Friday, 20 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 20 ஏப்ரல் 2012

1. திருத்தந்தை : திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

2. அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் திருப்பீடத் தூதர்

3. விசுவாச ஆண்டு திருத்தந்தையின் ஏழாம் ஆண்டு பரிசு பேராயர் கோமெஸ்

4. மெக்சிகோவில் ஏழாவது உலக சுற்றுலா மாநாடு

5. தாய்லாந்து மக்கள் வாழ்வை மதிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

6. ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது

7. போர்னெயோ தீவில் பருவமழைக் காடுகளைப் பாதுகாப்பது குறித்த கூட்டம்

8. மியான்மாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து நாடுகள் மறுபரிசீலனை

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

ஏப்.20,2012. புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டியது திருஅவையின் வாழ்வுக்கும் பணிக்கும் இன்றியமையாததும் அடிப்படையானதுமாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் இவ்வெள்ளியன்று ஐந்து நாள்கள் ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்துள்ள பாப்பிறை விவிலியக் கழகத்துக்குச் செய்தி அனுப்பியிருந்த திருத்தந்தை, இவ்விவிலியக் கழகத்தின் தரமான ஆய்வுகளின் அவசியம் குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.
விவிலியத்தின் உள்தூண்டுதலும் உண்மையும் என்ற இக்கூட்டத்தின் தலைப்பை மையமாக வைத்து அமைந்திருந்த திருத்தந்தையின் இச்செய்தி, புனித நூல்களின் தூண்டுதலைப் புறக்கணித்து அல்லது அதனை மறந்து அவற்றுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள், அவற்றின் மிக முக்கியமான மற்றும் மதிப்பு மிக்க கூறைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று கருதப்படும் என்று கூறுகிறது.
திருத்தந்தையின் இச்செய்தி, பாப்பிறை விவிலியக் கழகத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடாவுக்கு அனுப்பப்பட்டது.
2. அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் திருப்பீடத் தூதர்

ஏப்.20,2012. தங்களது தாயகத்தில் எதிர்நோக்கும் சமய அடக்குமுறையைத் தடுப்பதற்கும், உலகெங்கும் உண்மையான சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் உழைக்க வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய கத்தோலிக்க செப நிகழ்வில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Francis A. Chullikatt இவ்வாறு கூறினார்.  
மனித சமுதாயத்தின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்றுரைத்த பேராயர் Chullikatt, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக வாழும் போது மரண அச்சுறுத்தலை எதிர்நோக்குவதன் அர்த்தத்தை ஈராக்கில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய போது உணர முடிந்தது என்று கூறினார்.
வகுப்புவாத வன்முறையின் கொடுமைகளைத் தான் நேரில் பார்த்ததாகவும், தனக்குத் தெரிந்த மக்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதையும் தான் அறிந்ததாகவும் பேராயர் விளக்கினார்.
கடவுள் மீதான பற்றுறுதியும் சமய சுதந்திரமும் ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்றும் ஐ.நா.வுக்கானத் திருப்பீட தூதர் கூறினார்.

3. விசுவாச ஆண்டு திருத்தந்தையின் ஏழாம் ஆண்டு பரிசு பேராயர் கோமெஸ்

ஏப்.20,2012. பாப்பிறையாக ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்கு வழங்கியிருக்கும் சிறந்த பரிசாக, மலரவிருக்கும் விசுவாச ஆண்டு அமைந்துள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 19 இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த Los Angeles பேராயர் Jose H. Gomez, திருத்தந்தை அறிவித்துள்ள விசுவாச ஆண்டு, ஒவ்வொருவரும் தங்களது விசுவாசம் பற்றிச் சிந்திப்பதற்கு ஏற்ற காலம் என்று கூறினார்.
தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள திருத்தந்தை அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வது பெரிய ஆசீர்வாதம் என்றும், அவருக்காக நாம் செபிக்க வேண்டுமென்றும் Los Angeles பேராயர் Gomez வலியுறுத்தினார். 

4. மெக்சிகோவில் ஏழாவது உலக சுற்றுலா மாநாடு

ஏப்.20,2012. மாற்றத்தைக் கொணரும் சுற்றுலா என்ற தலைப்பில் இம்மாதம் 23 முதல் 27 வரை மெக்சிகோ நாட்டு Cancún ல் ஏழாவது உலக சுற்றுலா மாநாட்டை நடத்தவுள்ளது திருப்பீட சுற்றுலா அவை.
மெக்சிகோ ஆயர் பேரவையின் ஒத்துழைப்புடன் குடியேற்றதாரர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர்க்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவை நடத்தும் இம்மாநாட்டில் நான்கு கண்டங்களின் 40 நாடுகளிலிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆப்ரிக்க நாடுகள், 16 அமெரிக்க நாடுகள், 6 ஆசிய நாடுகள், 13 ஐரோப்பிய நாடுகள் என இம்மாநாட்டில் பங்கு பெறும் பிரதிநிதிகள், சுற்றுலாக்களின் பல்வேறு கூறுகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
UNWTO என்ற ஐ.நா.வின் சுற்றுலா நிறுவனத்தின் கணிப்புப்படி, 2011ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.4 விழுக்காடு அதிகரித்தது என்றும் ஏறக்குறைய 98 கோடி மக்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.

5. தாய்லாந்து மக்கள் வாழ்வை மதிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

ஏப்.20,2012. தாய்லாந்து மக்கள் மனித வாழ்வை மதித்து, கருக்கலைப்பு மற்றும் தற்கொலைகளைத் தவிர்த்து நடக்குமாறு அந்நாட்டு ஆயர் பேரவை அரசுக்கும் குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாய்லாந்து சமுதாயத்தில் நிலவும் ஆன்மீக வெறுமையையும் பிளவுகளையும் அகற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், வருகிற செப்டம்பரில் வெளியிடப்படும் ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கை அமைந்துள்ளது என்று அருட்பணி Otfried Chan தெரிவித்தார்.
தாய்லாந்து ஆயர்களின் அறிக்கை குறித்துப் பேசிய, அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் அருட்பணி Chan, கருவில் வளரும் குழந்தைகளின் பாதுகாவலரான புனித Gianna பக்தியைப் பரப்பவும், மக்கள் கருக்கலைப்பைப் புறக்கணிக்கவும் ஆயர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர் என்று தேசிய நலவாழ்வுத் துறை கூறியது.
ஆயினும் இவ்வெண்ணிக்கை சுமார் 5 இலட்சம் என்று அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியுள்ளது. 

6. ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது

ஏப்.20,2012. உலகில் ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிகளில் நிதி சேமிப்பு வசதிகள் கிடையாது என்று உலக வங்கி கூறியது.
கடந்த ஆண்டில் 148 நாடுகளில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களிடம் எடுத்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாக ஊதியம் பெறும் வயது வந்தோரில் 75 விழுக்காட்டினர் வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது.
சமமற்ற வருவாய்களினால் சுமார் 250 கோடிப் பேருக்கு வங்கிகளில் கணக்குகள் இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

7. போர்னெயோ தீவில் பருவமழைக் காடுகளைப் பாதுகாப்பது குறித்த கூட்டம்

ஏப்.20,2012. இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகளின் 2 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிலான பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், WWF என்ற உலக வனப் பாதுகாப்பு அமைப்பும் அதன் உறுப்பு அமைப்புகளும், இந்தோனேசிய அரசும் சேர்ந்து மூன்று நாள்கள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக புவி தினத்தையொட்டி ஜகார்த்தாவில், இவ்வுலகுக்கான பசுமைப் பொருளாதாரம் என்ற இக்கூட்டத்தை நடத்தியது இவ்வமைப்பு.
Heart of Borneo (HoB) என்ற பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Borneo தீவில் வெப்பமண்டல பருவமழைக்காடுகளைப் பாதுகாக்கும் Heart of Borneo என்ற திட்டத்திற்கு இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகள் 2007ம் ஆண்டில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

8. மியான்மாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து நாடுகள் மறுபரிசீலனை

ஏப்.20,2012. மியான்மாரில் இராணுவ ஆதிக்கத்துடன் ஆட்சி செய்து வரும் அரசு, தொடர்ந்து மக்களாட்சிப் பாதையில் சென்றால் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய சமுதாய அவையும் தெரிவித்துள்ளன.
மியான்மாரின் Thingyan புத்தாண்டையொட்டி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன், புதிய வாய்ப்புக்களுடன் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டுவதற்கு முயற்சிக்கும் மியான்மாருடன் அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு தற்போது மக்களாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.   
ஏப்ரல் 17ம் தேதி செவ்வாயன்று மியான்மாரில் புத்தாண்டு சிறப்பிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...