Tuesday, 3 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 31 மார்ச் 2012

1. சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் டாலர் உதவி

2. அரபு வசந்தம்சந்தர்ப்பவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது எருசலேம் முதுபெரும் தலைவர்

3. ஆலயங்களை அழிக்க அழைப்பு விடுக்கும் சவுதி அரேபிய முஸ்லீம் குருவின் அறிக்கைக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள் கண்டனம்

4. நிதி நெருக்கடி, அறநெறி நெருக்கடியில் ஆணிவேர்களைக் கொண்டுள்ளது - வத்திக்கான்-யூதமத உரையாடல் குழு

5. திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு, Templeton விருது

6. மதியிறுக்கம் நோயாளிகள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் களையப்பட பான் கி மூன் அழைப்பு

7. Marshall தீவுகளில் அறுபதுக்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் அணுப்பரிசோதனைகளின் விளைவுகள்

-------------------------------------------------------------------------------------------

1. சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் டாலர் உதவி

மார்ச்31,2012. சிரியாவில் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே இடம் பெற்று வரும் கடும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஒரு இலட்சம் டாலரை வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று திருப்பீட Cor Unum அவை அறிவித்தது.
சிரியாவில், குறிப்பாக ஹோம்ஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை, காரித்தாஸ் பிறரன்பு நிறுவனம் வழியாகப் பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்து வரும் வேளை, திருத்தந்தையும் அத்தலத்திருஅவையின் பணிகளுக்கென திருப்பீட Cor Unum  பிறரன்பு அவை மூலம் ஒரு இலட்சம் டாலரை வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று அவ்வவை அறிவித்தது.
திருத்தந்தை வழங்கும் இந்நிதியுதவியை, திருப்பீட Cor Unum  பிறரன்பு அவைச் செயலர் பேரட்திரு. Giampietro Dal Toso இச்சனிக்கிழமை சிரியா நாட்டுத் திருஅவையிடம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரியா நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் முதுபெரும் தலைவர் 3ம் கிரகோரியோஸ் லாகம்மையும் பிற தலத்திருஅவை அதிகாரிகளையும் சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் வன்முறை முடிவுக்கு வரவும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சண்டையிடும் தரப்பினர் உரையாடல் மூலம் அமைதி மற்றும் ஒப்புரவுப் பாதையில் செல்லுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார். துன்புறும் மக்களுக்காகச் செபிப்பதாகவும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிரியாவின் துருப்புக்கள் நகரங்களைவிட்டுச் செல்ல வேண்டுமென, ஐ.நா. அமைதிப்பணிக்குழு வேண்டுகோள் விடுத்ததற்குப் பதில் அளித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர், சிரியாவில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படும் வரை, அந்நாட்டுத் துருப்புக்கள் நகரங்களின் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் என அறிவித்துள்ளார்.
சிரியாவில் ஏறக்குறைய ஓராண்டளவாக நடைபெற்று வரும் சண்டையில் குறைந்தது 9,000 பேர் இறந்துள்ளனர்.

2. அரபு வசந்தம்சந்தர்ப்பவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது எருசலேம் முதுபெரும் தலைவர்

மார்ச்31,2012. அரபு வசந்தம்என அழைக்கப்படும் பல அரபு நாடுகளில் தொடங்கிய மக்கள் கிளர்ச்சிகள், ஆரம்பத்தில் உண்மையான மற்றும் ஆரோக்யமான இயக்கங்களாகவே இருந்தன, ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அந்த இயக்கங்கள் திசை மாறி விட்டன என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal  குறை கூறினார்.
இந்த இயக்கங்களில் பங்கெடுக்காதவர்களும், அவற்றினின்று  கனிகளை அறுவடை செய்ய விரும்புவதே, இப்போது நடைபெற்று வருகின்றது என்றும் கூறினார் அவர்.
 பல அரபு நாடுகளில் எழும்பிய கிளர்ச்சிகளின் பயனாக, இசுலாமிய தீவிரவாதிகள் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளார்கள், சமய சுதந்திரம் குன்றி வருகிறது, கிறிஸ்தவர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள் என்றும் முதுபெரும் தலைவர் Twal  தெரிவித்தார்.
அரபு உலகின் முன்னேற்றங்கள் குறித்து கத்தோலிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த விரிவான நேர்காணலில் இவ்வாறு கூறிய  முதுபெரும் தலைவர் Twal, இந்த அரபு எழுச்சிகளில் மேற்கத்திய உலகின் கொள்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
லிபியாவில் மேற்கத்திய இராணுவத் தலையீடு குறித்து விமர்சித்த அவர், கடாஃபி மோசமானவர்என்று உணருவதற்கு, இந்நாடுகளுக்கு 43 ஆண்டுகள் எப்படித் தேவைப்பட்டன என்று நானே எனக்கு கேள்வி கேட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.

3. ஆலயங்களை அழிக்க அழைப்பு விடுக்கும் சவுதி அரேபிய முஸ்லீம் குருவின் அறிக்கைக்கு இந்தியக் கிறிஸ்தவர்கள் கண்டனம்

மார்ச்31,2012. அராபியத் தீபகற்பத்திலுள்ள அனைத்து ஆலயங்களும் அழிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று, சவுதி அரேபியாவின் பெரிய முஸ்லீம் குரு Sheikh Abdul Aziz bin Abdullah, இந்த மார்ச் மாதத்தின் மத்தியில் கூறியிருப்பதற்கு அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இம்முஸ்லீம் குருவின் அறிக்கை, கண்மூடித்தனமானது மற்றும் அரபு நாடுகளில் வாழும் பல கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானது என்று அக்கிறிஸ்தவ அவை கூறியது.
அராபிய தீபகற்பத்தில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் வாழும் சிறுபான்மை மதத்தவரிலும் இவ்வறிக்கை, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைத்திந்தியக் கிறிஸ்தவ அவையின் தலைவர் ஜோசப் டி சூசா கூறினார்.
சவுதி அரேபியாவிலும், பிற வளைகுடா நாடுகளிலும் வாழும் கிறிஸ்தவரில் பெரும்பாலானோர் இந்தியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அப்பகுதியில் வாழும் 35 இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவரில் குறைந்தது 8 இலட்சம் பேர் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர்.

4. நிதி நெருக்கடி, அறநெறி நெருக்கடியில் ஆணிவேர்களைக் கொண்டுள்ளது - வத்திக்கான்-யூதமத உரையாடல் குழு

மார்ச்31,2012. உலகில் நீதி நிறைந்த பொருளாதார அமைப்பைக் கொண்டு வருவதற்கு, மிதமான போக்கு, நேர்மை, உலகின் வளங்கள் நியாயமாகப் பங்கிடப்படல் ஆகியவை முக்கியமான கூறுகள் என்று திருப்பீட-யூதமத உரையாடல் பணிக்குழு கூறியது.
இஸ்ரேல் யூதமத முதன்மைக் குருவின் பிரதிநிதிகளும், திருப்பீட யூதமத உறவுகள் பணிக்குழுவின் பிரதிநிதிகளும் உரோமையில் நடத்திய மூன்று நாள்கள் கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தீர்மானங்கள் எடுக்கும் வழிமுறைகளில் ஒழுக்கநெறி ஆலோசகர்களாக, தேசிய மற்றும் சர்வதேசத் தலைவர்களும், கொள்கை அமைப்பாளர்களும் மாற வேண்டுமெனவும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
அண்மையில் உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அறநெறி விழுமியங்களின் நெருக்கடி என்றும், இது பேராசை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றது என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

5. திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு, Templeton விருது

மார்ச்31,2012. திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு, 2012ம் ஆண்டுக்கான Templeton விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியலின் பல்வேறு கூறுகளோடும், தனது சமய மரபையும் கடந்து பிற மக்களோடும் சேர்ந்து உலகளாவிய அறநெறிகளுக்காக, தலாய் லாமா குரல் கொடுத்து வருவதைக் கவுரவிக்கும் நோக்கத்தில் இவ்விருது வழங்கப்படுவதாக, Templeton விருதுக் குழு தெரிவித்தது.
ஏறக்குறைய 17 இலட்சம் டாலர் பெறுமான இவ்விருது, வருகிற மே மாதம் 14ம் தேதி இலண்டனில் தலாய் லாமாவுக்கு அளிக்கப்படும்.
1989ம் ஆண்டில் தலாய் லாமாவுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கு சீனாவில் 1935ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பிறந்த, இந்தத் திபெத்திய  புத்தமதத் தலைவரான Tenzin Gyatsoவுக்கு 2 வயது நடந்த போது, 14வது தலாய் லாமாவாக அறிவிக்கப்பட்டார்.

6. மதியிறுக்கம் நோயாளிகள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் களையப்பட பான் கி மூன் அழைப்பு

மார்ச்31,2012. Autism என்ற மதியிறுக்கம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் ஏற்றுக்கொள்ள முடியாதப் பாகுபாடு, பழிகூறல்கள், தனிமை ஆகியவற்றை நிறுத்துவதற்கு உலகளாவிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
மூளையின் சாதாரண வளர்ச்சியின்மையால் ஏற்படும் Autism என்ற நோய், ஒரு தனிப்பட்ட பகுதியை அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டை மட்டும் தாக்கவில்லை, உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதனை ஒழிப்பதற்கு பன்னாட்டு அளவில் நடவடிக்கைகள் தேவை என்றும் பான் கி மூன் கூறினார்.
வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக Autism என்ற மதியிறுக்கம் நோய் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், இந்நோயாளிகளும் சம உரிமை பெற்ற குடிமக்களே, இவர்கள் அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் அனுபவிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
2007ம் ஆண்டு டிசம்பரில், ஐ.நா.பொது அவை, ஏப்ரல் 2ம் தேதியன்று Autism விழிப்புணர்வு தினம் உலகில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானித்தது.
ஒருவரின் மூளை வளர்ச்சி பாதிப்பால், அவரின் மக்கள் தொடர்புத் திறன், சமுதாயத்தில் அவரின் செயல்பாடுகள்அவர் ஆர்வம் கொள்ளும் துறைகள், அவரின் நடத்தை போன்றவை இயல்பிற்கு மாறாக அமைகின்றன. இத்தகைய பாதிப்பு, Autism அதாவது மதியிறுக்கம் நோய் என்று அழைக்கப்படுகின்றது. இந்நோய், பொதுவாக குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைவதற்குமுன் பாதிக்கும். இது ஒரு நோயல்ல, மாறாக ஒரே அறிகுறிகளைக் கொண்ட பல நோய்களால் ஏற்படக்கூடியது என்றும் சிலர் கருதுகின்றனர்.

7. Marshall தீவுகளில் அறுபதுக்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் அணுப்பரிசோதனைகளின் விளைவுகள்

மார்ச்31,2012. Marshall தீவுகளில் அணுப்பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுபதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும், இன்னும் அந்நாட்டினர் அதன் பின்விளைவுகளை அனுபவித்து வருகின்றனர் என்று ஐ.நா. வல்லுனரின் அறிக்கை கூறுகிறது.
நிர்வாகம் மற்றும் ஆபத்தான கழிவுப் பொருள்களோடு தொடர்புடைய மனித உரிமைகள் குறித்த ஐ.நா.சிறப்புத் தொடர்பாளர் Calin Georgescu வெளியிட்ட அறிக்கையில், இந்த அணுப்பரிசோதனைகளை நடத்திய அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் சேர்ந்து Marshall தீவுகள் நாடு, இப்பிரச்சனையைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அணுப்பரிசோதனைகள் நடத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள நலவாழ்வுப் பாதிப்புக்கள் மற்றும் பிற மாற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பன்னாட்டுச் சமுதாயம் இவ்விவகாரத்தில் தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Marshall தீவுகளில், 1946க்கும் 1958ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 67 அணுப் பரிசோதனைகளை நடத்தியது அமெரிக்க ஐக்கிய நாடு.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...