Tuesday, 17 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 12 ஏப்ரல் 2012

1. வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான கையெழுத்துத் தொகுப்புக்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும் பணி துவக்கம்

2. உலகின் 54 நாடுகளைச் சார்ந்த இறையியல் அறிஞர்கள் அசிசி நகரில் மேற்கொள்ளும் கலந்துரையாடலை

3. சிரியாவில் அமைதி உருவாக இராணுவ வழிகளைச் சிந்திக்கக் கூடாது - புனித பூமியின் காவல் பொறுப்பாளர்

4. சிரியாவில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது

5. குஜராத் முதலமைச்சர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு கசப்பானது - இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ்

6. ஓடிஸா மாநிலத்தில் முதல் முறையாக 10,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்ட உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டம்

7. ஓடிசாவில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலியர் விடுதலை

8. இந்தியாவில் இலவசக் கல்விச் சட்டம்

9. Dementia நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் - WHO

------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான கையெழுத்துத் தொகுப்புக்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும் பணி துவக்கம்

ஏப்ரல்,12,2012. வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான கையெழுத்துத் தொகுப்புக்களும், 1501ம் ஆண்டுக்கு முன்னதாகப் பிரசுரமான 8,900 அச்சுத் தொகுப்புக்களும் டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்படும் பணி துவக்கப்பட்டுள்ளதென வத்திக்கான் நூலகம் அறிவித்தது.
Leonard Polonsky என்பவர் பெயரில் நிறுவப்பட்டுள்ள Polonsky அறக்கட்டளை வழங்கும் நிதி உதவியுடனும் Oxford Bodleian நூலகங்களுடனும் இணைந்து துவக்கப்பட்டுள்ள இப்பணி முடிவடைய 5 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது.
வத்திக்கானின் இந்தப் பழம்பெரும் கருவூலம் டிஜிட்டல் முறையில் பதிவாக்கப்படுவது பல ஆய்வாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப்பட உள்ள பக்கங்கள் 15 இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அச்சடிக்கும் கருவியைக் கண்டுபிடித்த Gutenberg என்பவரால் 1455ம் ஆண்டுக்கு முன்னதாக அச்சடிக்கப்பட்ட விவிலியத்தின் ஒரு பக்கமும், திருத்தந்தை இரண்டாம் பத்திநாதர் அவர்களால் எழுதப்பட்டு, 1491ம் ஆண்டு Albrecht Hunne என்பவரால் அச்சடிக்கப்பட்ட De Europa என்ற நூலின் பக்கங்களும் இக்கருவூலத்தின் ஒரு சில அம்சங்கள்.
எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு, வத்திக்கானில் பாதுகாக்கப்பட்டு வரும் விவிலியக் கையெழுத்துப் பக்கங்களும் டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்பட உள்ளன.


2. உலகின் 54 நாடுகளைச் சார்ந்த இறையியல் அறிஞர்கள் அசிசி நகரில் மேற்கொள்ளும் கலந்துரையாடல்

ஏப்ரல்,12,2012. உலகின் 54 நாடுகளைச் சார்ந்த 250க்கும் அதிகமான இறையியல் அறிஞர்கள் ஏப்ரல் 17ம் தேதி, வருகிற செவ்வாயன்று இத்தாலியில் உள்ள அசிசி நகரில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"அசிசி 2012: 21ம் நூற்றாண்டில் உரையாடலுக்கான வழி வகைகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறும் என்று கருத்தரங்கின் அமைப்பாளரான முனைவர் Gerard Mannion  செய்தியாளர்களிடம் கூறினார்.
பல்வேறு கிறிஸ்தவ சபைகளிடையிலும், பல்வேறு மதங்களிடையிலும் காணப்படும் ஒத்தமைந்த கருத்துக்கள் இக்கருத்தரங்கின் துவக்கத்தில் ஆய்வு செய்யப்படும் என்று கூறிய முனைவர் Mannion, தொடர்ந்து, மதங்களிடையிலும், சபைகளிடையிலும் உள்ள வேறுபாடுகளைக் களையும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
ஆஸ்திரேலியா, கானடா, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் சமய உரையாடல் பணியில் ஈடுபட்டுள்ள பல மையங்களின் அறிஞர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்போரை அசிசி உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Domenico Sorrentino, ஏப்ரல் 17ம் தேதி மாலை வரவேற்பதோடு இக்கருத்தரங்கு ஆரம்பமாகும்.


3. சிரியாவில் அமைதி உருவாக இராணுவ வழிகளைச் சிந்திக்கக் கூடாது - புனித பூமியின் காவல் பொறுப்பாளர்

ஏப்ரல்,12,2012. சிரியாவில் அமைதி உருவாக மேற்கு திசை நாடுகள் அரசியல் வழிகளைக் கடைபிடிக்க வேண்டுமேயொழிய, இராணுவ வழிகளைச் சிந்திக்கக் கூடாது என்று புனித பூமியின் காவல் பொறுப்பில் உள்ள அருள்தந்தை Pierbattista Pizzaballa கூறினார்.
மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அங்கு உருவான நிலையை நன்கு அறிந்துள்ள நாம், அதே வழியில் சிரியாவிலும் இராணுவ சக்தியுடன் தீர்வு காணும் மேற்கு நாடுகளின் முயற்சிகளை ஆதரிக்கக் கூடாது என்று பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சேர்ந்த அருள்தந்தை Pizzaballa கூறினார்.
16ம் நூற்றாண்டில் இருந்து பிரான்சிஸ்கன் துறவு சபையினர் புனித பூமியின் கண்காணிப்பை ஏற்று பணி செய்து வருகின்றனர். இவர்களின் பணித் தளங்களாக எகிப்து, சிரியா, லெபனான், ஜோர்டான், சைப்ரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு, சிரியாவிலும் மேற்கொள்ளப்பட்டால், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளுக்கு உள்ளாவதுபோல், சிரியாவிலும் தங்கள் நிலைமை மோசமாகும் என்ற அச்சம் கிறிஸ்தவர்கள் மத்தியில் உள்ளது என்று அருள்தந்தை Pizzaballa எடுத்துரைத்தார்.


4. சிரியாவில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது

ஏப்.12,2012. அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் இம்மாதம் 12ம் தேதியிலிருந்து நிறுத்திக் கொள்வதாக, ஐ.நா. மற்றும் அரபு கூட்டமைப்பின் சிறப்புத் தூதர் கோஃபி அன்னானுக்கு, சிரியா அரசு வழங்கிய வாக்குறுதி இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 6 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக பன்னாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சிரியாவில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலிருந்து அனைத்துத் துருப்புக்களையும் இம்மாதம் 10ம் தேதிக்குள் விலக்கிக் கொள்வதாகக் கடந்த வாரத்தில் சிரியா அரசு அன்னானிடம் கூறியது. இவ்வாறு நடைபெறும் நிலையில், அந்நாட்டில் போரிடும் அனைத்துத் தரப்புக்களும் எல்லா வகையான வன்முறைகளையும் நிறுத்த வேண்டுமென்று அன்னான் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வியாழனன்று சிரியா அரசு தொடங்கியுள்ள இந்தப் போர் நிறுத்தம் குறித்து சிரியா வெளியுறவு அமைச்சர் அன்னானுக்கு எழுதிய கடிதத்தில், அப்பாவி குடிமக்கள், அரசுப் படைகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தும் போது, அவற்றைத் தடுப்பதற்கு எவ்வித எதிர்த் தாக்குதல்களையும் நடத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் என்று அவ்வமைச்சகப் பேச்சாளர் அகமத் ஃபாவ்சி கூறினார்.
சிரியா அரசு ஆதரவாளர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இடம் பெற்று வரும் சண்டையில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்.


5. குஜராத் முதலமைச்சர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு கசப்பானது - இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ்

ஏப்ரல்,12,2012. 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைக் கலவரங்களில் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வெளியாகியிருப்பது வேதனை தரும் ஒரு கசப்பான தீர்ப்பு என்று இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி துரித வண்டியை முஸ்லிம்கள் தீயிட்டுக் கொழுத்தினர் என்று கூறி எழுந்த ஒரு கலவரத்தில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கலவரத்தின்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முஸ்லிம்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், இந்தக் கலவரத்திற்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வழக்குகள் பதிவாகியிருந்தன.
இந்தியாவின் உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விசாரிக்க தனிப்பட்ட புலனாய்வுக் குழுவைக் குஜராத்திற்கு அனுப்பியது. இக்குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல குறைபாடுகள் இருந்ததென அகமதாபாத் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனராகப் பணிபுரியும் இயேசு சபை அருள்தந்தை செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
புலனாய்வுக் குழுவின் செயல்பாடுகளும், அதைத் தொடர்ந்து வெளிவந்துள்ள தீர்ப்பும் வருத்தம் தருவதாய் இருந்தாலும், நீதியையும், உண்மையையும் நிலைநாட்டும் போராட்டம் தொடரும் என்று அருள்தந்தை பிரகாஷ் வலியுறுத்திக் கூறினார்.


6. ஒடிஸா மாநிலத்தில் முதல் முறையாக 10,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்ட உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டம்

ஏப்ரல்,12,2012. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சந்தித்துள்ள ஒடிஸா மாநிலத்தில் முதல் முறையாக 10,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் இந்து அடிப்படைவாதக் கும்பலால் பெரும் வன்முறைகள் இடம்பெற்ற விஜயா கத்தோலிக்கப் பள்ளியின் திறந்த வெளி அரங்கில் உயிர்ப்புப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, 10000க்கும்  அதிகமான கிறிஸ்தவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
12 மணி நேரம் தொடர்ந்த இந்த விழா கொண்டாட்டங்களில் குழந்தைகள் முதல் வயதானோர் வரை பலரும் கலந்து கொண்டனர்.
உயிர்ப்பின் சாட்சிகளாக வாழும் கிறிஸ்தவர்களிடையே விசுவாசம் இன்னும் ஆழப்படவும், ஒற்றுமை வளரவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று அப்பகுதியில் பணி புரியும் பங்குத்தந்தை ஜோர்லால் சிங், ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


7. ஒடிஸாவில் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலியர் விடுதலை

ஏப்ரல்,12,2012. ஒடிஸாவில் கடந்த 29 நாட்களாகப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த Paolo Bosusco, மாவோயிஸ்ட்களால் இவ்வியாழனன்று விடுவிக்கப்பட்டார்.
இத்தாலியரான Bosuscoவின் விடுதலைக்காக முயற்சிகளை மேற்கொண்ட ஒடிஸா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக்கை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா பாராட்டியுள்ளார்.
மார்ச் மாதம் 14ம் தேதி ஒடிஸாவின் Ganjam பகுதியிலிருந்து Paolo Bosusco மற்றும் Claudia Colangelo என்ற இரு இத்தாலியர்கள் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டனர். இவர்களில் 61 வயதான Colangelo, உடல்நிலை காரணமாக ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
மாவோயிஸ்ட்கள் விதித்திருந்த ஒரு சில நிபந்தனைகளை ஒடிஸா அரசு நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இத்தாலியரான Bosuscoவும் இவ்வியாழனன்று விடுவிக்கப்பட்டார்.
எனினும், மாவோயிஸ்ட்களால் மார்ச் 24ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் Jhina Hikaka இன்னும் விடுவிக்கப்படவில்லை.


8. இந்தியாவில் இலவசக் கல்விச் சட்டம்

ஏப்.12,2012. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி வழங்கும் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்குட்பட்டு பள்ளிகளில் ஏழைச் சிறாருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்துச் சிறாருக்கும் 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி வழங்க வகை செய்யும் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் பதிவானது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி S H Kapadia தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழு இவ்வியாழனன்று தீர்ப்பளித்தது. இதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்கும் சட்டம் இவ்வியாழன் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உதவி பெறாத பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசு உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் பல மாநிலங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.


9. Dementia நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் - WHO

ஏப்.12,2012. Dementia என்ற மனத்தளர்ச்சியினால் மனநிலை பாதிப்பு நோய்க்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 6 கோடியே 57 இலட்சமாக அதிகரிக்கக்கூடும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவரீதியாகக் கண்டுபிடிப்பது, அதிக வருவாயுள்ள நாடுகளில்கூட குறைபடுகின்றது என்று கூறும் அந்நிறுவனம், தற்போது உலகிலுள்ள 3 கோடியே 56 இலட்சம் dementia நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துப் பராமரிக்க ஆண்டுக்கு 60,400 கோடி டாலர்களுக்கும் அதிகமானத் தொகை செலவாகின்றது என்று தெரிவித்தது.
மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களால் ஏற்படும் இந்நோய், நினைவு, சிந்தித்தல், நடத்தை ஆகியவற்றைப் பாதித்து, அன்றாட வேலைகளைச் செய்வதற்குரிய திறனையும் குறைக்கின்றது.
தற்போது உலகில் எட்டு நாடுகளில் மட்டுமே dementia நோய்த்தடுப்புக்கு நாடு தழுவிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...