Saturday, 29 March 2014

செய்திகள் - 29.03.14

செய்திகள் - 29.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தனது இயலாமையை அறிபவரால் மட்டுமே, சகோதரத்துவ உறவுகளை உருவாக்க முடியும்

2. படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்பை மனிதக் குடும்பம் முழுவதும் உணர வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

3. வத்திக்கான் பசிலிக்காவில் மற்ற விசுவாசிகளுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒப்புரவு அருளடையாளத்தில் கலந்து கொண்டார்

4. நாம் மனமாற கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ வேண்டும்,  திருத்தந்தை பிரான்சிஸ்

5. தவக்காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக, புதிய இணையதளம்

6. நசுக்கப்படும் கிறிஸ்தவருக்காகச் செபிக்குமாறு பாகிஸ்தான் ஆயர் ஒருவர் அழைப்பு

7. பொது மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு NUCF வேண்டுகோள்

8. மெல்லிய தோல்களில் எழுதப்பட்ட அரிய விவிலியப் பிரதிகள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு...

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தனது இயலாமையை அறிபவரால் மட்டுமே, சகோதரத்துவ உறவுகளை உருவாக்க முடியும்

மார்ச்,29,2014. தனது வலுவின்மையை, தனது வரையறைகளை அறிபவரால் மட்டுமே திருஅவையிலும், சமுதாயத்திலும் சகோதரத்துவ மற்றும் உறுதியான உறவுகளைக் கட்டியெழுப்ப முடியும் என்று, இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய பார்வையற்ற மற்றும் காதுகேளாத அமைப்புகளின் மாற்றுத்திறனாளிகளை, திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இயேசுவைச் சந்திப்பது பற்றியும், இயேசு சமுதாயத்தில் மக்களைத் தேடிவந்து சந்தித்தது பற்றியும் விளக்கினார்.
யூத சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட சமாரியப் பெண்ணை இயேசு சந்தித்ததிலிருந்து, தனக்குச் சாட்சி அளிக்க அவர் எத்தகைய மக்களைச் சந்திக்க விரும்புகிறார் என்பது தெளிவாகின்றது என்றுரைத்த திருத்தந்தை, பிறவியிலேயே பார்வையற்றிருந்த மனிதர் எவ்வாறு இயேசுவுக்குச் சாட்சி சொன்னார் என்பதையும் விளக்கினார்.
அதிகபட்ச பாதுகாப்பில் இருந்த பரிசேயர்களின் தலைவர்கள் இயேசுவை பாவி என்று தீர்ப்பிட, இயேசுவால் மீண்டும் பார்வை பெற்ற அம்மனிதர் இயேசுவுக்காக வாதாடியதோடு இறுதியில் அவர்மீதான விசுவாசத்தையும் அறிக்கையிட்டார் எனவும் கூறினார் திருத்தந்தை.
சந்திப்புக் கலாச்சாரம், முற்சார்பு கலாச்சாரம் என இரு முரண்பட்ட கலாச்சாரங்களை இங்கு பார்க்கிறோம் என்றும், நோயுற்ற, மாற்றுத்திறனாளியான ஒருவர் தனது வரையறைகளுக்கு உட்பட்டு சந்திப்பின் சாட்சியாக மாறினார் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு உங்களைச் சந்திப்பதற்கு வழிவிடுங்கள், அவர் ஒருவர் மட்டுமே மனிதரின் இதயத்தை உண்மையிலேயே அறிந்திருப்பவர், அவர் வாழ்வு மற்றும் நம்பிக்கைக்குத் திறப்பார் என்றும் தான் சந்தித்த மாற்றுத்திறனாளிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 
உலகில் ஏறக்குறைய 4 கோடியே 50 இலட்சம் பேர் பார்வையற்றவர்கள் மற்றும் 13 கோடியே 50 இலட்சம் பேர் பார்வைப் பிரச்சனை உள்ளவர்கள் என உலக நலவாழ்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்பை மனிதக் குடும்பம் முழுவதும் உணர வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,29,2014. படைப்பைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் கொண்டிருக்கும் பொறுப்பை மனிதக் குடும்பங்களும், இவ்வுலகமும் உணர்நது செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளார்.
குடும்பம் படைப்பின் பாதுகாவலர் என்ற தலைப்பில், திருப்பீட குடும்ப அவையும், Greenaccord அமைப்பும் இணைந்து உரோமையில் இச்சனிக்கிழமையன்று நடத்திய கூட்டத்துக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாழ்வின் கொடையைப் பாதுகாக்கும் சலுகையைக் கொண்டுள்ள குடும்பம், படைப்பு எனும் மாபெரும் கொடையை மதித்துப் பாதுகாப்பதைக் கற்றுக்கொடுக்கும் அடிப்படைத் தளமாகவும் அமைந்துள்ளது என, தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இக்கூட்டத்தினருக்குத் தனது ஆசீரையும் வழங்கியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, அவரின் பெயரால் இக்கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மேலும்,  கடவுளுக்கு இடமளிக்காத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்; இது தினம்தினம் நம் இதயங்களை மரத்துப்போகச் செய்கின்றது என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வத்திக்கான் பசிலிக்காவில் மற்ற விசுவாசிகளுடன் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஒப்புரவு அருளடையாளத்தில் கலந்து கொண்டார்

மார்ச்,29,2014. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் மற்ற விசுவாசிகளுக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் முதலில் தானே அவ்வருளடையாளத்தைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய, ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற மன்னிப்பு விழா திருவழிபாட்டில், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குக் காத்திருந்த மற்ற விசுவாசிகளுடன் இணைந்து தானும் ஒருவராக அவ்வருளடையாளத்தைப் பெற்றார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காகக் குறிக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் முதலில் அங்குச் செல்லாமல், அதற்கு அருகில் அவ்வருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காக அமர்ந்திருந்த ஓர் அருள்பணியாளரிடம் சென்று அவ்வருளடையாளத்தைப் பெற்றார். பின்னர் தனது இருக்கைக்குச் சென்று மற்ற விசுவாசிகளுக்கு அவ்வருளடையாளத்தை நிறைவேற்றினார்.
இவ்வெள்ளி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றிய 61 அருள்பணியாளர்களுள் தானும் ஒருவராக இருந்து ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நாம் மனமாற கடவுள் விடுக்கும் அழைப்பை வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ வேண்டும்,  திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,29,2014. நாம் மனமாற்றம் அடைவதற்கு கடவுள் விடுக்கும் அழைப்பை தவக்காலத்தில் மட்டுமல்லாமல் வாழ்வு முழுவதும் பின்பற்றி வாழ நாம் உறுதி எடுக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற மன்னிப்பு விழா திருவழிபாட்டில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய பண்புகள் குறித்து பேசினார்.
கடவுள் வழியில் படைக்கப்பட்ட புதிய வாழ்வை அணிந்து கொள்வது, கடவுளின் அன்பில் வாழ்ந்து அதைப் பகிர்ந்து கொள்வது ஆகிய இரு முக்கிய பண்புகள் குறித்து தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, திருமுழுக்கில் நமக்குக் கிடைக்கும் கிறிஸ்துவில் புதுவாழ்வு, உலகை நாம் புதுவிதமாய்ப் பார்க்க உதவுகின்றது என்று கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வின் இரண்டாவது முக்கிய பண்பு, கடவுளின் நித்திய அன்பில் வாழ்வதாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களது வழியை இழந்தவர்கள், தமக்குப் பிரமாணிக்கமாய் வாழ்பவர்கள் என, கடவுள் தமது அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் காத்திருப்பதில் சோர்வுறாதவர் என்றும் கூறினார்.
கடவுளின் அன்பு அடைத்து வைக்கப்படுவது அல்ல, இது இயல்பிலேயே பரந்து விரிந்த பலனுள்ள அன்பு, இது எப்போதும் புதிய அன்பை உருவாக்குகிறது என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. தவக்காலத்தில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஊக்குவிக்கும் விதமாக, புதிய இணையதளம்

மார்ச்,29,2014. ஒப்புரவு அருளடையாளத்தை அடிக்கடி பெறுவதற்கு, கத்தோலிக்கரை ஊக்குவிக்கும் விதமாக, GoodConfession.com என்ற இணையதளப் பக்கத்தைத் திறந்துள்ளது Catholics Come Home அமைப்பு.
Catholics Come Home அமைப்பின் தலைவர் Tom Peterson அவர்கள் இப்புதிய இணையதளம் பற்றிப் பேசியபோது, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாகக் கிடைக்கும் அருள்வரங்களைப் பெறுவதற்கு நம் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டியது,  கத்தோலிக்க விசுவாசத்தை நடைமுறைப்படுத்தும் தங்கள் அமைப்பினருக்கு உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த இணையதளத்தின் பலன்கள் அற்புதமானவை எனவும், பலரின் வாழ்வு மாறுவதைக் காண முடிகின்றது எனவும், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்ற பின்னர் உங்கள் ஆன்மாவிலிருந்து பளு நீக்கப்பட்டுவிட்டதாக உணருகின்றனர் எனவும் Tom Peterson கூறினார்.
அடிக்கடி ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதன்மூலம், ஒருவர் தன்னைப் புரிந்துகொள்வது அதிகரிக்கின்றது என்றும், தீமைகளை மேற்கொண்டு அமைதியைக் கொணருகின்றது என்றும் கூறினார் Tom Peterson.

ஆதாரம் : CNA

6. நசுக்கப்படும் கிறிஸ்தவருக்காகச் செபிக்குமாறு பாகிஸ்தான் ஆயர் ஒருவர் அழைப்பு

மார்ச்,29,2014. பாகிஸ்தானில் கிறிஸ்தவர் ஒருவர், தெய்வநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டு சமயத் தலைவர்களும், தன்னார்வக் குழுக்களும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் சிறையில் வைக்கப்பட்டிருந்த Sawan Masih என்ற 26 வயது கிறிஸ்தவருக்கு, லாகூரிலுள்ள ஒரு நீதிமன்றம் இவ்வெள்ளியன்று மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது .
இத்தீர்ப்பு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமபாத்-ராவல்பிண்டி ஆயர் Rufin Anthony அவர்கள், பொய்யானக் குற்றச்சாட்டை வைத்து மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதைக் காணும்போது கவலையாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
Sawan Masih, கல்வியறிவற்றவர் எனவும், இவர் எதற்காகக் குற்றம்சாட்டப்பட்டார் என்பதுகூட அவருக்குத் தெரியாது எனவும் கூறிய ஆயர் அந்தோணி அவர்கள், Sawan Masih, Asia Bibi ஆகிய இருவருக்காகவும் செபிப்போம் எனக் கூறியுள்ளார்.
தெய்வநிந்தனைச் சட்ட்த்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள Sawan Masih, Asia Bibi ஆகிய இருவரும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர் என்றும் ஆயர் அந்தோணி தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews                 

7. பொது மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு NUCF வேண்டுகோள்

மார்ச்,29,2014. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் உட்பட பொது மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்திய தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகத்திலுள்ள அனைத்து சபைகளும், தங்களின் தொகுதிகளிலுள்ள வேட்பாளர்களுடன் கூட்டம் நடத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துமாறும் இக்கழகம் கேட்டுள்ளது.
சில மாநிலங்களில் அமலில் இருக்கும் மனமாற்றத் தடைச்சட்டங்கள், சிறுபான்மைச் சமூகங்களை, குறிப்பாக, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்றுரைத்துள்ள அக்கழகம், நாட்டில் சமய சுதந்திரம் காக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளது. 
NUCF என்ற இந்திய தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகம், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இநதிய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை, இந்திய இவாஞ்சலிக்கல் தோழமை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும். 

ஆதாரம் : UCAN

8. மெல்லிய தோல்களில் எழுதப்பட்ட அரிய விவிலியப் பிரதிகள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு...

மார்ச்,29,2014. மெல்லிய தோல்களில் எழுதப்பட்ட ஏறக்குறைய 200 அரிய விவிலியப் பிரதிகள், வருகிற ஏப்ரல் 2 முதல் ஜூன் 22ம் தேதி வரை வத்திக்கானில் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
"Verbum Domini II: இறைவார்த்தை உலகெங்கும் செல்கிறது" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சாக்கடல் சுருள்களின் 3 துண்டுப்பிரதிகள், 1611ம் ஆண்டில் அச்சிடப்பட்ட King James Bibleன் மூலப்பிரதி, 1971ம் ஆண்டில் நிலவுக்கு எடுத்துச்செல்லப்பட்ட microchip விவிலியம் உட்பட அரிய விவிலியப் பிரதிகள் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 200ம் ஆண்டுவாக்கில் பப்பிரஸ் தாளில் எழுதப்பட்ட லூக்கா, யோவான் நற்செய்தி நூல்களும் இதில் இடம்பெறும்.
வத்திக்கானில் இதேபோன்ற அருங்காட்சியகம் வைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். King James Bible வெளியிடப்பட்டதன் 400ம் ஆண்டை முன்னிட்டு இரு ஆண்டுகளுக்கு முன்னர், வத்திக்கான் பசிலிக்காவுக்கு அருகிலுள்ள கார்லோ மாஞ்ஞோ அறையில் ஓர் அருங்காட்சியகம் வைக்கப்பட்டது.  

ஆதாரம் : CNS

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...