செய்திகள் - 19.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஷிமோகா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - இயேசு சபை அருள் பணியாளர் பிரான்சிஸ் செராவோ
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியில் முதலிடம் பெறுவது வறியோர் - கர்தினால் Marc Ouellet
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணி நிறைவுக்கு, கனடா நாட்டு ஆயர்கள் அனுப்பியுள்ள மடல்
4. துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், அமைதி விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - கர்தினால் Sandri
5. திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளையின் அரியதொரு பரிசு - அவர் எழுதிய நாள் குறிப்பேடுகள்
6. இலங்கையில் கைதுசெய்யப்பட்ட அருள் பணியாளர் பிரவீன் மகேசன் விடுதலை
7. தியாகம், செபம், கருணை பற்றி பங்களாதேஷ் ஆயர்கள் விடுத்துள்ள தவக்கால சுற்றுமடல்
8. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பழமைவாய்ந்த நோய் - புற்றுநோய்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஷிமோகா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - இயேசு சபை அருள் பணியாளர் பிரான்சிஸ் செராவோ
மார்ச்,19,2014. இயேசு சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் பிரான்சிஸ் செராவோ அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் ஷிமோகா மறைமாவட்டத்தின் ஆயராக இப்புதனன்று நியமித்துள்ளார்.
1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மங்களூருக்கு அருகேயுள்ள மூத்பித்ரி (Moodbidri) என்ற ஊரில் பிறந்த பிரான்சிஸ், தன் 20ம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
1992ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பிரான்சிஸ் அவர்கள், பங்குத்தளங்களிலும், சமூகப் பணி மையத்திலும், அருள் பணியாளர்கள் பயிற்சி இல்லத்திலும் 17 ஆண்டுகள் பணிபுரிந்தபின், 2009ம் ஆண்டு முதல் கர்நாடகா இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஷிமோகா மறைமாவட்டத்தின் ஆயர் ஜெரால்ட் ஐசக் லோபோ அவர்கள், 2012ம் ஆண்டு ஜூலை மாதம், உடுப்பி மறைமாவட்டத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர், ஷிமோகா மறைமாவட்டம் ஆயர் இன்றி இருந்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியில் முதலிடம் பெறுவது வறியோர் - கர்தினால் Marc Ouellet
மார்ச்,19,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆண்டு பணியைத் திரும்பிப் பார்க்கும்போது, வறியோர், இளையோர், குடும்பத்தினர் என்ற மூன்று வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் 13, மற்றும் மார்ச் 19, ஆகிய நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நாள், தலைமைப் பணியேற்ற நாள் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவைக் கொண்டாட, இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில், ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
தன் தலைமைப் பணியில் முதலிடம் பெறுவது வறியோர் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் குறித்து எழுப்பும் கருத்துக்கள் பல, உலக அமைப்பினர் பலரைச் சங்கடப்படுத்துவதையும் நாம் உணர முடிகிறது என்று கர்தினால் Ouellet அவர்கள் கூறினார்.
இளையோருக்கும், குடும்பத்தினருக்கும் திருத்தந்தை அளித்துள்ள முக்கியத்துவத்தை அவர் அளித்துள்ள உரைகளிலும், விடுத்துள்ள திருத்தூது அறிவுரையிலும் காண முடிகிறது என்று கர்தினால் Ouellet அவர்கள் எடுத்துரைத்தார்.
"மரியா என்ற ஒரு பெண், திருஅவையின் ஆயர்கள் அனைவரையும் விட முக்கியமானவர்" என்று திருத்தந்தை கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Ouellet அவர்கள், பெண்களுக்கு அளித்துள்ள மதிப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது முதல் ஆண்டு பணியில் உணரமுடிகிறது என்று கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு பணி நிறைவுக்கு, கனடா நாட்டு ஆயர்கள் அனுப்பியுள்ள மடல்
மார்ச்,19,2014. கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில் முதல் முறையாக மக்கள் முன் நீங்கள் தோன்றியபோது உங்களிடம் காணப்பட்ட எளிமையும், மக்களிடம் செபத்திற்காக நீங்கள் அளித்த விண்ணப்பமும், உங்கள்
புன்னகையும் எங்கள் மதிப்பையும் அன்பையும் உங்களுக்குப் பெற்றுத்தந்தன
என்று கனடா நாட்டு ஆயர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு
அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளனர்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் முதல் ஆண்டு பணியை நிறைவு செய்யும் வேளையில்
அவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Paul-André Durocher அவர்கள், திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் முக்கியமான பணிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பும், செபங்களும் உறுதியாக உண்டு என்று கூறியுள்ளார்.
குடும்பங்களை மையப்படுத்திய இரு சிறப்பு மாமன்றங்கள், அர்ப்பண வாழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஆண்டு, வத்திக்கான்
உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் என்று திருத்தந்தை
அறிவித்துள்ள முக்கியமான பணிகளில் தாங்களும் திருத்தந்தையுடன் இணைவதாக
இம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடன்பிறந்தோர்
என்ற உணர்வு இவ்வுலகில் வளர திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து
முயற்சிகளும் பலன் தர தங்கள் சிறப்புச் செபங்கள் உண்டு என்ற உறுதியுடன்
கனடா ஆயர்களின் மடல் நிறைவு பெறுகிறது.
ஆதாரம் : Zenit
4. துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், அமைதி விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் - கர்தினால் Sandri
மார்ச்,19,2014. பல்வேறு காரணங்களுக்காக உலகின் பல நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், நான் பெற்றுள்ள இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Ducci அறக்கட்டளை, மார்ச் 18, இச்செவ்வாய் மாலை, 2014ம் ஆண்டுக்கான அமைதி விருதுகளை உரோம் நகரில் வழங்கியபோது, அவ்விருதுகளைப் பெற்றவர்களில் ஒருவரான கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் இவ்வாறு கூறினார்.
உரோமையின் ஆயரும், திருஅவையின் தலைவருமான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பிலும், கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் சார்பிலும் இவ்விருதைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய கர்தினால் Sandri அவர்கள், தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக உலகெங்கும் துன்புறும் மக்களுக்கு, குறிப்பாக, உக்ரைன், ஈராக், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளின் மக்களுக்கு இவ்விருதை தான் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
கலாச்சாரங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரில் தலைசிறந்தவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக Ducci அறக்கட்டளை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.
2014ம் ஆண்டுக்கான இவ்விருதுகளை, சிரியாவின் இஸ்லாமியத் தலைவர் Ahmad Badr Al-Din Hassoun அவர்களுக்கும், அமைதி ஆர்வலரும், எழுத்தாளருமான Manuela Dviri அவர்களுக்கும் Ducci அறக்கட்டளை வழங்கியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளையின் அரியதொரு பரிசு - அவர் எழுதிய நாள் குறிப்பேடுகள்
மார்ச்,19,2014. ஏப்ரல் மாதம் இறுதி ஞாயிறான 27ம் தேதியன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்படும் தருணத்தையொட்டி, திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளை அரியதொரு பரிசை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
1895ம் ஆண்டு Angelo Roncalli என்ற இளைஞர் எழுத ஆரம்பித்த நாள் குறிப்பேடுகள், 1963ம் ஆண்டில், 23ம்
ஜான் என்ற பெயருடன் அவர் திருத்தந்தையாக மறைந்த காலம் வரையில் தொடர்ந்தன.
இந்த நாள் குறிப்பேடுகளின் தொகுப்பு 10 நூல்களாக திருத்தந்தை 23ம் ஜான்
அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது.
முத்திப்பேறு
பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய நாள் குறிப்பேடுகளை பல்வேறு
நாடுகளில் இயங்கும் வத்திக்கான் தூதரகங்களுக்கும், நூலகங்களுக்கும் பரிசாக அளிக்க திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. இலங்கையில் கைதுசெய்யப்பட்ட அருள் பணியாளர் பிரவீன் மகேசன் விடுதலை
மார்ச்,19,2014.
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் மார்ச் 16ம் தேதி
காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட அருள் பணியாளர் பிரவீன் மகேசன் அவர்களும், சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்களும் மார்ச் 19, இப்புதனன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவையும், இன்னும்
பல சமுதாய அமைப்புக்களும் தங்களுக்கு அளித்த ஆதரவால் தாங்கள் விடுதலை
அடைந்துள்ளோம் என்று அருள் பணியாளர் மகேசன் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த
பேட்டியில் குறிப்பிட்டு, தன் நன்றியைக் கூறினார்.
இறைவனின் கருணையாலும், மக்களின் செபங்களாலும் தானும், அருள் பணியாளரும் விடுதலை செய்யப்பட்டுள்ளோம் என்று கூறிய சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்கள், சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ள தன் நண்பர்களுக்கு அரசினால் வரக்கூடிய தொல்லைகள் தீரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தங்களுக்குக் கிடைத்த ஆதரவைப் போல, தகுந்த
காரணங்கள் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலருக்கும் நீதி கிடைக்க
மக்கள் ஆதரவு தருவர் என்று தான் நம்புவதாகவும் சமுதாய ஆர்வலர் ருக்கி
பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார்.
அருள் பணியாளர் பிரவீன் மகேசன் அவர்களும், சமுதாய ஆர்வலர் ருக்கி பெர்னாண்டஸ் அவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாகக் கைதான, சமுதாய ஆர்வலர் ஜெயக்குமாரி பாலேந்திரன் அவர்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்கச் சென்றிருந்தபோது கைதாயினர்.
ஜெயக்குமாரி அவர்கள் இன்னும் தடுப்புக் காவலிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
7. தியாகம், செபம், கருணை பற்றி பங்களாதேஷ் ஆயர்கள் விடுத்துள்ள தவக்கால சுற்றுமடல்
மார்ச்,19,2014. தியாகம், செபம், கருணை ஆகிய மூன்று வழிகளில் நம்மையே புனிதமாக்கும் ஒரு தருணம் தவக்காலம் என்று பங்களாதேஷ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
"அன்புப் பணியே நம்பிக்கையின் கனி" என்ற தலைப்பில், பங்களாதேஷ் ஆயர்கள் விடுத்துள்ள தவக்கால சுற்றுமடலில், தியாகம், செபம், கருணை ஆகிய வழிகளில் புனிதத்தை நோக்கி செல்லமுடியும் என்று கூறியுள்ளனர்.
வறியோர் மட்டில் அதிக அக்கறை காட்டும் செயல்பாடுகளில் குழந்தைகளையும், இளையோரையும் ஈடுபடுத்த, தவக்காலத்தில், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நம்
உள்ளங்களில் இருக்கும் பகைமை உணர்வுகளைக் களைவதால் மட்டுமே சமுதாயத்தில்
உள்ள பகைமையை நம்மால் களையமுடியும் என்று ஆயர்கள் தவக்கால மடலில்
வலியுறுத்தியுள்ளனர்.
ஆதாரம் : AsiaNews
8. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பழமைவாய்ந்த நோய் - புற்றுநோய்
மார்ச்,19,2014.
தற்போதைய வட சுடான் பகுதியில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர்
இளைஞனின் எலும்புக் கூட்டில் புற்றுநோய்க்கான சான்றுகளை
கண்டுபிடித்துள்ளதாக பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் மிக பழமையான புற்றுநோய் பாதிப்பு என்று இதுவரை நம்பப்படும் சம்பவத்தை விட இது 2000 ஆண்டுகள் பழமையானதாகும்.
கி.மு.
1200ம் ஆண்டைச் சார்ந்தது என்று கருதப்படும் ஓர் எலும்புக்கூட்டின்
எலும்புகளில் காணப்படும் துளைகள் ஒரு வகையான புற்றுநோய்க்கான சான்று
என்றும் மிகெலா பிண்டர் (Michaela Binder) என்ற ஆய்வாளர் கண்டறிந்துள்ளார்.
‘பிலொஸ் ஒன்’ (Plos One) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, புற்றுநோய் என்பது முற்றிலும் ஒரு நவீன கால நோய் அல்ல என்று தெரிவிக்கின்றது.
மேலும், ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக இந்த நோய் எவ்வாறு பரிணமித்திருக்கிறது என்பதை அறிவியலாளர்கள்
கண்காணிக்கவும் இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment