப் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பது பேரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது Fortune இதழ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து திருஅவைக்குப் பெரும் உந்துசக்தியாக விளங்குகின்றார் மற்றும், மிகுந்த உயிரூட்டத்துடன் புதிய வழிகளை அமைப்பதன் மூலம், கத்தோலிக்கரல்லாத பெருமளவான மக்களைக் கவர்ந்து வருகிறார் என்று பாராட்டியுள்ளது Fortune இதழ்.
தற்போது ஏழைகளுக்கு உதவி செய்யும் கத்தோலிக்கரின் எண்ணிக்கை நான்கு பேருக்கு ஒருவர் வீதம் உள்ளது என்றும், இந்தப் பிறரன்புச் செயல் அதிகரித்து வருவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 77 விழுக்காடு காரணம் என்றும் இந்த மார்ச் மாதத்தில் எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்திருப்பதாக Fortune இதழ் அறிவித்துள்ளது.
Time இதழ் நிறுவனத்தால் 1930ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Fortune இதழ், உலகளாவிய வணிக இதழாகும். இது வாரம் இருமுறை பிரசுரமாகின்றது.

ஆதாரம் : Zenit

5. வத்திக்கான் நூலகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அபூர்வக் கையெழுத்துப் பிரதிகள், 2018ம் ஆண்டுவரை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்குத் திட்டம்

மார்ச்,21,2014. வத்திக்கான் நூலகத்திலுள்ள ஆயிரக்கணக்கான அபூர்வக் கையெழுத்துப் பிரதிகளை இணையத்தளத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாள்வரை வல்லுனர்கள் மட்டுமே பார்த்துவந்த இந்தப் பிரதிகளை மற்றவர்களும் பார்ப்பதற்கு வசதியாக, ஜப்பான் கனணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக, வத்திக்கான் நூலக அதிகாரிகள் அறிவித்தனர்.
15 ஆயிரம் அபூர்வக் கையெழுத்துப் பிரதிகளை 2018ம் ஆண்டுவரை இலவசமாகப் பார்ப்பதற்கு வத்திக்கான் நூலகம் வசதி செய்துள்ளது.
15ம் நூற்றாண்டில் திருத்தந்தை 5ம் நிக்கோலாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில், கிறிஸ்தவத்தின் தொடக்ககால நூற்றாண்டுகள் முதல் எழுதப்பட்ட ஏறக்குறைய 82 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.

ஆதாரம் : CNS

6. பாகிஸ்தானில் இந்துமதத் திருத்தலம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்
 
மார்ச்,21,2014. பாகிஸ்தானில் இந்து சமயத்தவர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியபோது அவர்களின் கோவில்கள் தாக்கப்பட்டதற்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு.
பாகிஸ்தானில் இடம்பெறும் சமய சகிப்பற்றதன்மையுடன்கூடிய நடவடிக்கைக்கு எதிராகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள, தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு, பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் வழிபாட்டுத்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளது.
இம்மாதம் 15ம் தேதி சிந்து மாநிலத்தின் Larkanaவிலுள்ள இந்து மதத்தவரின் திருத்தலமான "Dharam Shala"வில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டபோது இசுலாம் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்து மதத்தவர் தெய்வநிந்தனை செய்கின்றனர் என்று குறைகூறி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் இசுலாம் தீவிரவாதிகள்

ஆதாரம் : Fides                          

7. இப்பூமியின் நுரையீரல்களான காடுகளைப் பாதுகாப்பதற்கு பான் கி மூன் வலியுறுத்தல் 

மார்ச்,21,2014. உலகின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உயிர்நாடியாக விளங்கும் காடுகளைப் பாதுகாப்பதற்கு அனைவரும் உறுதி எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
மார்ச் 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக காடுகள் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், காடுகள் இப்பூமியின் நுரையீரல்களாக உள்ளன, இவை இப்பூமியின் மூன்றில் ஒரு பகுதியை ஆக்ரமித்து, பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காட்டுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
இவ்வுலகில், 160 கோடிப் பேர் தங்களின் உணவுக்கும், எரிபொருளுக்கும், வருவாய்க்கும் காடுகளை நம்பி வாழ்கின்றனர் எனவும், 65 முதல் 80  விழுக்காட்டு மக்கள், காடுகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைச் சார்ந்துள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுவதாகவும் பான் கி மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் ஏழைகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பொருளாதாரத்துக்குக் காடுகள் உதவுகின்றன எனவும், இவற்றைப் பாதுகாப்பதற்கு மனித சமுதாயம் முனைப்போடு செயல்படுமாறும் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.

ஆதாரம் : UN              

8. இனப்பாகுபாட்டைத் தூண்டும் அனைத்துச் செயல்களை விட்டொழிக்குமாறு ஐ.நா. வேண்டுகோள்

மார்ச்,21,2014. மார்ச் 21, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, அனைத்துலக இனப் பாகுபாட்டு ஒழிப்பு நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இனப்பாகுபாட்டின் அடிப்படையில் வெளியாகும் அனைத்து செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் எதிராக, அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் வன்மையாய்க் கண்டனம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவுக்குப் பின்னர் இந்த உலக நாளை முதன்முதலில் கடைப்பிடிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ள பான் கி மூன், மண்டேலாவின் இனப்பாகுபாட்டுக்கு எதிரான செயல்கள் அவரை 27 வருடங்கள் சிறையில் வைத்திருந்தன என்றும் கூறியுள்ளார்.
அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்று உறுதியாகப் போராடிய தென்னாப்ரிக்க கறுப்பின மக்களின் வாழ்விலிருந்து உலகினர் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
இனப்பாகுபாடு ஆபத்தான அச்சுறுத்தல் என்பதை நாம் ஏற்கும் அதேவேளை, ஒரே மனிதக் குடும்பத்தின் வளமையான பன்மைத்தன்மையை உரையாடல் மூலம் மதித்து, பாதுகாத்துப் பேணுவோம் எனவும் தனது செய்தியில் கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர். 

ஆதாரம் : UN              

9. அனைத்துலக மகிழ்ச்சி நாளில் வறுமையை ஒழிக்க அனைவருக்கும் அழைப்பு, ஐ.நா.

மார்ச்,21,2014. அனைத்துலக மகிழ்ச்சி நாளில் உலக மக்கள் அனைவரும் வறுமையை ஒழிக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது ஐ.நா.நிறுவனம்.
மார்ச் 20 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகிழ்ச்சி நாளையொட்டி இவ்வேண்டுகோளை முன்வைத்த ஐ.நா. அதிகாரிகள், கலாச்சாரங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமூகத்தில் யாரும் ஒதுக்கப்படாமல் அனைவரையும் ஒன்றிணைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளனர்.
பூட்டான் நாட்டின் முயற்சியினால் 2012ம் ஆண்டு ஏப்ரலில் ஐ.நா. உயர்மட்டக்குழு  அனைத்துலக மகிழ்ச்சி நாளுக்கு ஒப்புதல் அளித்தது. அதே ஆண்டு ஜூலையில் மார்ச் 20ம் தேதியை அனைத்துலக மகிழ்ச்சி நாளாகச் சிறப்பிக்கவும் இசைவு தெரிவித்தது ஐ.நா.

ஆதாரம் : UN                              

No comments:

Post a Comment