ஐரோப்பாவின் மிதக்கும் நகரம் வெனிஸ் நீரில் மூழ்குகிறது:விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்
ஐரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு. நகரெங்கும் குறுக்கும், நெடுக்கும் ஓடும் கால்வாய்களே இந்நகரத்தின் முக்கியப் போக்குவரத்து வழியாகத் திகழுகின்றது.இந்த நகரம் ஆண்டுதோறும் தண்ணீருக்குள் மூழ்கி வருகின்றது என்ற உண்மையை நவீன செயற்கைக்கோள்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் தற்போது தெளிவுபடுத்தியுள்ளனர். மனித நடவடிக்கைகளால் இந்த நகரம் ஆண்டுதோறும் 2 முதல் 10 மி.மீ வரை மூழ்கி வரும்போது இயற்கையாகவும் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 1 மி.மீ வரை மூழ்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு விதத்திலும் தோன்றும் அளவுகளின் வேறுபாடுகளையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.ஏற்கெனவே ஆண்டிற்கு நான்கு முறை அதிகரித்து வரும் நீர்மட்டத்தால் நகருக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அருகில் உள்ள கடல்நீரின் மட்டம் உயருவது வெனிஸ் நகரத்தைப் பாதிக்கும் என்பதால் இதுகுறித்த தொடர் கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இத்தாலியின் படுவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான பியட்ரோ டீட்டினி தெரிவித்தார்.
வெனிஸ் நகரின் நிலத்தடி நீர் வெளியேற்றப்படும்போது நகரம் கீழிறங்குவதை பத்து வருடங்களுக்கு முன்னர்தான் விஞ்ஞானிகள் உணர்ந்தனர். அதன்பிறகு இந்த நடைமுறைகளை முற்றிலுமாக நிறுத்திய பின்னரும் நகரம் தொடர்ந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதன் பின்னரே இரண்டு செயற்கைக் கோள்கள் மூலம் கண்காணித்து மேற்கண்ட தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். முதலாவது செயற்கைக்கோள் மூலம் பெறும் தகவல்கள் கொண்டு மாதம் ஒருமுறை இவர்கள் அறிக்கைகள் தயார் செய்யும்போது, இரண்டாவது நவீன செயற்கைக்கோள் மூலம் பத்து நாட்களுக்கு ஒருமுறை இவர்கள் நீர்மட்டம் குறித்த தகவல்களைப் பெறுகின்றனர்.
No comments:
Post a Comment