Thursday, 5 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 03 ஏப்ரல் 2012

1. திருப்பீட பல்சமய உரையாடல் அவை இளையோர், நீதியிலும் அமைதியிலும் வளரக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

2. ஆப்ரிக்காவில் அனைத்துலக இளையோர் தினத்தை நடத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது - திருப்பீட கர்தினால் Rylko

3. சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்குப் பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு திருப்பீடப் பிரதிநிதி வேண்டுகோள்

4. கொலம்பியாவில் பிணையல் கைதிகள் விடுதலை குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி

5. மியான்மாரில் Suu Kyi கட்சியின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது - திருப்பீட சார்பு தினத்தாள் 

6. மெக்சிகோ செனட் அவை சமய சுதந்திரத்திற்கு ஆதரவாக நடவடிக்கை

7. நலவாழ்வு, வாழ்நாளை அதிகரிக்கிறது பான் கி மூன்

8. ஏப்ரல் 4 அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினம்

-------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட பல்சமய உரையாடல் அவை இளையோர், நீதியிலும் அமைதியிலும் வளரக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்

ஏப்.03,2012. இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகள், அமைதியில் வாழவும், அமைதியை ஏற்படுத்துகின்றவர்களாகச் செயல்படவும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கிறிஸ்தவர்களுக்கும் புத்தமதத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
Vesak என்ற புத்தமதத்தினரின் முக்கிய விழாவையொட்டி உலகெங்கும் வாழும் புத்தமதத்தினருக்கு இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, நீதி மற்றும் அமைதியின் கருவிகளாக இளையோர் மாறுவதற்கு இவ்விரு மதத்தினரும் தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வு மற்றும் போதனைகள் மூலம் வழிகாட்டிகளாக அமையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று உலகெங்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் அருகருகே அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதால், இளையோர் மற்ற மதத்தினரைப் புரிந்து மதித்து நடப்பதற்கு அவர்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டிய தேவை குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
அனைத்துச் சமூகங்களுக்கும் மூலதனமாக இருக்கும் இளையோர், தங்களது உண்மையான வாழ்வு மூலம், மனிதவாழ்வு, மரணம், நீதி, அமைதி, துன்பத்தின் பொருள், நம்பிக்கைக்கான காரணம் ஆகிய அடிப்படை கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுமாறு நம்மை ஊக்கப்படுத்துகின்றனர், இவ்வாறு உண்மையாம் இறைவனை நோக்கிய திருப்பயணத்தில் நாம் முன்னேற உதவுகிறார்கள், இவர்கள் தங்களது கேள்விகளால் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிக்கிறார்கள் என்றும் அச்செய்தி கூறுகிறது.
வேசாக் விழாவுக்கான இச்செய்தியில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran மற்றும் செயலர் பேராயர் Pier Luigi Celata கையெழுத்திட்டுள்ளனர். 
புத்தரின் பிறப்பு, அவர் விழிப்புணர்வு பெற்றது, அவரின் இறப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வேசாக் விழா, ஏப்ரல் 8ம் தேதி ஜப்பானிலும், மே 10ம் தேதி கொரியா, சீனா, தாய்வான், வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், மே 17ம் தேதி  தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, மியான்மார், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் சிறப்பிக்கப்படுகின்றது.

2. ஆப்ரிக்காவில் அனைத்துலக இளையோர் தினத்தை நடத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது - திருப்பீட கர்தினால் Rylko

ஏப்.03,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் உலக இளையோர் தினத்தை நடத்துவதற்கான நேரம் கனிந்துள்ளது, அக்கண்டம் இதற்குத் தகுதியுடையதாக இருக்கின்றது என்று, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
2013ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம் குறித்து நிருபர்களிடம் பேசிய கர்தினால் ரில்கோ, இளையோர்க்குச் செய்யும் மேய்ப்புப்பணிகளில் உலக இளையோர் தினங்கள் தற்போது முக்கிய அங்கம் வகித்து வருகின்றன என்று தெரிவித்தார்.
பிரேசிலில் 2014ம் ஆண்டில் உலக கால்பந்து விளையாட்டு, 2016ம் ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகியவை நடைபெறவதற்கு முன்னர், அந்நாட்டில் உலக இளையோரை வரவேற்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்றும் கர்தினால் ரில்கோ கூறினார்.
2013ம் ஆண்டு ஜூலை 23 முதல் 28 வரை ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 28வது உலக இளையோர் தினத்திற்குசுமார் அறுபதாயிரம் தன்னார்வப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் அறிவித்தார்.    
இந்த உலக இளையோர் தினத்திற்கான Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களை சுமார் ஆறு இலட்சம் பேர் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர்.
பிரேசில் உலக இளையோர் தின இணையதள  முகவரி www.rio2013.com 

3. சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்குப் பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு திருப்பீடப் பிரதிநிதி வேண்டுகோள்

ஏப்.03,2012. சிரியாவில் பாகுபாடின்றி இடம் பெற்று வரும் தாக்குதல்களால் வன்முறைகள் அதிகரித்து வரும்வேளை, அந்நாட்டில் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்குப் பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு அரபுக் கூட்டமைப்பு நாடுகளுக்கானத் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Michael Fitzgerald வேண்டுகோள் விடுத்தார்.
சிரியா மக்களின் நண்பர்கள் அமைப்பு என்ற, சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு முயற்சித்து வரும் நாடுகள் நடத்திய இரண்டாவது கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Fitzgerald, சிரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும் தாக்குதல்களால் மனிதாபிமான உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
சிரியாவில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்குத் திருத்தந்தை தொடர்ந்து விடுத்து வரும் அழைப்பு குறித்தும் குறிப்பிட்ட பேராயர், சிரியாவின் பல்வேறு உறுப்பினர்களின் நியாயமான ஏக்கங்கள் நிறைவேற்றப்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, சிரியாவில் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இம்மாதம் 10ம் தேதிக்குள், இராணுவத் துருப்புக்களை அகற்றுவதாகவும், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வதாகவும் சிரியா அரசு உறுதி கூறியிருப்பதாக, ஐ.நா.தூதராக அந்நாட்டில் அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் தெரிவித்தார்.

4. கொலம்பியாவில் பிணையல் கைதிகள் விடுதலை குறித்து ஆயர்கள் மகிழ்ச்சி

ஏப்.03,2012. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் FARC புரட்சிக்குழுவின் பிணையல் கைதிகளில் பத்துப் பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானப் பணிக்குழு மற்றும் கொலம்பியாவின் அமைதிப்பணிக்குழுவின் பிரதிநிதிகளிடம் இத்திங்களன்று இப்பிணையக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். பிரேசில் நாட்டு இராணுவ ஹெலிகாப்டர் இவர்களைக் காட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.
இவ்விடுதலை குறித்து மகிழும் அனைத்து கொலம்பியா மக்களுடன் ஆயர்களாகிய தாங்களும் மகிழ்வதாக உரைத்த Bogota பேராயர் Ruben Salazar Gomez, FARC புரட்சிக்குழுவிடம் இருக்கும் அனைத்துப் பிணையல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதேசமயம், FARC புரட்சிக்குழுவினர் தங்களிடமுள்ள  அனைத்துப்  பிணையல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்து, அந்நாட்டில் கடத்தல் குற்றம் முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு உதவுமாறு கேட்டுள்ளார் பேராயர் Salazar Gomez.
காவல்துறை மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்கள் உட்பட பிணையலில் இருந்த இந்த பத்துப் பேரில் சிலர் 14 ஆண்டுகள் வரை பிணையலில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. மியான்மாரில் Suu Kyi கட்சியின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது - திருப்பீட சார்பு தினத்தாள் 

ஏப்.03,2012. மியான்மாரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், Aung San Suu Kyi யின் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சி அமோக வெற்றி அடைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்று சொல்லி, தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது திருப்பீடச் சார்பு தினத்தாள் L’Osservatore Romano.
நம்பிக்கையின் இருப்பிடம் என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள L’Osservatore Romano, மியான்மார் மக்களாட்சியை நோக்கி முழுவதுமாக மாறுவதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள், மியான்மாருக்கு குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டு வரும் எனவும், ஐ.நா.வும், ஐரோப்பிய சமுதாய அவையும் அந்நாட்டுக்கு எதிரானப் பொருளாதாரத் தடைகளை நீக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது அத்தினத்தாள்.  
கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர்,  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இத்தேர்தல் நடைபெற்றுள்ளது என்றும், Suu Kyi நாடாளுமன்றத்துக்குச் செல்வது அந்நாட்டு இராணுவ அதிகாரிகளைப் பொறு்தது உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

6. மெக்சிகோ செனட் அவை சமய சுதந்திரத்திற்கு ஆதரவாக நடவடிக்கை

ஏப்.03,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பிய ஓரிரு நாள்களுக்குள், அந்நாட்டு செனட் அவை, சமய சுதந்திரத்திற்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று CNS  கத்தோலிக்க செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த மார்ச் 29ம் தேதி, மெக்சிகோ அரசியல் அமைப்பு எண் 29ல் செனட் அவை கொண்டு வந்துள்ள மாற்றங்களின்படி, அந்நாட்டில் சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயங்களுக்கு வெளியே அரசின் முன் அனுமதியின்றி சமயக் குழுக்கள் வழிபாடுகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அத்துடன், மெக்சிகோ நாட்டை விவரிப்பதற்கு இருக்கின்ற விளக்கங்களில் சமயச்சார்பற்றது என்ற சொல்லை, அரசியல் அமைப்பு எண் 40ல் சேர்ப்பதற்கும் செனட் அவை  ஒப்புதல் தெரிவித்துள்ளது.
திருத்தந்தையின் மெக்சிகோ நாட்டுக்குத் திருப்பயணம் கடந்த மார்ச் 23 முதல் 26 வரை இடம் பெற்றது.

7. நலவாழ்வு, வாழ்நாளை அதிகரிக்கிறது பான் கி மூன்

ஏப்.03,2012. நலவாழ்வை ஊக்குவித்தல், ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் நல்ல உடல் நலத்தோடு இருந்து, வயதான காலத்தில் ஆக்கப்பூர்வமானச் செயல்களைச் செய்ய உதவும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல் 7ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துல நலவாழ்வு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த நூற்றாண்டின் பாதியில், உலகில் எண்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் இருந்தனர், இதே வயதினர், 2050ம் ஆண்டுவாக்கில், ஏறத்தாழ 40 கோடியாக இருப்பார்கள், இவர்களில் சீனாவில் மட்டும் 10 கோடிப் பேர் இருப்பார்கள். மேலும், 65 வயதுடையவர்களை அல்லது 5 வயதுக்கு மேலானவர்களை இவ்வுலகம் வரலாற்றில் முதன் முறையாகக் கொண்டிருக்கும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
உலக மக்களின் வாழ்நாளில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களே காரணம் எனக் கூறும் அச்செய்தி, உலகில் எல்லா இடங்களில் வாழ்வோரும் நலமான வாழ்வுடன் முதிர்ந்த வயதை அடைய வாய்ப்புக்கள் வழங்கப்படுமாறு கேட்டுள்ளது.  
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக நலவாழ்வு நிறுவனம் உருவாக்கப்பட்ட நாள், அனைத்துல நலவாழ்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

8. ஏப்ரல் 4 அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினம்

ஏப்.03,2012. ஏப்ரல் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வுத் திட்டங்கள் போர் முடிந்த பின்னர் இடம் பெறும் நடவடிக்கைகளுக்கு இன்றியமையாதவை என்று கூறியுள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு, மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவசியம் என்றும் அச்செய்தி கூறுகிறது.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிலக்கண்ணி வெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டு வருகிறது என்றும் பான் கி மூன் கூறினார்.
அனைத்துல நிலக்கண்ணி வெடிகள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...