செய்திகள் - 30.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உலகக் கிறிஸ்தவக் கழகத்தின் 10வது மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி
2. ஈராக் நாட்டின் சமயத் துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
3. கீழை வழிபாட்டு முறை திருஅவைத் தலைவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் மாதம் சந்திப்பார்
4. மனித சமுதாயத்தில், வறியோர் ஒதுக்கப்படுவதே உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆணிவேர் - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்
5. நம்பிக்கை ஆண்டின் இறுதி நாட்களில், திருப்பீட பிறரன்பு அவையும், ஐரோப்பிய ஆயர் பேரவையும் இணைந்து நடத்தும் கூட்டம்
6. கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் : எல்லைகளைக் காப்பதைவிட, உயிர்களைக் காப்பதே அவசியம்
7. Zambia நாட்டில் கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படும்
8. இதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை, குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவக் கருவி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உலகக் கிறிஸ்தவக் கழகத்தின் 10வது மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தி
அக்.30,2013. எங்கெல்லாம் வாழ்வு என்ற கொடை போற்றி வளர்க்கப்படுகிறதோ, எங்கெல்லாம் நீதியும், அமைதியும் நிலவ முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறையாட்சி நிலவுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 30, இப்புதனன்று, தென் கொரியாவின் Busan நகரில், WCC எனப்படும் உலகக் கிறிஸ்தவக் கழகத்தின் 10வது மாநாட்டிற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"வாழ்வின் இறைவனே, எங்களை நீதியிலும், அமைதியிலும் வழிநடத்தும்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இம்மாநாட்டில், மூவொரு இறைவனின் ஆசீர் முழுமையாக இறங்கிவர வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்தியுள்ளார்.
அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி முடிய நடைபெறும் இம்மாநாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள் கலந்துகொண்டு, திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.
கத்தோலிக்கத் திருஅவை, உலகக் கிறிஸ்தவ கழகத்தின் முழு உறுப்பினராக இணையவில்லையெனினும், இக்கழகம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் பங்கேற்று வருகிறது.
ஆயர் Brian Farell அவர்கள் தலைமையில், WCC யின் 10வது மாநாட்டில், 25 உறுப்பினர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில் கலந்துகொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஈராக் நாட்டின் சமயத் துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
அக்.30,2013.
ஒவ்வொருநாளும் வன்முறைகளால் காயப்பட்டு வரும் ஈராக் நாட்டிற்காகச்
சிறப்பாகச் செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன்
பொது மறைபோதகத்தின் இறுதியில் விண்ணப்பித்தார்.
பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் முயற்சியால், ஈராக் நாட்டின் சமயத் துறையைச் சார்ந்த அரசு அதிகாரிகளுடனும், வேறு பல இஸ்லாமியத் தலைவர்களுடனும் அக்டோபர் 29, 30 ஆகிய இருநாட்கள், உரோம் நகரில் உரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இத்திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Jean Louis Tauran அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைபோதகத்திற்குப் பிறகு சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஈராக் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே சமய உரையாடல் முயற்சிகளை வலுப்படுத்தும் வழிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கீழை வழிபாட்டு முறை திருஅவைத் தலைவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் மாதம் சந்திப்பார்
அக்.30,2013. சிரியா, ஈராக், மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றிவரும் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையர்களையும், பேராயர்களையும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற நவம்பர் மாதம் திருப்பீடத்தில்
சந்திப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் கீழை வழிபாட்டு முறை பாப்பிறை மையத்தில், கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Leonardo Sandri அவர்கள், இச்செவ்வாயன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் முடிவுற்றபின் 50 ஆண்டுகள் கழித்து, கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுடன் உள்ள உறவு பற்றி பேச, நவம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய உரோம் நகரில் இக்கூட்டம் நடைபெறும் என்று கர்தினால் Sandri அவர்கள் அறிவித்தார்.
நவம்பர் 21ம் தேதி, இக்கூட்டத்தில் நிகழும் விவாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது, இக்கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்றும் கர்தினால் Sandri அவர்கள் தெரிவித்தார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமையில், 2009ம் ஆண்டு நடைபெற்ற கீழை வழிபாட்டு முறை ஆயர்களின் கூட்டத்திற்குப் பின், இவ்வாண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : VIS
4. மனித சமுதாயத்தில், வறியோர் ஒதுக்கப்படுவதே உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆணிவேர் - பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்
அக்.30,2013. உணவு, அனைத்து மனிதர்களின் அடிப்படை தேவை என்பதையும், உரிமை என்பதையும் உலக நாடுகள் உணர்ந்தாலும், உணவு நெருக்கடியை பல நாடுகள் சந்தித்து வருகின்றன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. அமைப்பின் கூட்டங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பங்கேற்கும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் 68வது அமர்வில், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
வறுமையின் ஏனையப் பிரச்சனைகளில் நிகழ்வதுபோலவே, மனித சமுதாயத்தில், வறியோர் ஒதுக்கப்படுவதே உலகில் நிலவும் பசி, பட்டினி ஆகிய பிரச்சனைகளுக்கு ஆணிவேர் என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு திட்டத்திலும் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, வறுமை, பட்டினி ஆகியவற்றைப் போக்கும் திட்டங்களில் வறியோர் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று பேராயர் சுள்ளிக்காட் அவர்கள் வலியுறுத்தினார்.
வறியோரை உள்ளடக்கித் தீட்டப்படும் திட்டங்களால், உலகில் வீணாக்கப்படும் உணவு குறைக்கப்பட்டு, பசியற்ற மனிதர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்பதை, பேராயர் சுள்ளிக்காட் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. நம்பிக்கை ஆண்டின் இறுதி நாட்களில், திருப்பீட பிறரன்பு அவையும், ஐரோப்பிய ஆயர் பேரவையும் இணைந்து நடத்தும் கூட்டம்
அக்.30,2013. நம்பிக்கை ஆண்டின் இறுதி நாட்களை நெருங்கிவரும் வேளையில், 'ஒரே இதயம்' என்ற பொருள்படும் 'Cor Unum' என்ற திருப்பீட பிறரன்பு அவையும், ஐரோப்பிய ஆயர் பேரவையும் இணைந்து, இத்தாலியில் கூட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளன.
இத்தாலியின் Trieste எனுமிடத்தில், நவம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் இக்கூட்டத்தில், பிறரன்புப்
பணிகளை இன்னும் அதிகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள திருஅவை சந்திக்கும்
சவால்கள் குறித்து பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Cor Unum அவையின் தலைவரான கர்தினால் Robert Sarah அவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவையின் துணைத் தலைவரும், Genoa பேராயருமான கர்தினால் Angelo Bagnasco அவர்களும், இக்கூட்டத்தில் சிறப்புரைகள் வழங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் : எல்லைகளைக் காப்பதைவிட, உயிர்களைக் காப்பதே அவசியம்
அக்.30,2013. அக்.30,2013.
ஐரோப்பிய கண்டத்திற்குள் வரமுயலும் அகதிகள் மற்றும்
குடியேற்றதாரர்களுக்குச் சட்டரீதியான தீர்வுகளை வழங்க ஐரோப்பிய அரசுகள்
முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது இயேசு சபையின் JRS என்றழைக்கப்படும் அகதிகள் பணி அமைப்பு.
இத்தாலியின் லாம்பெதூசா தீவுக்கருகே இடம்பெற்ற படகு விபத்தில், 366 குடியேற்றதாரர்கள் உயிரிழந்துள்ளது, ஐரோப்பாவின் குடியேற்றதாரர் குறித்த கொள்கைகளின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது என்று கூறிய இயேசுசபை அகதிகள் பணி அமைப்பு, இவ்விபத்து நிகழ்ந்தது முதல், லாம்பெதூசா மக்களும் அக்ரிசெந்தோ மறைமாவட்டமும் அங்கு ஆற்றிவரும் பெரும்பணிகள், ஐரோப்பிய அரசுகளுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் அமைப்பும், குடியேற்றதாரர்களின் சார்பில் ஐரோப்பிய தலைவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சொந்த நாட்டில் சுதந்திரமின்மையும், நல்வாழ்வை
நோக்கிய வேட்கையும் லாம்பெதூசாவில் நிகழ்ந்தது போன்ற விபத்துகளுக்கு
மூலகாரணமாக அமைகின்றன என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் ஆப்ரிக்கக்
கண்டத்தின் ஆயர்கள்.
ஆப்ரிக்கக் கண்டத்தின், குறிப்பாக, கிழக்கு ஆப்ரிக்காவின் அரசியல், சமூக
மற்றும் பொருளாதார நிலைகளால் மக்கள் சுதந்திரம் தேடி ஐரோப்பாவிற்குக்
குடிபெயர தங்கள் வாழ்வையே பிணையமாக வைத்து கடல்பயணம் மேற்கொண்டுவருகின்றனர்
என தங்கள் கவலையையும் வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.
ஆதாரம் : ICN
7. Zambia நாட்டில் கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படும்
அக்.30,2013. Zambia நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் முயற்சியால், அந்நாட்டில் கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிலையம் ஒன்று விரைவில் நிறுவப்படும் என்று அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
1995ம் ஆண்டு முதல், Zambia ஆயர்கள், வானொலி
மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்
என்று ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையொன்று கூறுகிறது.
கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்க, 2002ம் ஆண்டு Zambia ஆயர் பேரவை, அரசிடம் அளித்த விண்ணப்பத்திற்கு, அண்மையில் அவ்வரசு உத்தரவு வழங்கியுள்ளது என்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
Zambiaவில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகளும், மருத்துவமனைகளும் மத வேறுபாடு ஏதுமின்றி அனைவருக்கும் பணியாற்றி வருவதுபோல, வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையங்களும், மத வேறுபாடின்றி, அனைத்து மக்களுக்கும் பணியாற்றும் என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
Zambiaவில் வாழும் மக்களில் 87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், இவர்களில், 21 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.
ஆதாரம் : CNA/EWTN
8. இதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை, குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவக் கருவி
அக்.30,2013. இதய இரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை, குறைந்த செலவில் கண்டறியக் கூடிய ஒரு கருவியை, சென்னை
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான
நலவாழ்வு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் உருவாக்கியுள்ளது.
குறைந்த செலவில் நவீன மருத்துவச் சாதனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மையம், “ஆர்ட்சென்ஸ்” (Heart Sense) என்ற பெயரில் இக்கருவியை உருவாக்கியுள்ளது.
தற்போதைய நடைமுறையில் இத்தகைய ஆய்வுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் சூழலில், இந்தப் புதியக் கருவியின் மூலம் ஆயிரம் ரூபாய்க்குள் ஆய்வை முடித்துவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.
வடிவமைத்துள்ள இந்தப் புதியக் கருவியில் சில நிமிடங்களில் சோதனை
முடிந்துவிடும். இதுகுறித்து ஐ.ஐ.டி. நலவாழ்வு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு
ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்கள் மோகனசங்கர், ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் கூறியது:
‘‘குறைந்த
செலவில் குறுகிய நேரத்தில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை
கண்டறிய உதவும் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. அடுத்த
கட்டமாக, இக்கருவியை கையடக்கக் கருவியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “இன்றையச் சூழலில் மருத்துவம்- தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த படிப்புகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் அவசியம். சென்னை ஐ.ஐ.டி.யில், மருத்துவம், கட்டுமானம், நீர், மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
No comments:
Post a Comment