Tuesday 24 April 2012

Catholic News 24 April 12

1. சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில்

2. சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சர்வதேச சமுதாயம் உதவ பேராய‌ர் அழைப்பு

3. சிறுபான்மை மதத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார் பாகிஸ்தான் பேராயர் கூட்ஸ்

4. மதங்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் உலக அமைதிக்கு உதவ வேண்டும்

5. முதல் முறையாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு திருத்தந்தையின் விருது

6. இசுலாமிய‌ ம‌சூதி அக‌ற்ற‌ப்ப‌ட‌ இல‌ங்கை அமைச்ச‌க‌ம் க‌ட்ட‌ளை

7. ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர்இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள்

8. தட்டம்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் யுக்திகள் அவற்றின் இலக்கை அடையவில்லை லான்செட் இதழ்

-------------------------------------------------------------------------------------------

1. சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில்

ஏப்ரல்,24,2012. இவ்வாண்டு அக்டோப‌ர் மாத‌ம் துவ‌க்க‌ப்ப‌ட‌விருக்கும் விசுவாச‌ ஆண்டின் பின்னணியில் சீன‌க் க‌த்தோலிக்க‌ர்க‌ளுக்கு விசுவாசக்கல்வி வழங்கும் வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து சீனாவிற்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் வத்திக்கானில் இடம்பெற்று வருகிறது.
திருப்பீட அதிகாரிகள், சீன கத்தோலிக்க திரு அவையின் பிரதிநிதிகள், துறவு சபைகளின் அங்கத்தினர்கள் ஆகியோரைக் கொண்டு 2007ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வவை, சீனக் கத்தோலிக்கர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஃபீதேஸ் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இம்மாதம் இடம்பெற்ற இயேசு உயிர்ப்புத் திருவிழாவின்போது சீனாவில் 22 ஆயிரத்து 104 பேர் கத்தோலிக்க மறையைத் தழுவியுள்ளனர்.

2. சூடான் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சர்வதேச சமுதாயம் உதவ பேராய‌ர் அழைப்பு

ஏப்ரல்,24,2012. சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தென் சூடான் தலைநகர் ஜூபாவின் பேராய‌ர் Paulino Lukudu Loro.
தென் சூடான் எல்லைப்ப‌குதியை நோக்கி பெரிய‌ அள‌வில் சூடான் ப‌டைக‌ள் அனுப்ப‌ப்ப‌டுவ‌தாக‌வும், எண்ணெய் வ‌ள‌ப்ப‌குதியான‌ Heglig குறித்த‌ விவாத‌ங்க‌ள் பெரும் மோத‌லாக‌ உருவெடுத்துள்ள‌தாக‌வும் க‌வ‌லையை வெளியிட்ட‌ பேராய‌ர், இந்த‌ப் பிர‌ச்னைக்கான‌ தீர்வு ச‌ர்வ‌தேச‌ த‌லையீட்டின் மூல‌ம் பெற‌ப்ப‌ட‌ முடியும் என்றார்.
சூடான் விமானப்படையினர், தென்சூடான் எல்லையில் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கி வருவது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் பேராயர்.
தென்சூடானுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் முன்வரப் போவதில்லை, துப்பாக்கிக் குண்டுகளே பேசும் என சூடான் அரசுத்தலைவர் Omar al Bashir வெளியிட்ட கருத்து, தென் சூடான் மக்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார் பேராய‌ர் Lukudu Loro.

3. சிறுபான்மை மதத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறார் பாகிஸ்தான் பேராயர் கூட்ஸ்

ஏப்ரல்,24,2012. கிறிஸ்தவர்கள் என்ற முறையிலும், மத சிறுபான்மையினர் என்ற வகையிலும் முழு மாண்பு மற்றும் விடுதலையுடன் கூடிய சரிநிகர் உரிமைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் குரல் கொடுப்பதாக அறிவித்தார் பாகிஸ்தான் பேராயர் ஜோசப் கூட்ஸ்.
பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தவருக்கு சரிநிகர் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் கத்தோலிக்க ஃபீதேஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கராச்சி பேராயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் கூட்ஸ், கிறிஸ்தவர்களும் சரிநிகர் உரிமையுடைய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் விசுவாசத்தைக் கடைபிடிக்க உதவும் உரிமைகளும் சுதந்திரமும் மதிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய மிகப்பெரும் சவாலாக உள்ளதாக அறிவித்தார்.
கல்வித்தொடர்புடையவைகளில் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் மிகப்பெரிய அளவில் பாகுபாட்டை எதிர்கொள்வதால் கிறிஸ்தவர்களின் கல்வியில் அதிகக்கவனம் செலுத்தவேண்டிய ஓர் அவசரத்தேவை உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.
பாகிஸ்தானில் மதசகிப்பற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், கிறிஸ்தவர்கள் மீதான பகைமை உணர்வுடன் கூடிய தாக்குதல்கள் தொடர்வதாகவும் கூறினார் பேராயர் கூட்ஸ். பாகிஸ்தானின் குடிமக்களாக இருந்து இஸ்லாமியர்களின் மதிப்பீடுகளை பகிர்கிறபோதிலும், கிறிஸ்தவர்கள் அந்நியர்களாகவே நோக்கப்ப்படுவது வருத்தம் தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர் கூட்ஸ்.

4. மதங்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் உலக அமைதிக்கு உதவ வேண்டும்

ஏப்ரல்,24,2012. உலகில் அமைதியையும், சிறுபான்மையினருக்குரிய மதிப்பையும் வளர்க்கும் நோக்கில் மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டும் என இந்தோனேசியாவில் இடம்பெற்ற பலசமய கருத்தரங்கில் இத்திங்களன்று அழைப்பு விடப்பட்டது.
ஜகார்தாவில் சான் எஜிதியோ குழுவால் ஏற்பாடுச் செய்யப்பட்ட பல்சமய உரையாடல் கருத்தரங்கின் துவக்க விழாவில் பங்கேற்ற இந்தோனேசிய மற்றும் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இக்கருத்தை வெளியிட்டனர்.
ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் தன்மையுடன் கூடிய பாலங்களை கட்டியெழுப்புவதே உலகில் அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வழி வகுக்கும் என்றார் இந்தோனேசிய அமைச்சர் Marty Natalegawa.
இதே கருத்தரங்கில் உரையாற்றிய இத்தாலிய அமைச்சர் ஜூலியோ தெர்சி, சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் இருக்கவேண்டும் என்று கூறினார்.
ஜகார்த்தா பேராயர் Ignatius Suharyo, இந்தோனேசிய இஸ்லாமிய அமைப்பு தலைவர் Din Syamsuddin, சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பின் தலைவர் Marco Impagliazzo ஆகியோருடன் மதப்பிரதிநிதிகள் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

5. முதல் முறையாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு திருத்தந்தையின் விருது

ஏப்ரல்,24,2012. சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஓர் ஆன்மீகத் தலைவருக்கு முதல் முறையாக திருத்தந்தையின் விருது ஒன்று வழங்கப்படுவது மகிழ்வு தரும் நிகழ்வு என்று இங்கிலாந்தின் Birmingham பேராயர் Bernard Longley கூறினார்.
திருத்தந்தை புனித பெரிய கிரகோரி அவர்கள் நினைவாக பாப்பிறைத் தளபதி என்ற விருது தலைசிறந்த சேவை செய்துள்ள கத்தோலிக்கர்களுக்கு பொதுவாக வழங்கப்படும். வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆயினும், கத்தோலிக்கத் திருஅவைக்கு சிறந்த பணியாற்றியவர்களுக்கு மிக அரிதாக இவ்விருது வழங்கப்படும். சீக்கியர்களின் குருநானக் Nishkam Sewak Jatha என்ற பிறரன்புச் சேவை அமைப்பின் தலைவரான Bhai Sahib Bhai Dr Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு இஞ்ஞாயிறன்று இவ்விருது திருத்தந்தையின் பெயரால் வழங்கப்பட்டது.
சமயங்களுக்கிடையே இணைப்பை உருவாக்கவும், பிறரன்பு சேவைகள் ஆற்றவும் தன் வாழ்வைச் செலவிட்டு வரும் Mohinder Singh Ahluwalia அவர்களுக்கு திருத்தந்தையின் இந்த உயரிய விருது வழங்கப்படுவதால், சமய உரையாடல், பிறரன்புச் சேவைகள் ஆகியவற்றிற்குத் திருத்தந்தையும், கத்தோலிக்கத் திருஅவையும் வழங்கும் தனி கவனம் வெளிப்படுகிறது என்று பேராயர் Longley கூறினார்.
சீக்கியர்களின் ஆன்மீகத் தலைவராக பணியாற்றும் Mohinder Singh Ahluwalia, திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால், மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் அசிசி நகரில் நடத்திய அனைத்துலக பல்சமயத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்.

6. இசுலாமிய‌ ம‌சூதி அக‌ற்ற‌ப்ப‌ட‌ இல‌ங்கை அமைச்ச‌க‌ம் க‌ட்ட‌ளை

ஏப்ரல்,24,2012. இலங்கையில் புத்த மதத்தவரின் புனிதப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் தம்புள்ளை நகரிலிருந்து 50 வருட தொன்மையுடைய இசுலாமிய மசூதியும், இந்து கோவில் ஒன்றும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளது அந்நாட்டு மத விவகார அமைச்சகம்.
தம்புள்ளையின் கிராமப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புத்த மதத்துறவிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்ப‌ட்ட‌தாக‌ ம‌த‌ விவ‌கார‌ங்க‌ளுக்கான‌ அமைச்ச‌க‌ம் அறிவித்த‌து.
தம்புள்ளை அடுத்த‌ ஆறு மாத‌ங்க‌ளுக்குள் புனித‌ ந‌க‌ராக‌ நிறுவ‌ப்ப‌ட்டு, அங்குள்ள அனும‌தி பெறாத‌ அனைத்து க‌ட்டிட‌ங்க‌ளும் அக‌ற்ற‌ப்ப‌டும் என்றார் அப்பகுதியின் புத்த‌ த‌லைமைக்குரு Inamaluwe Sri Sumangala Thero.
தம்புள்ளை ப‌குதியிலிருந்து இசுலாம் ம‌ற்றும் இந்துக் கோவில்க‌ளை அக‌ற்றுவ‌த‌ற்கான‌ அமைச்ச‌க‌த்தின் தீர்மான‌த்தை அர‌சு நிறைவேற்ற‌வேண்டும் அல்ல‌து ம‌க்க‌ளின் போராட்ட‌த்தை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும் என மேலும் கூறினார் அவ‌ர்.
இத‌ற்கிடையே, தம்புள்ளை மசூதி, அர‌சு அனும‌தியுட‌னேயே க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும், அது க‌ட‌ந்த‌ 50 ஆண்டுக‌ளாக‌ எவ்வித‌ பிர‌ச்சனையும் இன்றி செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌தாக‌வும் அப்ப‌குதி இசுலாமிய‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.

7. ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர்இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள்

ஏப்ரல்,24,2012. பாலியல் செயல்பாடுகளில் இளையோர் அதிக அளவில் ஈடுபடுவதால், அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, பாலியல் வன்முறைகளுக்கும் உள்ளாகும் ஆபத்து உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மக்கள் தொகையும், சமுதாய முன்னேற்றமும் என்ற ஐ.நா.வின் பணிக்குழு நியூயார்க் நகரில் இத்திங்களன்று துவக்கிய ஒருவாரக் கருத்தரங்கின் முதல் அமர்வில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
47 நாடுகளின் பிரதிநிதிகளும், 500க்கும் அதிகமான அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில், இளையோரைத் தகுந்த வழியில் சக்திமிக்கவர்களாக மாற்றும் வழிகளை அனைத்து நாடுகளும் கண்டுணர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள் விடுத்தார்.
வருகிற ஜூன் மாதம் Rio+20 என்ற பன்னாட்டு உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் Rioவில் நடைபெறும் வேளையில், இளையோரை மனதில் கொண்டு உலகின் முன்னேற்றம் மேற்கொள்ளப்படுகிறதா என்ற கேள்வியை அனைத்து நாடுகளும் கேட்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்று ஐ.நா. தலைவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும் 2000 இளையோர் HIV நோயால் தாக்கப்படுகின்றனர் மற்றும், ஒவ்வோர் ஆண்டும் 1 கோடியே 60 இலட்சம் வளர் இளம் பெண்கள் தாய்மைப்பேறு அடைகிறார்கள் என்ற புள்ளி விவரங்களைக் கூறிய பான் கி மூன், இந்த எண்ணிக்கைகளை விரைவில் குறைக்கும் பெரும் கடமை உலகச் சமுதாயத்திற்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.

8. தட்டம்மையை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் யுக்திகள் அவற்றின் இலக்கை அடையவில்லை லான்செட் இதழ்

ஏப்ரல்,24,2012. தட்டம்மையால் ஏற்படும் இறப்புக்களை குறைப்பதற்கு உலக அளவில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி வேகமாக முன்னேறவில்லை என்று பிரிட்டன் மருத்துவ இதழ் Lancet அறிவித்தது.
Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, 2000 மாம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தட்டம்மை நோய் இறப்புக்களை 90 விழுக்காடு குறைப்பதாய்த் திட்டமிடப்பட்டிருந்தது, ஆயினும், இவற்றில் 74 விழுக்காட்டு இறப்புக்களையே தடுக்க முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.
ஆப்ரிக்காவில் இந்நோய் பரவி வருவதும், இந்தியாவில் இந்நோய்க்குத் தடுப்பூசி போடும் திட்டங்கள் தாமதம் அடைவதும் இந்நிலைக்குக் காரணம் என்றும் அவ்விதழ் சுட்டிக் காட்டியுள்ளது.
தட்டம்மையால் இரண்டாயிரமாம் ஆண்டில் 5,35,300 பேரும், 2010ம் ஆண்டில் 1,39,300 பேரும் இறந்தனர் என்றும் கூறும் அவ்விதழ், இவ்வெண்ணிக்கைக் குறைவு 2007ம் ஆண்டு வரை வேகமாக இருந்தது, அதற்குப் பின்னர் தாமதம் ஏற்பட்டது என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் இவ்விறப்புக்களை 95 விழுக்காடாகக் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
2010ம் ஆண்டில் 1 கோடியே 90 இலட்சம் குழந்தைகள் தட்டம்மைநோய்த் தடுப்பூசிகள் பெறவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...