சீனா: பீஜிங் டியனன்மென் சதுக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி
சீனாவில் 1989-ம் ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை ராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த புரட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் சீன தலைநகர் பீஜிங்கில் போராட்டம் நடத்திய இடம் டியனன்மென் சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
சீனாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த மறைந்த மாவோ ஜெடாங்கின் சமாதியும் அவரது பிரமாண்ட சித்திரமும் வரையப்பட்டுள்ள இந்த இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.
எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ள டியனன்மென் சதுக்கம் அருகே நேற்று படுவேகமாக வந்த ஒரு மர்ம கார் மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது.
பலரை இடித்து தள்ளிய அந்த கார் தடுப்பு சுவற்றில் மோதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா வாசி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் எதிர்பாராத விபத்தா? அல்லது, தீவிரவாதிகளின் சதி வேலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment