Tuesday, 1 October 2013

காது கேளாதோர் தினம்

காது கேளாதோர் தினம்

ஒலியைக் கேட்பதில் சிரமம் ஏற்படுவதையே காது கேளாமை என்று சொல்கிறோம். உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கு அதிகமானோர், அதாவது ஏறக்குறைய 36 கோடிப் பேர் காது கேளாதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வளரும் நாடுகளில் உள்ளனர் எனவும், ஆரம்பத்திலே சிகிச்சை எடுத்துக்கொள்வதன்மூலம் இவர்களில் பாதிப்பேரைக் குணப்படுத்திவிடலாம் எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. உலகில் ஏறக்குறைய 40  விழுக்காட்டினருக்குத் தங்களின் 65வது வயதில் காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. மனிதரது காது, சாதாரணமாக 20 ஹெர்ட்ஸிலிருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது. அதிக ஒலியைக் கேட்பதால்கூட கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின், குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டைவலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம். குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனையும் பாதிக்கும். கைபேசியின் கதிர்வீச்சு காரணமாகக்கூட கேட்கும் திறன் பாதிப்படைகிறது. காதில் அழுக்கைச் சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் கண்ட கண்ட குச்சியைப் பயன்படுத்துவது, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.
1951ம் ஆண்டு செப்டம்பரில், முதல் அனைத்துலக காது கேளாதோர் மாநாடு நடத்தப்பட்டது. 1958ம் ஆண்டில் அனைத்துலக காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது. பின் இது செப்டம்பர் கடைசி வாரம் காது கேளாதோர் வாரமாகவும், செப்டம்பர் கடைசி ஞாயிறு அனைத்துலக காது கேளாதோர் தினமாகவும் மாற்றப்பட்டது.
காது கேளாதோரிடம் பேசும்போது கவனிக்க வேண்டியவை.....
காது கேட்கவில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது. இதை அல்லது அதை எப்படிச் செய்தாய் போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கேட்கக் கூடாது.
அவர்களுக்கு வணக்கம் சொல்லும்பொழுது கைகளைக் குலுக்காமல் மெதுவாக அணைத்துச் சொல்வது நல்லது.
நாம் உணருவதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சில அடிப்படையான சைகை மொழியைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
காது கேளாதோர்க்கு சரிநிகர் மரியாதையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். மற்ற மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆதாரம் : WHO (World Health Organisation)
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...