1. திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல் இல்லாத புனித மேலங்கி
2. கிறிஸ்தவத் தன்னார்வப் பணியின் ஆன்மீக அர்த்தம்
3. திருப்பீடப் பிரதிநிதி : வியட்நாம் ஆயர்கள் வெளியுலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்
4. 85 வயது காணும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஏழாண்டு பாப்பிறைப் பணி
5. வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்தப்பட பிலிப்பீன்ஸ் ஆயர் வலியுறுத்தல்
6. மூளைவளர்ச்சி குன்றிய கரு கலைக்கப்படுவது ஏற்கப்பட்டிருப்பதற்குப் பிரேசில் ஆயர்கள் கண்டனம்
7. கடல்தொழிலாளர் பாதுகாப்புக்கு ஐ.நா.வலியுறுத்தல்
8. நைஜீரியாவில் எழுபதாயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ்
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல் இல்லாத புனித மேலங்கி
ஏப்.14,2012 : ஜெர்மனியின் Trierல் மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதப் பொருளான கிறிஸ்துவின் தையல் இல்லாத மேலங்கி, திருஅவையின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்து தமது திருப்பாடுகளின் போது அணிந்திருந்ததாக நம்பப்பட்டு, மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு அதிவணக்கம் செய்யப்பட்டு வரும் இந்த மேலங்கி, தமது சக்தியால் அல்ல, இறைவனின் செயலால் இன்னும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தப் புனித மேலங்கியை Constantine பேரரசரின் தாயான புனித ஹெலன், Trier க்குக் கொண்டு வந்தார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. பேரரசர் முதலாம் Maximilian னின் வேண்டுகோளின்பேரில், இந்தப் புனித மேலங்கியை பேராயர் Richard von Greiffenklau 1512ம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். அதன் பின்னர் கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு தடவைகள் மட்டுமே இது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இப்புனித மேலங்கி முதல்தடவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு, இவ்வெள்ளி முதல் வருகிற மே 13 வரை Trierல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் நாள் தொடக்க விழாவில் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக கர்தினால் Marc Ouellete கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கென திருத்தந்தையும் Trier ஆயர் Stephan Ackermannக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.
அச்செய்தியில், இந்த மேலங்கி, சிலுவையில் அறையுண்டவர் தமது திருஇரத்தத்தால் புனிதப்படுத்திய திருஅவைக்கு வழங்கிய பிளவுபடாத பரிசாகும், இதனால் இப்புனித மேலங்கி திருஅவைக்கு அதன் மாண்பை நினைவுபடுத்துகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
2. கிறிஸ்தவத் தன்னார்வப் பணியின் ஆன்மீக அர்த்தம்
ஏப்.14,2012 : கத்தோலிக்கர் தங்களது பிறரன்புச் சேவைகளால் நற்செய்தியை அறிவிக்க முடியும் என்று "Cor Unum" என்ற திருப்பீடப் பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarah கூறினார்.
“திருத்தந்தையும் ஐரோப்பிய தன்னார்வப் பணியாளர்களும்” என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுப் பேசிய கர்தினால் சாரா, இயேசு நமக்குச் செய்ததையே நாம் செய்கிறோம் என்று கூறினார்.
பிறரன்பு, நேரடி நற்செய்தி அறிவிப்புப் பணியாக இல்லாவிட்டாலும் அதுவும் ஒருவகையான நற்செய்திப் பணியே என்றும் கூறினார் கர்தினால் சாரா.
ஐரோப்பாவில் 2011ம் ஆண்டு தன்னார்வப்பணியாளர் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
3. திருப்பீடப் பிரதிநிதி : வியட்நாம் ஆயர்கள் வெளியுலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும்
ஏப்.14,2012: கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தது போல, வியட்நாம் திருஅவையும் உயிர்க்க வேண்டுமென்று, சிங்கப்பூர் திருப்பீடத் தூதரும், வியட்நாமுக்கான திருப்பீடப் பிரதிநிதியுமான பேராயர் லியோபோல்தோ ஜிரெல்லி கேட்டுக் கொண்டார்.
திருஅவைக்குள் இருக்கும் பிரச்சனைகளிலே மூழ்கி விடாமல் வெளியுலகிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்றும், வியட்நாம் ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் வலியுறுத்தினார் பேராயர் ஜிரெல்லி.
அரசு அதிகாரிகளால் தொடர் அடக்குமுறைகள், பொருளாதார நெருக்கடி, சமூக அநீதி, ஊழல், நில அபகரிப்பு, போதைப்பொருள் விநியோகம், இளம் பெண்கள் மத்தியில் கருகலைப்புக்கள் என பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்துள்ள வியட்நாம் சமுதாயத்தின் எதிர்கால மேய்ப்புப்பணி குறித்து ஆயர்கள் கவலை கொண்டுள்ள வேளை, பேராயர் ஜிரெல்லி இவ்வாறு கூறினார்.
90 விழுக்காட்டு மக்கள் கடவுள் மற்றும் கிறிஸ்தவம் பற்றி அறியாதிருக்கும் வியட்நாமில், இச்சவால்களைச் சந்திப்பதற்கு ஆயர்கள் தங்களது மக்களை, மேய்ப்பனைப் போல் பாதுகாக்க வேண்டும் எனவும் வியட்நாம் திருப்பீடப் பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு வியட்நாமில் நடைபெறவிருக்கிறது.
4. 85 வயது காணும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஏழாண்டு பாப்பிறைப் பணி
ஏப்.14,2012 : இம்மாதம் 16ம் தேதி 85 வயதையும் 19ம் தேதி பாப்பிறைப் பணிக்குத் தேர்வு செய்த 7 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இறைவனின் கரங்களில் இறைவனுக்கும் அவரது திருஅவைக்கும் பணி செய்கிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் “Octava Dies” என்ற வார நிகழ்ச்சியில் திருத்தந்தையின் இந்த “இரண்டு ஆண்டு நிறைவுகள்” பற்றிப் பேசினார்.
விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தை பல ஆண்டுகளாக வழிநடத்தியவர், வயதான காலத்தில் பாப்பிறைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் எவ்வாறு உலகளாவியத் திருஅவையின் மேய்ப்புப்பணி நிர்வாகத்தை நடத்தப் போகிறார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.
ஆயினும், கடந்த ஏழு ஆண்டுகளில் 23 நாடுகளுக்கு 23 வெளிநாட்டுத் திருப்பயணங்களையும் இத்தாலிக்கு 26 திருப்பயணங்களையும் மேற்கொண்டுள்ளார், மேலும், உலகக் குடும்பங்கள் மாநாட்டிலும் மத்திய கிழக்குக்கும் அவரோடு பயணம் செய்யவிருக்கின்றோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
நான்கு உலக ஆயர் மாமன்றங்கள், மூன்று உலக இளையோர் தினங்கள், மூன்று திருமடல்கள், எண்ணற்ற உரைகள், திருஅவையின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள், பவுல் ஆண்டு, அருட்பணியாளர்கள் ஆண்டு, நாசரேத்தூர் இயேசு என்ற நூல்கள் என பலவற்றுக்கு நாம் சாட்சிகளாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
வருகிற அக்டோபரில் விசுவாச ஆண்டும் உலக ஆயர்கள் மாமன்றமும் தொடங்குகின்றன, திருத்தந்தை இறைவனின் கரங்களில் இறைவனுக்கும் அவரது திருஅவைக்கும் பணி செய்கிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
5. வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தம் உடனடியாக அமல்படுத்தப்பட பிலிப்பீன்ஸ் ஆயர் வலியுறுத்தல்
ஏப்.14,2012. ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் வீட்டுப்பணியாளர்கள் குறித்த ஒப்பந்தத்தை பிலிப்பீன்ஸ் அரசு உடனடியாக அமல்படுத்துமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமூக நடவடிக்கை, நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் தலைவர் மனிலா துணை ஆயர் Broderick Pabillo வலியுறுத்தினார்.
பிலிப்பீன்ஸ் நாட்டவர் வெளிநாடுகளில் வேலை செய்யும் போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், வீட்டு வேலை செய்பவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவும் அந்நாடு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஆயர் Pabillo கூறினார்.
ILO நிறுவனத்தின் வீட்டுத் தொழிலாளர் குறித்து ஒப்பந்தத்தின் எண் C189 ஐ உடனடியாக அமல்படுத்துவதன் மூலம், பிலிப்பீன்ஸ் நாடு பிற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க முடியும் என்றும் ஆயர் கூறினார்.
பிலிப்பீன்சில் வீட்டுவேலை செய்பவர்கள் குறித்த Visayan அமைப்பு வெளியிட்ட உண்மை நிலவரங்களின்படி, அந்நாட்டில் 6 இலட்சம் முதல் 25 இலட்சம் பேர் வரை வீட்டுவேலை செய்கின்றனர் என்று தெரிகிறது. 2008ம் ஆண்டில் சுமார் 54 ஆயிரம் பிலிப்பீன்ஸ் மக்கள், வீட்டுவேலை செய்வதற்கென வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
6. மூளைவளர்ச்சி குன்றிய கரு கலைக்கப்படுவது ஏற்கப்பட்டிருப்பதற்குப் பிரேசில் ஆயர்கள் கண்டனம்
ஏப்.14,2012 : கருவில் வளரும் குழந்தை, மூளையின்றி அல்லது அதன் மூளை சரியாக வளராமல் இருந்தால் அக்குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கு பிரேசில் உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மூளையின்றி அல்லது மூளை சரியாக வளராமல் இருக்கும் கருவைக் கலைப்பதைச் சட்டப்படி அங்கீகரித்திருப்பது, மூளை இறந்து விட்டதாகச் சொல்லப்படும் தவறான கணிப்பு, இது தன்னைப் பாதுகாக்க இயலாத மனித உயிரைத் தூக்கி எறிவதாகும் என்றும் பிரேசில் ஆயர்கள் கூறினர்.
பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குத் தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்து இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், எந்தவித விலக்கும் இன்றி அப்பாவி மனித உயிர்களைப் பறிப்பது அறநெறிப்படி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறை கூறினர்.
இத்தகைய நிலையில் கருக்கலைப்பு செய்வதை, 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிரேசில் மக்கள் ஆதரிக்கவில்லை என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
7. கடல்தொழிலாளர் பாதுகாப்புக்கு ஐ.நா.வலியுறுத்தல்
ஏப்.14,2012: உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் சொகுசுக் கப்பல் விபத்துக்குள்ளானதன் நூறாம் ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில், கடல்தொழிலாளர்கள் மற்றும் கடல் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்கானத் தங்களது அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறு அரசுகளுக்கும் கப்பல் தொழிற்சாலைகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது IMO என்ற ஐ.நா.கடல்சார் நிறுவனம்.
பிரிட்டனிலிருந்து நியுயார்க் நகருக்குப் புறப்பட்ட டைட்டானிக் சொகுசுக் கப்பல், 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்த 2,200 பேரில் 1,500 பேர் இறந்தனர்.
கடல் பயணத்தில் வாழ்வுப் பாதுகாப்பு குறித்த SOLAS என்ற முதல் அனைத்துலக ஒப்பந்தம் 1914ம் ஆண்டில் உருவாகுவதற்கு, இந்த டைட்டானிக் கப்பல் விபத்தே காரணம் என்று IMO நிறுவனப் பொதுச் செயலர் Koji Sekimizu கூறினார்.
8. நைஜீரியாவில் எழுபதாயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ்
ஏப்.14,2012 : ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் எழுபதாயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார். இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க, கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துலக நலவாழ்வு ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
நைஜீரியாவின் Ogun தென்மேற்கு மாநிலத்தைப் பார்வையிட்ட அந்நாட்டு அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி John Idoko இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிறந்துள்ள எழுபதாயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்களுக்கு எய்ட்ஸ் நோயுடன், மலேரியா, காசநோய் ஆகிய நோய்களின் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை குழு முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்று Idoko கூறினார்.
நைஜீரியாவில் எய்ட்சை ஒழிக்க 25 கோடியே 50 இலடசம் டாலரை நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணக்கின்படி, இங்கு நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில்தான் இந்த எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிரப் பிரச்சாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment