Thursday, 26 April 2012

Catholic News in Tamil - 25 April 12


1. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு

2. காங்கோ ஆயர்கள் ஊழலற்ற அரசுக்கு வலியுறுத்தல்

3. மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியத் திருஅவை

4. சூடானும் தென் சூடானும் போரைத் தவிர்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் வேண்டுகோள்

5. சூடான் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குச் சமயக் காழ்ப்புணர்வு காரணம் விமர்சகர்கள் கருத்து

6. பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

7. வளர்இளம் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு யுனிசெப் அழைப்பு

8. மியான்மார் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் ஆர்வத்தில் எடுக்கப்பட்டது - மியான்மார் அரசியல் தலைவர்

-------------------------------------------------------------------------------------------

1. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு கர்தினால் சிப்ரியானி அழைப்பு

ஏப்ரல்25,2012. பெரு நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் அந்நாட்டுக் கர்தினால் Juan Luis Cipriani.
தலைநகர் லீமாவிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் 71 பிணையல் கைதிகள் காப்பாற்றப்பட்டதன் 15ம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த கர்தினால் Luis Cipriani, இந்தத் தென் அமெரிக்க நாட்டில் வன்முறைகள் ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்று செபிப்போம் என்று கூறினார்.
1996ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி Tuparac Amaru பயங்கரவாதக் குழு ஜப்பானியத் தூதர் இல்லத்தைக் கைப்பற்றி சுமார் 72 பேரை பிணையலில் வைத்தது. அவ்வியக்கத்தின் 400 கைதிகளை அரசு விடுதலை செய்யும்வரை அவர்களை விடுவிக்கப் போவதில்லை என்றும் அக்குழு எச்சரித்தது.
எனினும், 4 மாதங்கள் கழித்து 1997ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாளன்று பெரு நாட்டு இராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 71 பிணையல் கைதிகள் மீட்கப்பட்டனர். மேலும், இந்நடவடிக்கையில் ஒரு பிணையல் கைதியும், 2 படைவீரர்களும்  பயங்கரவாதிகள் 14 பேரும் இறந்தனர்.
வன்முறை எப்போதும் பொய்யுடன் தொடங்குகிறது, இது மற்றவர்களைப் பாதித்து வன்முறைக்கும் இறப்புக்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் காரணமாகின்றது என்றும் கர்தினால் கூறினார்.

2. காங்கோ ஆயர்கள் ஊழலற்ற அரசுக்கு வலியுறுத்தல்

ஏப்ரல் 25,2012. காங்கோ குடியரசில் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஊழலற்ற அரசும் மக்களின் நலன்நாடும் நல்ல நிர்வாகமும் அவசியம் என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
தலைநகர் Brazzaville ல் 40 வது ஆண்டுக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், காங்கோ குடியரசில் ஏழ்மையை ஒழிக்கும் முறைகள் குறித்த தங்களது தீர்மானங்களை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பொது நிர்வாகத்தில் இருக்கும் தலைவர்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறும், சமூகத்தின் நலனை மனதிற்கொண்டு நல்ல விழுமியங்கள் காக்கப்படுவதற்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த நாடுகளில் இறப்பை எதிர்நோக்கும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, வளர்ந்த நாடுகளைவிட 45 மடங்கு அதிகம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

3. மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியத் திருஅவை

ஏப்ரல் 25,2012. இந்தியாவில் ஆண்டுதோறும் 2,05,000 பேரும், உலகில் 6,55,000 பேரும் மலேரியாவால் இறக்கின்றவேளை, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது இந்திய கத்தோலிக்கத் திருஅவை.
ஏப்ரல் 25 இப்புதன் அனைத்துலக மலேரியா நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் செய்தித் துறை இத்தகவலை வெளியிட்டது.
மேலும், இத்தினம் குறித்து செய்தி வெளியிட்ட WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம், தென் கிழக்கு ஆசியாவில் 130 கோடிப் பேர் மலேரியா நோயின் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்றும், இந்நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் சமுதாயத்தின் எல்லாத் துறைகளும் ஈடுபட்டால் மட்டுமே இந்நோயை ஒழிக்க முடியும் என்றும் கூறுகிறது.
கொசுக்களால் பரவும் மலேரியாவால் தென் கிழக்கு ஆசியாவில் கடந்த ஆண்டில் 2 கோடியே 80 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 38 ஆயிரம் பேர் இறந்தனர் என்றும் WHO நிறுவனம் கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 330 கோடிப் பேர் இந்நோயால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல துறையினரின் கூட்டு முயற்சி : மலேரியா நோய்த் தடுப்புக்கு முதலீடுகள், வாழ்வைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் இவ்வாண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

4. சூடானும் தென் சூடானும் போரைத் தவிர்க்குமாறு அனைத்துலக காரித்தாஸ் வேண்டுகோள்

ஏப்ரல்25,2012. சூடானும் தென் சூடானும் முழுவீச்சாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, இவ்விரு நாடுகளும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விரு நாடுகளின் எல்லைப் புறத்திலுள்ள Heglig எண்ணெய்வளப் பகுதி குறித்து இடம் பெற்று வரும் தகராறு, தற்போது போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதை முன்னிட்டு கத்தோலிக்கத் திருஅவையும், ஆப்ரிக்க ஒன்றியமும், ஐ.நா.வும் ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துமாறு இவ்விரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றன.
சுமார் 20 ஆண்டுகளாக சூடான் அரசுக்கும், தென் சூடான் புரட்சியாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற போர், 2005ம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. தென் சூடான் புதிய நாடாகவும் கடந்த ஆண்டு ஜூலையில் உருவானது. இருந்த போதிலும், Abyei, தெற்கு Kordofan, Blue Nile, எண்ணெய்வளப் பகுதி போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படாமலே இருந்தது.
சூடானில் இடம் பெற்ற சுமார் 20 வருட உள்நாட்டுப் போரில் சுமார்  15 இலட்சம் பேர் இறந்தனர்.

5. சூடான் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குச் சமயக் காழ்ப்புணர்வு காரணம் விமர்சகர்கள் கருத்து

ஏப்ரல்25,2012. சூடானில் அண்மையில் கத்தோலிக்க ஆலயம் எரிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னணியில் சமயக் காழ்ப்புணர்வு இருப்பது தெரிவதாக, சர்வதேச மத சுதந்திரம் குறித்த வல்லுனர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சூடானில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வரும் சண்டையில் மத உள்நோக்கம் இருப்பதைச் சர்வதேச ஊடகங்கள் பார்க்கத் தவறியுள்ளன என்று வாஷிங்டன் மத சுதந்திரத்திற்கான ஹட்சன் நிறுவன இயக்குனர் Nina Shea கூறினார்.
அண்மை ஆண்டுகளில் எகிப்து, ஈராக், நைஜீரியா உட்பட பல நாடுகளில் ஆலயங்களில் தொடர்ந்து குண்டு வைப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் Shea சுட்டிக் காட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்று Khartoumல் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கத்தோலிக்க ஆலயத்துக்குத் தீ வைத்தனர் என்றும், இவ்வாலயத்தில் பல கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து கொண்டிருந்தனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சூடானில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட தென் சூடானியர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. பேச்சு சுதந்திரம் மதிக்கப்படுவதற்கு ஐ.நா.பொதுச் செயலர் வேண்டுகோள்

ஏப்ரல்25,2012. பேச்சு சுதந்திரம், மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று என அனைத்துல பத்திரிகை சுதந்திர நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
மே மாதம் 3ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இவ்வுலக நாளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், பேச்சு சுதந்திரம், மற்ற சுதந்திரங்களைத் தாங்கிப் பிடிப்பதாகவும், மனித மாண்புக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உலகின் எல்லா இடங்களிலும் எந்த வகையான ஊடகம் மூலமாகவும் தகவல்களைப் பெறவும், அறிவிக்கவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் சர்வதேச மனித உரிமைகள் அறிக்கை அனுமதியளிக்கின்றது என்றும் பான் கி மூன் கூறினார்.
மேலும், 2010க்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பணியில் இருந்த போது 127 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில் மட்டும் 62 பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர் என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

7. வளர்இளம் பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு யுனிசெப் அழைப்பு

ஏப்ரல்25,2012. வன்முறை, நோய்கள், கல்வியறிவின்மை ஆகியவற்றினின்று வளர்இளம் பிள்ளைகள் பாதுகாக்கப்படுமாறு யுனிசெப் நிறுவனம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சாலை விபத்துக் காயங்கள், குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரங்கள், தற்கொலை, எய்ட்ஸ் மற்றும் வன்முறையாலும் ஆண்டுதோறும் சுமார் 14 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் இறக்கின்றனர் என்று கூறும் யுனிசெப் நிறுவனம், இந்தப் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளது.
சிறார் முன்னேற்றம் : வளர்இளம் பிள்ளைகள் குறித்த அறிக்கை என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் நிறுவனம், உலகில் பரவலாக 1990ம் ஆண்டிலிருந்து ஆரம்பக் கல்வி பெறும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், உலகின் எல்லாப் பகுதிகளிலும் இந்நிலையைக் காண முடியவில்லை என்றும் கூறுகிறது.
வளர்இளம் பிள்ளைகளே உலகின் வருங்காலம் என்பதை நினைவுபடுத்தியுள்ள இவ்வறிக்கை, உலகின் 120 கோடி வளர்இளம் பிள்ளைகளில் சுமார் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
10க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் குறித்த விபரங்கள் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என்று கூறும் இவ்வறிக்கை, சுமார் 22 இலட்சம் வளர்இளம் பிள்ளைகள் எய்ட்ஸ் நோயாளிகள், இவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்றும் தெரிவிக்கிறது.
வளர்ச்சி குன்றிய நாடுகளில், 15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஆண்களில் நான்கில் ஒரு பாகத்தினரும், பெண்களில் மூன்றில் ஒரு பாகத்தினரும் எழுத்தறிவற்றவர்கள் என்றும் யுனிசெப் கூறுகிறது.

8. மியான்மார் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் ஆர்வத்தில் எடுக்கப்பட்டது - மியான்மார் அரசியல் தலைவர்

ஏப்ரல்25,2012. மியான்மார் நாட்டின் மீது விதித்திருந்த தடைகளை அகற்றுவதென ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு அரசியல் மற்றும் பொருளாதார ஆர்வத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று மியான்மார் அரசியல் தலைவர் ஒருவர் கூறினார்.
1990ம் ஆண்டு மியான்மாரில் நடைபெற்ற தேர்தலில் NLD (National League for Democracy) எனப்படும் தேசியக் குடியரசு கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற Tint Swe என்ற அரசியல் தலைவர், அங்கு உருவான இராணுவ ஆட்சியின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் Luxembourgல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மியான்மாரின் தடைகளை நீக்கும் முடிவை இச்செவ்வாயன்று எடுத்ததைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்ட Tint Swe, மியான்மாரில் உருவாகிவரும் வரவேற்கத்தக்க மாற்றங்களையும் குறித்து பேசினார்.
இயற்கை வளங்கள் அதிகம் உள்ள மியான்மாரில் மக்கள் இன்னும் பெருமளவு வறுமையில் இருப்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஓர் உண்மை என்று Tint Swe தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
இச்செவ்வாயன்று மியான்மாரில் நடைபெற்ற பாராளு மன்றக் கூட்டத்தில் Aung San Suu Kyiயின் தலைமையில் அண்மைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. ஆயினும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவ அரசு ஏற்காததால், Suu Kyiயும் அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் பாராளு மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...