Tuesday, 24 April 2012

Catholic news 21 April 12

1. கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

2. திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி

3. புதிய நற்செய்திப் பணிக்கு அன்னை தெரேசா மீது அன்பு தேவை பேராயர் டி சூசா

4. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து ஆயர்கள் கவலை

5. கியூபா நாட்டுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் வலியுறுத்தல்

6. Guinea-Bissau வில் அமைதி திரும்ப ஆயர்கள் செபம்

7. அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22

8. மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் : மருத்துவ நிபுணர்கள் தகவல்

-------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

ஏப்.21,2012: உலகளாவியத் திருஅவையின் தேவைகளுக்காகவும், குறிப்பாக கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து செபிக்குமாறு ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தைக்கும் அவரது பிறரன்பு பணிகளுக்குமென நிதியுதவி செய்யும், Papal Foundation என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பின் சுமார் 120 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு செபிக்கக் கேட்டுக் கொண்டார்.
இக்காலத்தில் உடனடியாகத் தேவைப்படும் அறநெறி விவகாரங்களை நற்செய்தியின் ஒளியில் அறிவிப்பதற்குக் கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்படும் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார் அவர்.
வட அமெரிக்க அருளாளர்கள் Kateri Tekakwitha, அன்னை Marianne Cope ஆகிய இருவரையும் வரும் மாதங்களில் புனிதர்களாகத் தான் அறிவிக்கவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அமெரிக்கத் திருஅவையைக் கட்டி எழுப்புவதில் பெண்கள் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க பங்கை இப்புனிதர்கள் நினைவுபடுத்துகின்றார்கள் என்றும் கூறினார்.
1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Papal Foundation என்ற அமைப்பு, 1990 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏழு கோடிக்கு மேற்பட்ட டாலரை உலகின் சில ஏழை நாடுகளில் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கியுள்ளது.
வளரும் நாடுகளிலிருந்து குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் உரோமையில் இறையியல் படிப்பதற்கும், www.news.va என்ற வத்திக்கான் செய்தி இணையதளம் உட்பட திருஅவையின் ஊடகத்துறை மற்றும் நற்செய்தி அறிவிப்புக்கும் இவ்வமைப்பு நிதி உதவி செய்துள்ளது.

2. திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி

ஏப்.21,2012: அழகின் உன்னதமான இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சியாக கலை அமைந்துள்ளது என்று கூறினார் திருத்தந்தை.
ஏப்ரல் 16, இத்திங்களன்று 85வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் கவுரவிக்கும் விதத்தில் இவ்வெள்ளி மாலை வத்திக்கான் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் இவ்வாறு அவர் கூறினார்
உலகின் மிகப் பழமையான மற்றும் உலகப் புகழ் பெற்ற ஜெர்மனியின் Leipzig, Gewandhaus இசைக்குழு நடத்திய இசை மழையின் இறுதியில் சிறிய உரையாற்றிய திருத்தந்தை இக்குழுவினருக்கு, சிறப்பாக இதனை வழிநடத்திய இத்தாலியரான Riccardo Chaillyக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த இசைக் கச்சேரியை நடத்துமாறு 2010ம் ஆண்டில் அழைப்பு பெற்ற போது, இதனை நம்பமுடியாத ஓர் அழைப்பாகவும், இதன் மூலம் தான் மிகவும் கவுரவிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் வத்திக்கான் வானொலியில் கூறினார் இந்தக் கச்சேரியின் நிர்வாக இயக்குனர் Andreas Schulz. இசை பற்றிய ஆழமான அறிவும் பற்றும் கொண்ட திருத்தந்தைக்கு இக்கச்சேரி மிகவும் தனித்துவம் மிக்கது என்றும் Schulz கூறினார்.

3. புதிய நற்செய்திப் பணிக்கு அன்னை தெரேசா மீது அன்பு தேவை பேராயர் டி சூசா

ஏப்.21,2012: இந்தியாவில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் தங்களது பிறரன்புப் பணிகள், மிகவும் வசதி குறைந்த பகுதிகளிலுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர் குடியிருப்புகள் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பலவகையான அடக்குமுறைகளால் துன்புறுகின்றனர் என்று பேராயர் Henry D'Souza கூறினார்.
இந்தியாவில் மறைப்பணி மற்றும் அது எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட கல்கத்தாவின் முன்னாள் பேராயராகிய டி சூசா, அருளாளர் அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டான வாழ்வு பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
மதமாற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் மறைப்பணியைத் திறம்பட எடுத்துச் செய்வதற்கு இறையன்பும் பிறரன்பும் மிகவும் உதவுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
அன்னை தெரேசாவுடன் சுமார் 35 ஆண்டுகள் பணி செய்துள்ள பேராயர் டி சூசா, அன்னை தெரேசா கொண்டிருந்த இறையன்பே அவரது மறைப்பணிக்கு உதவியாக இருந்தது என்று தெரிவித்தார்.    
4. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து ஆயர்கள் கவலை

ஏப்.21,2012: அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறைப்பதற்குப் பரிந்துரை செய்துள்ள விவகாரங்கள் சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.   
பசி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணைக்குழுத் தலைவர் Stockton ஆயர் Stephen E. Blaire கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு வேளாண்துறைத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ள ஆயர், பொருளாதார நெருக்கடியும் வறுமையும் அதிகரித்து வரும் இக்காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஏழைகளை அதிகம் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

5. கியூபா நாட்டுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் வலியுறுத்தல்

ஏப்.21,2012: கடந்த ஆண்டில் தளர்த்தப்பட்ட கியூபா நாட்டுக்கெதிரான சில பயணக் கட்டுப்பாடுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்வேளை, அந்நாட்டுக்கெதிரானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கியூபா நாடு பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கிடையே ஆழமான உரையாடலும் தொடர்புகளும் இருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று ஆயர் Richard E. Pates கூறினார்.
அமெரிக்க அரசு செயலர் ஹில்லரி கிளின்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஆயர் Pates, இவ்விரு நாடுகளுக்கிடையே இடம் பெறும் உறவுகள், கியூபாவில் மனித உரிமைகளும் மற்றும்பிற நல்ல மாற்றங்களும் ஏற்பட உதவும் என்றும் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளாக அமலில் இருக்கும் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், அரசியல் யுக்தியாகவும் அறநெறிக்குப் புறம்பானதாகவும் இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அருட்சகோதரி Ondina Cortes கூறியுள்ளார்.

6. Guinea-Bissau வில் அமைதி திரும்ப ஆயர்கள் செபம்

ஏப்.21,2012: மேற்கு ஆப்ரிக்க நாடான Guinea-Bissau வில் இடம் பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைப் புறக்கணித்துள்ள அதேவேளை, மக்களாட்சியை மதித்து அமைதியான முறையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Guinea-Bissau வின் இடைக்கால அரசுத்தலைவர் Raimundo Pereira மற்றும் முன்னாள் பிரதமர் Carlos Gomes Jr.டமிருந்து இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றிய 5 நாள்களுக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், நாடு மிகவும் கடுமையான பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது என்று கூறியுள்ளனர்.
தேர்தல் இடம் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ள இந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நாட்டின் சுமார் 16 இலட்சம் மக்களுக்குப் பிரச்சனைகளையும் துன்பங்களையும் கொண்டு வரும் என்று கூறியுள்ளனர் ஆயர்கள். 
1974ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிலிருந்து சுதந்திரம் அடைந்த Guinea-Bissau என்ற சிறிய நாட்டுக்கு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் பழக்கப்பட்ட நடவடிக்கை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

7. அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22

ஏப்.21,2012: இயற்கையின் வாழ்வாதார வளங்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாப்பதற்கு பூமித்தாய் நாள் அழைப்பு விடுக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஏப்ரல்22, இஞ்ஞாயிறன்று அனைத்துலக பூமித்தாய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், இப்பூமியைப் பாதிக்கும் உலகளாவிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளில் இவ்வுலகுக்கு குறைந்தது 50 விழுக்காடு அதிக உணவும், 45 விழுக்காடு அதிக மின்சக்தியும், 30 விழுக்காடு அதிகத் தண்ணீரும், இலட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்களும் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே உலகின் சவால்கள் அதிகம் எனவும், ஒரு பிரச்சனைக்கான தீர்வு எல்லாவற்றிலும் முன்னேற்றத்தைக் கொணரும் எனவும் பான் கி மூன் கூறியுள்ளார்.
அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று 2009ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் தீர்மானிக்கப்பட்டது.

8. மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் : மருத்துவ நிபுணர்கள் தகவல்

ஏப்.21,2012: மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது என்றும், சென்னையில் 30 விழுக்காட்டினருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடங்கியுள்ள, குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
பிரிட்டனைச் சேர்ந்த 10 நிபுணர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதிகமாக மது அருந்துதல், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, ஈரலில் கொழுப்பு அதிகரித்தல் ஆகிய காரணங்களால் ஈரல் நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் ஈரல் நோயால் இறக்கின்றனர். நான்கு விழுக்காட்டு இந்தியர்கள் ஹெபடைடிஸ் பி நோய்க் கிருமிகளாலும், ஒரு விழுக்காட்டினர் ஹெபடைடிஸ் சி நோய்க் கிருமிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறினர்.
அண்மைக் கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 200 கோடிப் பேர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் என்றும், இதில், 76 இலட்சம் பேருக்கு ஈரல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 30 விழுக்காட்டு இந்தியர்கள் மதுப்பழக்கம் கொண்டுள்ளனர். இதில், 13 விழுக்காட்டினர் தினமும் மது அருந்துகின்றனர். சிரோசிஸ் நிலைக்கு வந்த நோயாளிகளில் 50 விழுக்காட்டினர் மதுப்பழக்கம் கொண்டவர்கள்.
ஈரல் நோய் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஈரலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நிபுணர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...