செய்திகள் - 28.10.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இயேசு நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேசுகிறார் என்பது, நம்பிக்கை தரும் ஓர் உண்மை - திருத்தந்தை
2. வத்திக்கான் தொலைக்காட்சி மையப்பணியாளர்களுக்குத் திருத்தந்தையின் உரை.
3. ஆங் சான் சூ கி மற்றும் உலக வங்கித் தலைவரை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை
4. செபமே ஒரு குடும்பத்தை உறுதியாக வாழவைக்கும் - திருத்தந்தை
5. திருமணம் என்ற அருள் சாதனம் ஓர் ஆடம்பர அடையாளம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
6. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
7. மதங்களிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இயேசு நமக்காகத் தந்தையிடம் பரிந்து பேசுகிறார் என்பது, நம்பிக்கை தரும் ஓர் உண்மை - திருத்தந்தை
அக்.28,2013. தந்தையோடு இருக்கும் இயேசு, திருத்தூதர்களுடன் இருக்கும் இயேசு, மக்களோடு இருக்கும் இயேசு என்ற மூன்று கண்ணோட்டங்களின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று தன் மறையுரையை வழங்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் வாழ்ந்துவரும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஒவ்வொருநாளும் காலை 7 மணிக்கு, திருப்பலியாற்றி, மறையுரையும் வழங்கிவருகிறார்.
இத்திங்களன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர்களான புனித சீமோன், யூதா ஆகியோரின் திருநாளையொட்டி வழங்கப்பட்ட நற்செய்தியின் (லூக்கா 6: 12-16) அடிப்படையில் திருத்தந்தை தன் மறையுரையை வழங்கினார்.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, தான் தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்களுக்காகவும், தன் சமுதாய மக்களுக்காகவும், தந்தையாம் இறைவனிடம் மன்றாடியதுபோல், இன்னும் தொடர்ந்து நம் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடி வருகிறார் என்பதை, தன் ம்ரையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
தம் பாடுகள், காயங்கள் வழியாக நம்மை மீட்ட இறைமகன் இயேசு, தற்போது உன்னத மகிமையில் இருந்தாலும், நமக்காகத் தொடர்ந்து தந்தையிடம் பரிந்துபேசுகிறார் என்பது, நமக்கு நம்பிக்கை தரும் ஓர் உண்மை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. வத்திக்கான் தொலைக்காட்சி மையப்பணியாளர்களுக்குத் திருத்தந்தையின் உரை.
அக்.,28,2013. தனியாக அல்ல, மாறாக ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் மனித குலமனைத்திற்கும் சேவையாற்றமுடியும் என, இத்திங்களன்று திருப்பீடத்தில் வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் பணியாளர்களைச் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தொலைக்காட்சி மையம் 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, அம்மையத்தின் பனீயாளர்களை சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து பணியாற்றும்போது அது பலத்தை வழங்குவதாகவும், ஒன்றிப்பின் சாட்சியமாகவும் விளங்கும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் வத்திக்கான் தொலைக்காட்சி மையம் ஆற்றியுள்ள சிறப்புச்சேவைகளைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒன்றிணைந்து உழைப்பதன் மூலம் சமூகத்தொடர்புத்துறையை மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக மாற்றமுடியும் எனவும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஆங் சான் சூ கி மற்றும் உலக வங்கித் தலைவரை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை
அக்.,28,2013. இத்திங்களன்று, திருப்பீடத்தில் மியான்மார் மக்கள் தலைவர் Aung San Suu Kyi மற்றும் உலக வங்கியின் தலைவர் Jim Yong Kim ஆகியோரைத் தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1991ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதுபெற்ற மியான்மார் எதிர்க்கட்சித்தலைவர் Suu Kyiயுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட இச்சந்திப்பு 20 நிடங்கள் நீடித்தது.
இதே நாளில் திருப்பீடத்திற்கான ஜப்பான நாட்டுத் தூதராகப் பொறுப்பேற்கும் Teruaki Nagasakiயிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வைபவத்திலும், திருப்பீடத்திற்கான தூதர் பணியை நிறைவுசெய்து செல்லும் அல்பேனியத்தூதுவர் Rrok Logu அவர்களின் வழியனுப்பு விழா வைபவத்திலும் கலந்துகொண்டார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. செபமே ஒரு குடும்பத்தை உறுதியாக வாழவைக்கும் - திருத்தந்தை
அக்.28,2013. செபமே ஒரு குடும்பத்தை உறுதியாக வாழவைக்கும் என்றும், குடும்பமாய்ச்
செபிப்பது மிக எளிதான ஒரு முயற்சி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
உரோம் நகருக்கு வந்திருந்த பல்லாயிரம் குடும்பங்களுக்குக் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக, அக்டோபர் 26, 27, இச்சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருநாட்கள், அகில உலகக் குடும்ப விழா ஒன்று திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையினரால் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இவ்விழாவின் சிகரமாக, இஞ்ஞாயிறு காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில், உலகின் பல நாடுகளிலிருந்தும், 2 இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.
இத்திருப்பலியில் அவர் வழங்கிய மறையுரையில், குடும்பம் செபிக்கிறது, குடும்பம் தன் நம்பிக்கையைப் பேணுகிறது, குடும்பம் மகிழ்வை அனுபவிக்கிறது என்ற மூன்று கருத்துக்களைத் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்ற பரிசேயர், வரிதண்டுபவர் என்ற உவமையை (லூக்கா 18: 9-14) எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, பரிசேயரின் வேண்டுதல் தற்பெருமையில் தோய்ந்திருந்ததால், இறைவனை நோக்கி மேலெழ முடியாமற்போயிற்று என்றும், வரிதண்டுபவர் எழுப்பிய பணிவான 'மன்றாட்டு, முகில்களை ஊடுருவிச் சென்று, ஆண்டவரை அடைந்தது' (சீராக் 35:17) என்றும் கூறினார்.
குடும்பமாகச் சேர்ந்து உணவருந்தும்போது 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே' போன்ற எளிமையான செபத்தைச் சொல்வதையும், குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் என்று அனைவரும் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்பதையும், எடுத்துக்காட்டாகக் கூறி, செபிப்பது மிக எளிதான ஒரு பழக்கம் என்பதை திருத்தந்தை விளக்கினார்.
குடும்பங்கள் தங்கள் நம்பிக்கையைப் பேணி வளர்ப்பதன் வழியாக, இவ்வுலகிற்குத் தலைசிறந்த சாட்சிகளாக வாழமுடியும் என்பதையும், திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.
'உங்கள் அனைவருக்கும் ஒரு வீட்டுப்பாடம் தர விழைகிறேன் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள்
குடும்பங்களில் உண்மையான மகிழ்ச்சி நிலவுகிறதா என்ற கேள்விக்கு நீங்கள்
ஒவ்வொருவரும் தனித்தனியே விடை தேடவேண்டும் என்பதே தான் அனைவருக்கும்
வழங்கும் 'வீட்டுப்பாடம்' என்று கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருமணம் என்ற அருள் சாதனம் ஓர் ஆடம்பர அடையாளம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
அக்.28,2013. 'குடும்பமே, நம்பிக்கையின் மகிழ்வை வாழ்வாயாக' என்ற கருத்தில் அனைத்துலகக் குடும்ப விழாவைக் கொண்டாடிய அனைவரிடமும், இன்றைய உலகில் நம்பிக்கையின் மகிழ்வை வாழ முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை மாலை தன் உரையைத் துவக்கினார்.
அக்டோபர் 26, 27, இச்சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், வத்திக்கானில் திருப்பீடத்தின் குடும்பப்பணி அவையினரால் ஏற்பாடு செய்யபட்டிருந்த குடும்ப விழா கொண்டாட்டங்களின் துவக்க நிகழ்வாக, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்குக் கூடியிருந்த மக்களுக்கு, குடும்பங்களில் நிலவ வேண்டிய மகிழ்வு குறித்து திருத்தந்தை உரை வழங்கினார்.
மகிழ்வின் முக்கியத் தடையாக இருப்பது, அன்பற்றச் சூழல் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, குடும்பங்களில் அன்பு குறையும்போது, வேதனையின் முழு பாரத்தையும் நாம் உணர்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருமண அருள் சாதனத்தில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வோம் என்று மேற்கொள்ளும் உறுதிமொழியை நினைவுருத்தியத் திருத்தந்தை, ஆணும், பெண்ணும் மேற்கொள்ளும் இந்த நம்பிக்கை உறவே குடும்பங்களின் அடித்தளம் என்று கூறினார்.
திருமணம் என்ற அருள் சாதனம் ஓர் ஆடம்பர அடையாளம் அல்ல, மாறாக, அதுவே நம் குடும்ப வாழ்வுக்கு உறுதியையும், துணிவையும் வழங்கும் அருள் கொடை என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
குழந்தை இயேசு கோவிலில் காணிக்கையாக்கப்படும் காட்சி, இக்குடும்ப
விழாவுக்கு முக்கிய அடையாளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறித்து
தன் மகிழ்வை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அடையாளக் காட்சியில் இடம்பெறும் சிமியோன், அன்னா ஆகிய முதியோரைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி, குடும்பங்களில் முதியோரின் சொற்களுக்குச் செவிகொடுக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பினார்.
குடும்பங்களில் பயன்படுத்தவேண்டிய மூன்று முக்கியமான சொற்கள், 'தயவுசெய்து', 'நன்றி' மற்றும் 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்பவையே என்று கூறியத் திருத்தந்தை, இந்த மூன்று சொற்களைப் பழக்கப்படுத்தும் குடும்பங்களில், கோபம், வன்முறை ஆகியவை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, ஒப்புரவும், அமைதியும் நிலவும் வாய்ப்புக்கள் அதிகம் என்ற உறுதியை வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
அக்.,28,2013.
தன் டுவிட்டர் பக்கத்தில் தினமும் வெளியிடும் செய்திகளை வாசிப்பவர்களின்
எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது குறித்து தன் நன்றியை வெளியிட்டு
இஞ்ஞாயிறன்று டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
'டுவிட்டரில்
என்னைப் பின்பற்றுபவர்களே! உங்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது
என்பதை அறிவேன். என் முழு இதயத்தோடு உங்களுக்கு நன்றி கூறுவதோடு, எனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறும் உங்களை வேண்டுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
மேலும், 'நாம் அனைவரும் பாவிகளே. ஆனால் இறைவன் தன் அபரிவிதமான அருள், இரக்கம் மற்றும் இன்கனிவு மூலம் நம்மைக் குணப்படுத்துகிறார்' என இத்திங்களன்று திருத்தந்தை தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மதங்களிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
அக்.,28,2013.
வரும் ஞாயிறன்று இந்தியாவில் சிறப்பிக்கப்படும் தீபாவளி திருவிழாவுக்கென
வாழ்த்துக்களுடன் சிறப்புச்செய்தியொன்றை வெளியிட்டுள்ளது திருப்பீடத்தின்
மதங்களிடையே உரையாடல் பணியை மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.
'அனைத்து வாழ்வு மற்றும் ஒளியின் ஆதாரமாக இருக்கும் இறைவன், உங்கள் வாழ்வை ஒளிர்வித்து உங்கள் மகிழ்வையும் வாழ்வையும் ஆழப்படுத்துவாராக' என்ற வாழ்த்தோடு தன் சிறப்புச்செய்தியை வெளியிட்டுள்ள திருப்பீட அவை, உலகாயுதப்போக்குகளால் மனிதகுல உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், நட்புணர்வு
மற்றும் ஒருமைப்பாட்டின் மூலம் மனிதகுலத்தின் பொதுநலனுக்காக
கிறிஸ்தவர்களும் இந்துக்களும் எவ்வாறு ஒன்றிணைந்து உழைக்கமுடியும் என்பது
குறித்து சிந்திப்போம் எனவும் அச்செய்தியில் கூறியுள்ளது.
மனிதர்களுக்கிடையே உருவாகும் உறவைச்சார்ந்தே உலகில் அமைதியைக் கட்டியெழுப்புதல், உண்மையான
ஒருமைப்பாட்டையும் இணக்கவாழ்வையும் கொணர்தல் போன்றவை உள்ளன எனவும் தன்
வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளது மதங்களிடையே உரையாடல் பணியை
மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன உணர்வுகளையும், கலாச்சார, மத மற்றும் கொள்கை வேறுபாடுகளையும் தாண்டியதாக நம் உறவுகள் இருக்கவேண்டும் என கூறும் இச்செய்தி, உலகாயுதப்போக்குகளின் அதிகரிப்பால், ஆழமான ஆன்மீக மற்றும் மத மதிப்பீடுகளின் முக்கியத்துவம் இழக்கப்பட்டுவருவது குறித்த கவலையையும் தெரிவிக்கிறது.
நல்லுறவுகள் மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை போற்றி ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும், முழு மனிதகுல நன்மைக்கென மதங்களிடையே நல்லுறவுகள் பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது, மதங்களிடையே உரையாடல் பணியை மேற்கொண்டுள்ள திருப்பீட அவை.
No comments:
Post a Comment