Tuesday, 24 April 2012

Catholic News 23 April 12

 
1.  ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி

2.   திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

3.  நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு - அமெரிக்க ஆயர்கள்

4.  பிலிப்பீன்ஸில் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்கள் குறித்து கிறிஸ்தவ சபைகள் கவலை.

5.   வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு உதவி வேண்டி இங்கிலாந்து கத்தோலிக்க அமைப்புகள் வேண்டுகோள்

6.  கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக AICUF மாணவர்கள் மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டம்

7.    தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 17 விழுக்காடு வீழ்ச்சி


-------------------------------------------------------------------------------------------

1.  ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி

ஏப்ரல்,23,2012. உலகின் பல்வேறு மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை அழகையும் சந்திக்க நாம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணங்கள் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் செல்லும் அரியதொரு வாய்ப்பு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மெக்சிகோ நாட்டின் Cancún நகரில் இத்திங்கள் முதல் ஏப்ரல் 27, வருகிற வெள்ளி வரை நடைபெறும் ஏழாவது சுற்றுலா மெய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு, நாடு விட்டு நாடு செல்வோர் மற்றும் பயணிகளுக்கு மெய்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliòவுக்கும் Cancún ஆயர் Pedro Pablo Elizondo Cárdenasக்கும் அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
"படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்." (13:5) என்று சாலமோனின் ஞானம் என்ற நூலில் காணப்படும் விவிலிய வார்த்தைகளை மேற்கோளாக எடுத்துக் கூறியத் திருத்தந்தை, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் அனுபவமாக மாறவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் சுற்றுலா என்ற வர்த்தகத்தால் விளைந்துள்ள தீமைகளையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். சுற்றுலா என்ற போர்வைக்குக் கீழ் மனித வர்த்தகங்கள் அதிகரித்து வருவதையும், முக்கியமாக, சிறுவர் சிறுமியர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதையும் திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பணியில் திருஅவை ஈடுபட்டிருப்பதன் நோக்கமே, இதன் வழியாக, உலக நாடுகளைக் காணும் பயணங்களை பொறுப்புள்ள வகையில் நடத்தும் வழிமுறைகளை கடைபிடிப்பதே என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
விடுமுறையின் வழியாக மக்கள் தங்கள் உடல்களை அமைதிப்படுத்தும் வேளையில், அவர்கள் மனங்களுக்குப் புத்துயிர் வழங்கும் வழிகளை திருஅவையின் மெய்ப்புப் பணி கண்டுபிடித்து மக்களை வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2.   திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

ஏப்ரல் 23, 2012.  உயிர்த்த இயேசு எவ்வாறு தன் சீடர்களுக்குத் தோன்றினாரோ அவ்வாறே இன்றும் நம்மிடையே தன் வார்த்தை மற்றும் திருநற்கருணை மூலம் பிரசன்னமாயிருக்கிறார் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்று சீடர்களுக்குச் சமாதானத்தை வழங்கிய இயேசு, நமக்கும் தன் அமைதியை வழங்கி, நம் வாழ்வை மகிழ்வுக்குத் திறந்துதீமை, துன்பம், வேதனை மற்றும் அச்சத்தினால் சூழப்பட்டிருக்கும் இவ்வுலகின் இறுதி எல்லை வரைக்கும் அவரின் சாட்சிகளாக வாழ அழைப்பு விடுக்கிறார் என, உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய போது கூறினார் திருத்தந்தை.
உயிர்த்த இயேசு கடற்கரையில் கூடியிருந்த சீடர்களுக்கும், எம்மாவுஸ் வழியில் சீடர்களுக்கும் தோன்றி அவர்களோடு உரையாடிய நிகழ்வுகள் குறித்துச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசு தன் சீடர்களோடு உரையாடியதன் வழி மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களின் மனக்கண்களைத் திறந்தார் என வாசிக்கிறோம் என்றார்.
வழக்கமாக உயிர்ப்புத் திருவிழாக்காலத்தில் சிறுவர் சிறுமிகள் திருநற்கருணை அருளடையாளத்தை முதன் முறையாகப் பெறுவது இடம்பெறும் என்பதையும் சுட்டிக்காட்டியப் பாப்பிறை, நல்விசுவாசத்தின் இத்திருவிழாவுக்கு சிறார்களைத் தயாரிப்பதில் பங்கு குருக்கள், பெற்றோர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களின் கடமையையும் வலியுறுத்தினார்.

3.  நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு - அமெரிக்க ஆயர்கள்

ஏப்ரல்,23,2012. நிலக்கண்ணி வெடிகளை முற்றிலும் ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு என்று அமெரிக்க ஆயர்கள் அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவுக்கும், அமெரிக்க அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிலக்கண்ணி வெடிகளை உலகிலிருந்து முற்றிலும் அகற்ற 1977ம் ஆண்டு உருவான உலக உடன்பாட்டில் சேராத 37 நாடுகளில் அமெரிக்க அரசும் ஒன்று.
இந்த உடன்பாட்டில் இணைவதா வேண்டாமா என்ற வாதத்தை அமெரிக்க அரசு 2009ம் ஆண்டு தன் பாராளுமன்றத்தில் துவக்கியது. இந்த வாதங்களின் இறுதிக் கட்டம் தற்போது நெருங்கி வருவதால், அமெரிக்க ஆயர்கள் ஒபாமா அரசுக்கு இந்த வேண்டுகோளை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர NATO அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் உட்பட, உலகின் 161 நாடுகள் நிலக்கண்ணி வெடிகளை முற்றிலும் ஒழிக்கும் உலக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க ஆயர்கள் அனுப்பியுள்ள இந்த வேண்டுகோளில் அமெரிக்காவின் எவான்ஜெலிக்கல் லூத்தரன் சபை, மெதடிஸ்ட் சபை, பிரஸ்பிடேரியன் சபை என்ற பல்வேறு அமைப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன.

4.  பிலிப்பீன்ஸில் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்கள் குறித்து கிறிஸ்தவ சபைகள் கவலை.

ஏப்ரல் 23, 2012. பிலிப்பீன்சின் Mindanao பகுதி கிராமப்புறங்கள் இராணுவமயமாகி வருவதால், நாட்டிற்குள்ளேயே அகதிகளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் துன்புறும் சூழல்கள் உருவாகியுள்ளதாக அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
மக்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும்போது அவர்கள் தங்கள் விவசாய நிலங்களையும் பள்ளிகளையும் வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வரவேண்டியுள்ளது என தங்கள் கவலையை வெளியிடும் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள், குழந்தைகளின் பள்ளிகளும் மக்களின் வழிபாட்டுத்தலங்களும் இராணுவமுகாம்களாக மாறி வருகின்றன எனவும் குற்றஞ்சாட்டினர்.
இத்தகைய கட்டாய இடம்பெயர்வுகளால்  மின்டனாவோவின் Mamanwa  பூர்வீகக் குடிமக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவக் கூட்டமைப்புகளின் அறிக்கை தெரிவிக்கிறது. பிலிப்பீன்ஸில் உள்நாட்டுபோர் இடம்பெறும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தற்போது நாட்டுக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் நிலை உருவாகியுள்ளது குறித்து அந்நாட்டின் மதக்குழுக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து இத்திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் இரு நாள் கருத்தரங்கை நடத்தி வருகின்றனர்.

5.   வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு உதவி வேண்டி இங்கிலாந்து கத்தோலிக்க அமைப்புகள் வேண்டுகோள்

ஏப்ரல் 23, 2012.  இங்கிலாந்தில் ஏழ்மையில் வாடும் அனைத்து 22 இலட்சம் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு கத்தோலிக்க கல்வி அமைப்பும், காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து தங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.
ஏழ்மையில் வாடும் குழந்தைகளுள் பாதிபேரே இதுவரை இலவச மதிய உணவுத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருவதாகத் தெரிவித்த இக்கத்தோலிக்க அமைப்புகள், அனைத்துக் குழந்தைகளும் பலன்பெறும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுமாறு குரல் கொடுத்துள்ளன.
12 இலட்சம் குழந்தைகள் எவ்வித உணவு உதவிகளும் பெறாமல் வாழ்ந்து வருவதாகக் கூறும் இந்த கத்தோலிக்க அமைப்புகள், பள்ளி விடுமுறைக்காலத்தின்போதும் குழந்தைகளுக்கு உணவு உதவிகள் வழங்க வழிவகைச் செய்யப்பட வேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ளன.

6.  கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக AICUF மாணவர்கள் மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டம்

ஏப்ரல்,23,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஆந்திராவின் நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இஞ்ஞாயிறு வரை இடிந்தகரையில் மூன்று நாள் உண்ணாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுமின் சக்தி மிக இன்றியமையாதது என்று கூறி மக்களை தவறாக வழிநடத்தும் இந்திய அரசு, இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் ஏனைய சக்திகளைக் கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினார்.
AICUF என்று அழைக்கப்படும் அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்களான இந்தக் கல்லூரி மாணவர்கள், அணு உலைகளால் ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துரைப்பதும் தங்கள் எதிர்காலப் பணியாக இருக்கும் என்று கூறினார்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன், இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் நிறுத்திவிட்டு, மாற்று வழிகளில் சக்தி பெறும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் முன் வைக்கப்போவதாக இம்மாணவர்கள் கூறினர்.

7.    தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 17 விழுக்காடு வீழ்ச்சி

ஏப்ரல் 23, 2012. தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை,  ஏறத்தாழ 17 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாக "அபாக்ஸ்' என்ற இந்திய ஊடக விளம்பரங்களைச் சந்தைப்படுத்துவோருக்கான நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொலைக்காட்சி பார்த்தவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய மாதம் பார்த்தவர்களை விட 17 விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வீழ்ச்சிக்கு, தொடர் மின்வெட்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் முக்கிய காரணங்களாக இருப்பதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது.
ஆட்சி மாற்றம், அரசியல் திருப்பங்கள் போன்றவை, பொழுதுபோக்கு அலைவரிசைகளில் இருந்து, மக்களின் கவனத்தை, செய்தி அலைவரிசைகள் பக்கம் திருப்பியுள்ளதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...