Tuesday 29 October 2013

செய்திகள் - 26.10.13

செய்திகள் - 26.10.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள கொடைகளுக்கு, திருத்தந்தையின் நன்றி

2. திருத்தந்தையுடன் பானமா அரசுத்தலைவர் சந்திப்பு

3. உருகுவாய் இயேசுசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள மாணவர்களுடன் திருத்தந்தை

4. 'உலகளாவிய பாராமுகம்' குறித்த திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

5. வத்திக்கானில் குடும்பங்களை மையப்படுத்திய இருநாள் கொண்டாட்டங்கள்

6. மதததலைவர்களின் இறைவாக்குரைக்கும் பணி இலங்கையில் தேவைப்படுகிறது, அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்

7. வியட்நாமில் இரு கத்தோலிக்க மனித உரிமை நடவடிக்கையாளர்களுக்கு 7 மாத சிறைத்தண்டனை

8. இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு மிக மோசமான காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலக நலவாழ்வு நிறுவனம்

------------------------------------------------------------------------------------------------------

1. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருஅவைக்கு வழங்கியுள்ள கொடைகளுக்கு, திருத்தந்தையின் நன்றி

அக்.26,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 'நாசரேத்தூர் இயேசு என்ற தன் புத்தகங்கள் வழியாக திருஅவைக்கு வழங்கிய தனிச்சிறப்புமிக்கக் கொடையை நன்றியுடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயரால் திருஅவையில் வழங்கப்படும் விருதை, இச்சனிக்கிழமையன்று பேராசிரியர் Christian Schaller அவர்களுக்கு வழங்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் மனச்சான்றில் ஒலித்த இறைவனின் குரலுக்கு எப்போதும் செவிசாய்த்தவராக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார்.
பல ஆண்டுகளாக தான் மேற்கொண்ட ஆய்வு, செபம், இறையியல் கருத்துமோதலகள் போன்றவை மூலம் பெறப்பட்ட எண்ணங்களை திருஅவைக்கும் அனைத்து மனிதர்களுக்கும், முன்னாள் திருத்தந்தை ஒரு கொடையாக வழங்கியுள்ளார் என்றார் திருத்தந்தை பிர்ரன்சிஸ்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் புத்தகத்தை வாசித்தவர்கள் பலர் தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தியுள்ளனர் என்பதையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புத்தகங்கள் வழியாக, முதன்முறையாக நற்செய்தியின் மீது, குறிப்பாக இறையியல் மற்றும் வரலாற்றுக்கிடையே நிலவும் தொடர்பு குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதைக் காணமுடிகிறது எனவும் தெரிவித்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையுடன் பானமா அரசுத்தலைவர் சந்திப்பு

அக்.26,2013. பானமா அரசுத்தலைவர் Ricardo Alberto Martinelli Berrocalஅவர்களுக்கும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இடையே, இச்சனிக்கிழமையன்று காலை திருப்பீடத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப்பின், நாடுகளிடையேயான உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார் பானமா அரசுத்தலைவர்.
திருப்பீடத்தில் அரசுத்தலைவர் நடத்திய சந்திப்பில், வத்திக்கானுக்கும் பானமா நாட்டிற்கும் இடையேயான நல்லுறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அரசுத்தலைவரும் திருத்தந்தையும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டபின், வத்திக்கான தோட்டத்தில் வைப்பதற்கென பானமா அரசுத்தலவர், La Antigua மரியன்னை திருஉருவச்சிலையை வழங்கியுள்ளதற்கு திருத்தந்தையால் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. உருகுவாய் இயேசுசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள மாணவர்களுடன் திருத்தந்தை

அக்.26,2013. உருகுவாய் நாட்டோடு தான் கொண்டுள்ள உறவை நினைவுகூரும்போது, இச்சந்திப்பு வாக்குறுதி மற்றும் நம்பிக்கையின் ஓர் அடையாளமாக இருப்பதாக உருகுவாயிலிருந்து வந்திருந்த இயேசுசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்த நிகழ்ச்சியின்போது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உருகுவாய் இயேசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகளாக வந்திருந்த ஏறத்தாழ முப்பது பேரையும் அவர்களுடன் வந்திருந்த சிறார்களையும் இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிர்ரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருகுவாய் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு இருக்கும் வாய்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் திருப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால், அது சிலே மற்றும் உருகுவாய் நாடுகளுக்கான திருப்பயணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

4. 'உலகளாவிய பாராமுகம்' குறித்த திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

அக்.26,2013. பிறரைக்குறித்துக் கவலைப்படாத பாராமுகம் என்பது உலகமயமாக்கப்பட்டிருப்பதில் நாமும் மிக அதிக வேளைகளில் பங்குபெற்றுள்ளோம். அதற்குப் பதிலாக நாம், உலகளாவிய ஒருமைப்பாட்டு உணர்வுக்கு முயல்வோமாக' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில் திருப்பீடச்செயலகமும் தன் டுவிட்டர் பக்கத்தில் 'நம் உலகம் ஒன்றையொன்று சார்ந்துள்ளது, மற்றும், ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது எனபதை நினைவில்கொண்டு, உலகளாவிய பாராமுகத்தை ஒதுக்கிவைப்போம் என எழுதியுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

5. வத்திக்கானில் குடும்பங்களை மையப்படுத்திய இருநாள் கொண்டாட்டங்கள்

அக்.26,2013. 'குடும்ப‌மே, விசுவாச‌த்தின் ம‌கிழ்வில் வாழ்வாயாக' என்ற‌ தலைப்பில் இச்ச‌னி, ம‌ற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரு நாள் கொண்டாட்ட‌ங்க‌ள் உரோம் ந‌க‌ரில் இட‌ம்பெற்றுவ‌ருகின்ற‌ன‌.
தூய‌ பேதுருவின் க‌ல்ல‌றையை குடும்ப‌ங்க‌ள் த‌ரிசிப்ப‌தோடு துவ‌ங்கியுள்ள‌ இந்த‌ விழாக்கொண்டாட்ட‌ங்க‌ளில் திருத்த‌ந்தையும் ப‌ங்கேற்றுவ‌ருகிறார்.
திருப்பீட‌த்தின் குடும்ப‌ப்பணி அவையால் ஏற்பாடுச் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இந்த‌க் கொண்டாட்ட‌ங்க‌ளையொட்டி, சிறார்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌ங்க‌ளைப்ப‌ற்றி ஓவிய‌ம் வ‌ரைந்து திருத்த‌ந்தைக்கு அனுப்ப‌வும், இளையோர் த‌ங்க‌ள் திற‌மைக‌ளை, பாட‌ல்க‌ள் ம‌ற்றும் மேடை நிக‌ழ்ச்சிக‌ள் மூல‌ம் வெளிப்ப‌டுத்த‌வும் ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌ட்டுள்ளது.
இச்சனிக்கிழமையன்று உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்கு தியானம், இசை, சாட்சிபகர்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்களில், 4.30 மணியளவில் திருத்தந்தையும் வந்து கலந்துகொண்டார்.
இஞ்ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு செபமாலை செபித்தல், 10.30 மணிக்கு திருத்தந்தையின் திருப்பலி மற்றும் நண்பகல் மூவேளை செப உரை ஆகியவைகளுடன் குடும்பங்களூக்கான இக்கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வரும்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

6. மதததலைவர்களின் இறைவாக்குரைக்கும் பணி இலங்கையில் தேவைப்படுகிறது, அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்

அக்.26,2013. ஒப்புரவை உருவாக்க இலங்கை அரசு தவறியுள்ள வேளையில், மதத்தலைவர்களின் இறைவாக்குரைக்கும் பணி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார், உலகத்தமிழர் அமைப்பின் தலைவர் அருள் பணியாளர் எஸ்.ஜே.இம்மானுவேல்.
ஒப்புரவு மற்றும் மறுகட்டுமானப்பணிகள் குறித்து சிறிதும் கவலைப்படாத இலங்கை அரசு, உள்நாட்டுப் போர்வெற்றியைக் கொண்டாடும் நோக்கத்தில், வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு, போர்வெற்றி நினைவுச்சின்னங்களையும், இராணுவ முகாம்களையும் அமைப்பதிலேயே கவனம் செலுத்திவருகிறது என குற்றம் சாட்டிய அட்ருட்தந்தை, போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டித்தரவேண்டியது அரசின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழர்களின் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது குறித்த கவலையையும் வெளியிட்ட அருள் பணியாளர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், மதத்தலைவர்களும் சமூகத்தலைவர்களும் அச்சமின்றி உண்மையை அரசிடம் எடுத்துரைக்கும் தங்கள் கடமையை நிறைவேற்றும்போதே, இனங்களிடையே இணக்கவாழ்வு சாத்தியமாகும் என மேலும் உரைத்தார்.
இலங்கைத்தமிழர்களின் நல்வாழ்விற்காகவும், அனைத்து மக்களும் இலங்கையில் ஒற்றுமையில் வாழவும், ஐரோப்பாவிலிருந்து தொடர்ந்து உழைத்து வருகிறார் அருள் பணியாளர் எஸ்.ஜே.இம்மானுவேல்.

ஆதாரம் :  FIDES

7. வியட்நாமில் இரு கத்தோலிக்க மனித உரிமை நடவடிக்கையாளர்களுக்கு 7 மாத சிறைத்தண்டனை

அக்.26,2013. வியட்நாம் நாட்டில் மனித உரிமைகளுக்காகவும் மதசுதந்திரத்திற்காகவும் போராடிய இருவருக்கு 7 மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
Ngo Van Khoi, Nguyen Van Hai என்ற மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இருவரின் விடுதலைக்காக அந்நாட்டுத் திருஅவைத் தலைவர்கள் விடுத்த அழைப்புக்கு செவிசாய்க்க மறுத்துள்ள வியட்நாமின் வடமத்தியப்பகுதி Vinh அதிகாரிகள், பொதுஒழுங்கிற்கு ஊறுவிளைத்ததாகக் குற்றஞ்சாட்டி இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இவ்விரு க‌த்தோலிக்க‌ர்க‌ளின் உற‌வின‌ர்க‌ளுக்கும் த‌க‌வ‌ல் தெரிவிக்காம‌ல், 3 ம‌ணிநேர‌த்தில் இர‌க‌சிய‌ விசார‌ணை ந‌ட‌த்தி தீர்ப்பை வ‌ழ‌ங்கியுள்ள‌து Vinh நீதிம‌ன்ற‌ம்.
மனித உரிமை நடவடிக்கையாளர்கள் Ngo Van Khoi, Nguyen Van Hai ஆகியோரின் விடுதலைக்காக வியட்நாம் கத்தோலிக்கர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN

8. இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு மிக மோசமான காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உலக நலவாழ்வு நிறுவனம்

அக்.26,2013. இந்தியாவில் 10 இலட்சம் பேருக்கு, மிக மோசமான காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், இந்தியாவில், 2.7 இலட்சம் பேர், இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாகவும், நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நோயின் தாக்கம் குறித்து, உலக நலவாழ்வு நிறுவனம், இவ்வாண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் பங்கு மட்டும், 31 விழுக்காடு என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டும், காசநோயால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 10 இலட்சம் என்றும் கூறியுள்ள அந்த ஆய்வின் தகவல், காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, காங்கோ, நைஜீரியா, பிலிப்பீன்ஸ், மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.
கடந்தாண்டில் உலக அளவில், 4.5 இலட்சம் பேர், புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், இந்தியா, சீனா, இரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் :  Dinamalar

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...