Tuesday 10 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 09 ஏப்ரல் 2012

1. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

2. செப்டம்பர் மாதம் லெபனனில் திருத்தந்தையின் திருப்பயணம்

3. கத்தோலிக்கர்கள் சிலுவை அடையாளத்தை வெளிப்படையாக அணிய வேண்டும் - கர்தினால் Keith O’Brien

4. செல்வச்செழிப்பு மனிதர்களிடையில் பிளவுகளை அதிகரித்து வருகிறது - தென் கொரிய ஆயர்கள்

5. உயிர்ப்புப் பெருவிழாவன்று ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் 3500க்கும் அதிகமான  வயது வந்தோர் திருமுழுக்கு பெற்றனர்

6. உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்தியப் பிரதமர் தெரிவித்த வாழ்த்துக்கள்

7. மருந்துக்குக் கட்டுப்படாத மலேரியா: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

ஏப்ரல்,09,2012. பெண்கள் நம் ஆண்டவரோடு கொண்டிருந்த சிறப்பான பிணைப்பு அனுபவம், கிறிஸ்தவ சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு முக்கியமானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த இத்திங்களன்று Castel Gandolfo வில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, அக்காலத்தில் இஸ்ரேலில் பெண்களின் சாட்சியத்திற்கு அதிகாரப்பூர்வ சட்டரீதியான மதிப்பு இல்லையெனினும், பெண்கள் நம் ஆண்டவரோடு சிறப்பான பிணைப்பை அனுபவித்தார்கள் என்று கூறினார்.
உயிர்த்த இயேசு அளித்த காட்சிகளிலும், அவரின் திருப்பாடுகள் மற்றும் மரணம் பற்றிய நிகழ்வுகளிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம் என்றுரைத்த அவர், நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய உயிர்த்த ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னத்தை நாமும் அனுபவிக்க அன்னைமரியின் பரிந்துரையை நாடுவோம் என்றும் கூறினார்.
உயிர்ப்புத் திங்கள், பல நாடுகளில் ஓய்வு மற்றும் பொழுது போக்கு நாளாக அமைந்துள்ளது, மக்கள் நகரத் தெருக்களில் ஓய்வாக நடந்தும், நண்பர்களோடும் குடும்பங்களோடும் நேரத்தைச் செலவழித்தும் இவ்விடுமுறை நாளைச் செலவழிக்கின்றனர், ஆயினும், நம் விசுவாசத்தின் பேருண்மையான ஆண்டவரின் உயிர்ப்பு இவ்விடுமுறைக்கு உண்மையான காரணம் என்று கூறினார் திருத்தந்தை.
நற்செய்தி எழுத்தாளர்கள், உயிர்ப்பை விவரிக்கவில்லை, இந்த உயிர்ப்பு நிகழ்வு, நம் அறிவுக்கு எட்டாத மறைபொருளாக, நம் கண்களால் தாங்க முடியாத ஒளியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
புனித மத்தேயு இந்நிகழ்வை பெரிய நிலநடுக்கமாகவும், மின்னல் போன்ற ஒளிநிறைந்த ஆண்டவரின் தூதர் கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்  எனவும் விவரிக்கிறார். பெண்கள் தூதர்களிடமிருந்து உயிர்ப்பு பற்றிய அறிவிப்பைப் பெற்ற போது, அச்சமும் பெருமகிழ்ச்சியும் நிறைந்தவர்களாய், சீடர்களிடம் அறிவிக்க விரைந்தனர், அந்த நேரத்தில் அவர்களும் இயேசுவைச் சந்தித்து அவரது காலடிகளில் பணிந்து அவரை வணங்கினர், இயேசுவும் அவர்களிடம், அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்' என்றார் என்றும் திருத்தந்தை அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார்.
பின்னர் பல மொழிகளில் பயணிகளை வாழ்த்தி, அவர்களுக்குத் தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. செப்டம்பர் மாதம் லெபனனில் திருத்தந்தையின் திருப்பயணம்

ஏப்ரல்,09,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு செப்டம்பர் 14 முதல் 16 வரை லெபனன் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்வார் என லெபனன் நாட்டு அரசும்  அந்நாட்டு ஆயர் பேரவையும் அறிவித்துள்ளன.
2010ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை வத்திக்கானில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத்தொகுப்பை வெளியிடும் நோக்கில் இந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை.
லெபனன் அரசுத்தலைவரின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் இத்திருப்பயணம், லெபனனுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவின் ஆழத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும் என திருப்பீட பத்திரிகைத்துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
நாட்டின் அரசியல், சமூக மற்றும் மதத்தலைவர்களை இந்த செப்டம்பர் திருப்பயணத்தின்போது சந்திக்க உள்ள திருத்தந்தை, லெபனன் இளைஞர்களையும் தனியாக சந்திப்பார் என தலைநகர் பெய்ரூட் பேராயர் Boulos Matar வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. கத்தோலிக்கர்கள் சிலுவை அடையாளத்தை வெளிப்படையாக அணிய வேண்டும் - கர்தினால் Keith O’Brien

ஏப்ரல்,09,2012. நமது வாழ்வில் சிலுவை பெறவேண்டிய முக்கியமான ஓரிடத்தை உயிர்ப்புப் பெருவிழா நினைவுறுத்துகிறது என்று ஸ்காட்லாந்து பேராயர் கர்தினால் Keith O’Brien கூறினார்.
ஸ்காட்லாந்தின் Edinburgh அன்னைமரியா பேராலயத்தில் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் O’Brien, கத்தோலிக்கர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அடையாளமாக சிலுவையைக் கருத வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாய் இருந்த சிலுவையை ஒரு துயர அடையாளமாகக் கருதுவதற்குப் பதிலாக, மீட்பின் ஒரு வழியாக இதைக் காணவேண்டும் என்று கர்தினால் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
சிலுவை அடையாளத்துடன் திருமுழுக்கு பெறும் அனைத்து கத்தோலிக்கர்களும் தங்கள் வாழ்வு முழுவதும் அந்த அடையாளத்தை வெளிப்படையாக அணிவதன் மூலம் கிறிஸ்துவின் சீடர்கள் என்று உலகறியச் செய்ய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் கர்தினால் O’Brien.
அண்மையில் பிரித்தானியாவில் சிலுவையை வெளிப்படையாக அணிவதுபற்றிய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள வேளையில், கர்தினால் Keith O’Brien தன் செய்தியின் வழியாக சிலுவையின் முக்கியத்துவத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.


4. செல்வச்செழிப்பு மனிதர்களிடையில் பிளவுகளை அதிகரித்து வருகிறது - தென் கொரிய ஆயர்கள்

ஏப்ரல்,09,2012. தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவு செல்வம் வளர்ந்து விட்டபோதிலும், இந்தச் செல்வச்செழிப்பு மனிதர்களிடையிலும், மனிதர்கள் இயற்கையுடன் கொள்ளவேண்டிய உறவிலும் பிளவுகளை அதிகரித்து வருகிறது என்று தென் கொரியாவைச் சேர்ந்த ஆயர்கள் கூறியுள்ளனர்.
இறந்தோரிடமிருந்து உயிர்த்த இயேசுவே இவ்வுலகிற்கு நாம் வழங்கக்கூடிய மிகப் பெரும் கொடை என்று கூறும் ஆயர்களின் பாஸ்காச் செய்தி, உயிர்ப்புப் பெருவிழா, மனிதர்கள் மத்தியிலும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
செல்வச்செழிப்பில் வளர்ந்து வரும் மனித சமுதாயம், அதே வேளையில், தன்னலத்திலும் வளர்ந்து வருவது சமுதாயத்தின் இருள் நிறைந்த ஒரு பகுதி என்பதை எடுத்துரைக்கும் ஆயர்கள், செல்வச்செழிப்பும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களை ஒருவர் ஒருவரிடமிருந்து பிரித்து, பகைமையை வளர்ப்பது குறித்து தங்கள் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
ஆயர்களின் இச்செய்தியை வெளியிட்ட Seoul உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Nicholas Cheong Jin-suk, ஏப்ரல் 11, இப்புதனன்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.


5. உயிர்ப்புப் பெருவிழாவன்று ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் 3500க்கும் அதிகமான  வயது வந்தோர் திருமுழுக்கு பெற்றனர்

ஏப்ரல்,09,2012. புதிதாகத் திருமுழுக்கு பெறுவோருக்கு மறைகல்வி வழங்கியதன் மூலம் மறைகல்வி ஆசிரியர்கள் மற்றவர்களின் விசுவாசத்தை மட்டுமல்லாமல், தங்கள் விசுவாசத்தையும் உறுதிப்படுத்துகின்றனர் என்று ஹாங் காங் கர்தினால் John Tong கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவன்று ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் 3500க்கும் அதிகமான  வயது வந்தோர் திருமுழுக்கு பெற்றதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் John Tong, தான் வழங்கிய உயிர்ப்புச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் ஹாங் காங் பகுதியில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் John Tong, எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், விசுவாசத்தின் ஆழத்திலும் கத்தோலிக்கர்கள் வளர வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
ஹாங் காங் உயர்மறைமாவட்டத்தில் தற்போது சீன இனத்தைச் சேர்ந்த 3,63,000 கத்தோலிக்கர்களும், 1,38,000௦ சீனரல்லாத கத்தோலிக்கர்களும் உள்ளனர். இவர்கள் மத்தியில் 1500க்கும் அதிகமான மறைகல்வி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


6. உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்தியப் பிரதமர் தெரிவித்த வாழ்த்துக்கள்

ஏப்ரல்,09,2012. உயிர்ப்புப் பெருவிழா கருணையையும், மனித உறவையும் வலுப்படுத்தும் ஒரு நாள், நல்லதொரு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை உருவாக்கும் நாள் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்திய மக்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் இவ்வாறு கூறினார்.
பொய்மையையும், தீமையையும் உண்மை என்றும் வெல்லும் என்பதும், வெறுப்பைவிட அன்பே உலகில் சக்திவாய்ந்தது என்பதும் இந்த உயிர்ப்பு விழாவின் உள்ளார்ந்த அர்த்தம் என்று பிரதமர் தன் செய்தியில் குறிப்பிட்டார்.
இந்த விழா இந்திய மக்களிடையே ஒற்றுமையுணர்வையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்கையும் வளர்க்க வேண்டும் என்ற தன் ஆவலையும் இந்தியப் பிரதமர் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.


7. மருந்துக்குக் கட்டுப்படாத மலேரியா: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஏப்ரல்,09,2012. மலேரியா நோய்க்கிருமிகள், மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
மலேரியா நோய்க்கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது. இக்கிருமிக்கு எதிராக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்குக் கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக கம்போடியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த வகையான நோய்க்கிருமிகள், முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் தூரத்தில், பர்மா தாய்லாந்து எல்லைப்பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேரியா நோய்க் கிருமிகளைக் கடந்த பத்தாண்டுகள் ஆராய்ந்துவருபவர்கள், இந்நோயை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆபத்து இது என, தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ இதழில் தெரிவித்துள்ளனர்.
கொசுக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரிம்பித்தால், அரசுகளும், பிற உதவியமைப்புகளும் என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாமற்போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...