Thursday, 5 April 2012

கத்தோலிக்க செய்திகள்: 04 ஏப்ரல் 2012

1. உயிர்ப்புத் திருநாளையொட்டி, சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களைக் களைய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் வேண்டுகோள்

2. 'கருவில் வளரும் குழந்தைக்கு ஆசீர் வழங்கும் வழிமுறை'

3. மும்பை மைதானத்தில் புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது

4. வடகிழக்கு இந்தியாவில் புனித வார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள்

5. நேபாளத்தில் உயிர்ப்பு விழா கொண்டாட்டம் முதல்முறையாக எவ்வித பயமும் இன்றி நடைபெறும்

6. பாகிஸ்தானில் புனித வார நிகழ்வுகளைத் தடுக்கும் முயற்சிகள்

7. மனித வியாபாரத்தைத் தடை செய்வதற்கான கூட்டு முயற்சிகள் அதிகரிக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்

8. உலகில் சிறார் படைவீரரை முற்றிலுமாக ஒழிக்க முடியும் - ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி

------------------------------------------------------------------------------------------------------

1. உயிர்ப்புத் திருநாளையொட்டி, சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களைக் களைய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் வேண்டுகோள்

ஏப்ரல்,04,2012. புனித வாரம் மற்றும் உயிர்ப்புத் திருநாளையொட்டி, சிரியாவில் அனைத்து தரப்பினரும் ஆயுதங்களைக் களைந்து, மக்கள் இந்த புனித நாட்களைக் கொண்டாட வழி செய்யவேண்டும் என்று Aleppoவில் பணிபுரியும் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaro வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுதங்களாலும், போர்களாலும் இழப்புக்கள் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றன என்று கூறிய ஆயர் Nazzaro, சமாதானம் மட்டுமே ஆக்கப்பூர்வமான நம்பிக்கை தரும் என்பதால், உயிர்ப்பு நாளையொட்டி ஆயுதங்களையும், போரையும் கைவிடுமாறு அழைப்பு விடுத்தார்.
இவ்வாண்டு சிரியாவில் கொண்டாடப்படும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்தும் வெளி ஆடம்பரங்கள் ஏதும் இன்றி கொண்டாடப்படும் என்று எடுத்துரைத்த ஆயர் Nazzaro, துன்பத்தில் சிக்கியிருக்கும் சிரியாவின் மக்களுடன் நெருங்கியிருப்பதே இவ்வார நிகழ்வுகளின் மையக்  கருத்தாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
Cor Unum அமைப்பின் வழியாகவும், சிரியாவின் காரித்தாஸ் அமைப்பின் வழியாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அளித்துள்ள நிதி உதவிகள் பற்றி கூறிய ஆயர் Nazzaro, முன்னாள் ஐ.நா.பொதுச் செயலர் Kofi Annan அவர்களின் பரிந்துரைகளை அனைத்துத் தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என்ற சிறப்பு வேண்டுகோளை விடுத்தார்.


2. 'கருவில் வளரும் குழந்தைக்கு ஆசீர் வழங்கும் வழிமுறை'

ஏப்ரல்,04,2012. அமெரிக்க கத்தோலிக்கத் திருஅவை உருவாக்கியுள்ள 'கருவில் வளரும் குழந்தைக்கு ஆசீர் வழங்கும் வழிமுறை' (Rite for the Blessing of a Child in the Womb) என்ற செபங்களுக்குத் திருப்பீடத்தின் திருவழிபாட்டுத் திருப்பேராயம் ஒப்புதல் அளித்துள்ளது.
கருவில் வளரும் குழந்தையை எதிர்பார்த்திருக்கும் பெற்றோருடன் அவர்களைச் சுற்றியுள்ள பங்குச் சமுதாயமும் அக்குழந்தையை எதிர்பார்க்கிறது என்பதை இச்செபங்கள் வெளிப்படுத்துகின்றன என்று அமெரிக்க ஆயர்கள் பேரவையின் ஓர் அங்கமான உயிர்களைப் பேணும் நடவடிக்கைகள் என்ற குழுவின் தலைவர் கர்தினால் Daniel DiNardo கூறினார்.
உலகின் பல இடங்களில் மேமாதம் அன்னையர் தினம் கொண்டாடப்படும். இவ்வாண்டு மேமாதம் 13ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ள அன்னையர் தினத்தன்று ஆங்கிலத்திலும் இஸ்பானிய மொழியிலும் வெளியிடப்படும் இந்தச் செபங்கள் அடங்கிய ஏடு அமெரிக்காவில் உள்ள அனைத்து பங்குக் கோவில்களிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. மும்பை மைதானத்தில் புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல்,02,2012. மும்பையின் புரட்சி அரங்கமான August Kranti திறந்தவெளி அரங்கில் புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடத்த அனுமதியளித்துள்ளார் மகராஷ்டிர முதலமைச்சர் Prithviraj Chavan.
கடந்த 55 ஆண்டுகளாகப் புனித வெள்ளித் திருவழிபாடுகளுக்கெனப் பயன்படுத்தப்பட்டு வந்த மும்பையின் இந்த அரங்கு, இவ்வாரப் புனித வெள்ளித் திருவழிபாடுகள்  நடைபெற அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, புனித ஸ்டீபன் ஆலயப் பங்குத்தந்தை Ernest Fernandes தலைமையிலான குழு மாநில முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியது.
இச்சந்திப்புக்குப் பின்னர் பேசிய முதலமைச்சர் சவான், 55 ஆண்டுகளாக சமய வழிபாட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இவ்வாண்டு மறுப்பது அர்த்தமற்றது என்று தெரிவித்தார்.
ம‌த‌க்கொண்டாட்ட‌ங்க‌ளுக்கென‌ அர‌சு வளாகங்களை  ஒதுக்க‌க்கூடாது என்ற‌ மும்பை நீதிம‌ன்ற‌த்தின் 2006ம் ஆண்டு ஆணையை மேற்கோள்காட்டி, மும்பை August Kranti அரங்கத்தை இவ்வாண்டு புனித வெள்ளித் திருவழிபாடுகள் நடைபெற அனுமதி ம‌றுத்திருந்தார் ம‌க‌ராஷ்டிரா மாநில‌ சுற்றுலா ம‌ற்றும் க‌ல‌ச்சார‌த்துறை செய‌ல‌ர் ஆனந்த் குல்க‌ர்னி.


4. வடகிழக்கு இந்தியாவில் புனித வார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள்

ஏப்ரல்,04,2012. பழங்குடி மக்கள் மத்தியில் நடைபெறும் மோதல்களால் தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்தித்து வரும் வடகிழக்கு இந்தியாவில் புனித வார நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக குவஹாத்தி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் அதிகமான துறவியர் வடகிழக்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் உள்ள 14 கிராமங்களில் இப்புனித வார நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
புனித வார முயற்சிகளை இப்பகுதிகளில் ஏற்பாடு செய்துள்ள அருள்தந்தை சாலமோன், பழங்குடி மக்கள் அடிப்படைத் தேவைகள் பலவும் இல்லாமல் துன்புறுவதைக் காணும்போது, இவர்களது தினசரி வாழ்வே சிலுவைப்பாதையாக மாறியுள்ளது என்பதை உணரலாம் என்று எடுத்துரைத்தார்.
பொதுவாக மக்கள் எளிதில் அணுகமுடியாதப் பகுதிகளில் துறவியர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகளால் அப்பகுதி மக்களின் விசுவாச வாழ்வு தூண்டப்பட்டுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. நேபாளத்தில் உயிர்ப்பு விழா கொண்டாட்டம் முதல்முறையாக எவ்வித பயமும் இன்றி நடைபெறும்

ஏப்ரல்,04,2012. நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் புனித வாரச் சடங்குகளும், உயிர்ப்பு விழா கொண்டாட்டமும் முதல்முறையாக எவ்வித பயமும் இன்றி நடைபெற உள்ளதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
2006ம் ஆண்டு மத சார்பற்ற நாடாக நேபாளம் தன்னையே அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு மத வழிபாடுகளுக்கு உள்ள சுதந்திரம் வலுப்பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அங்கு கொண்டாடப்பட்ட கிறிஸ்மஸ் விழாவில் இந்து அடிப்படைவாதக் குழுக்களின் பிரச்சனைகள் ஏதும் நிகழாத வண்ணம் பலத்தப் பாதுக்காப்பு கொடுக்கப்பட்டது. அதேபோல், உயிர்ப்புத் திருவிழாவையும் கொண்டாட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
புனித வார நிகழ்ச்சிகளில் ஒன்றாக, காத்மண்டு நகரில் உள்ள விண்ணேற்பு பேராலயத்தில் புனிதப் பொருட்கள், மற்றும் ஓவியங்கள் அடங்கியக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேமாதம் 25ம் தேதி அந்நாட்டின் சட்டச் சீர்த்திருந்தங்கள் அமலுக்கு வரவிருக்கும் சூழலில், 20 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களைக் கொண்ட நேபாளத்தில், மத உரிமைகளை வலியுறுத்தி ஊர்வலங்கள் நடைபெற உள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. பாகிஸ்தானில் புனித வார நிகழ்வுகளைத் தடுக்கும் முயற்சிகள்

ஏப்ரல்,04,2012. இதற்கிடையே, பாகிஸ்தானில் புனித வார நிகழ்வுகளையும், உயிர்ப்புத் திருநாள் கொண்டாட்டங்களையும் தடுக்கும் விதமாக அடிப்படைவாத இஸ்லாமியக் குழுக்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் Sarghoda பகுதியில் உள்ள Eidgah கிறிஸ்தவ சமுதாயம் வெளியிட்டிருந்த புனித வார அறிவிப்புகள் மீதும், அப்பகுதியில் இருந்த திரு உருவங்கள் மீதும் கருப்பு வண்ணத்தை ஊற்றி, புனித வாரச் சடங்குகள் நடத்தப்படக் கூடாதென்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த வன்முறைச் செயலுக்கு எதிராக புகார் அளிக்கச் சென்ற கிறிஸ்தவ குழுக்களின் விண்ணப்பங்களை காவல் துறையினர் ஏற்க மறுத்தனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
புனித வாரத்தின்போது கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழவேண்டியுள்ளது என்றும், அரசு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தர தவறிவிட்டது என்றும் Sargodha பகுதியில் பணிபுரியும் அருள்தந்தை John Gill கூறினார்.


7. மனித வியாபாரத்தைத் தடை செய்வதற்கான கூட்டு முயற்சிகள் அதிகரிக்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்

ஏப்.04,2012. உலகில் இடம் பெறும் மனித வியாபாரத்தைத் தடை செய்து அதற்குப் பலியாகுவோருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு நாடுகள் எடுத்து வரும் கூட்டு முயற்சிகளை அதிகரிக்குமாறு ஐ.நா. உயர் அதிகாரிகள், ஐ.நா.உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளனர்.
மனித வியாபாரத்திற்கு எதிராய்ப் போராடுதல்:பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துவதற்கு கூட்டு முயற்சிஎன்ற தலைப்பில் இச்செவ்வாயன்று நியுயார்க்கில் ஐ.நா.பொது அவையில் நடந்த கலந்துரையாடலில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மனித வியாபாரத்தை நடத்துவோர் ஆயுதங்களையும் அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தும் போது நாம் சட்டங்கள் மற்றும் புலன்விசாரணைகள் மூலம் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகத்தின் (UNODC) கணிப்புப்படி, உலகில் சுமார் 24 இலட்சம் பேர் மனித வியாபாரத்திற்குப் பலியாகியுள்ளனர், இவர்களில் 80 விழுக்காட்டினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர், இவ்வியாபாரத்தால் ஆண்டுக்கு 3,200 கோடி டாலர் வருவாய் கிடைக்கிறது என்று தெரிய வருகிறது.
மனித வியாபாரத்திற்குப் பலியாகுவதற்குக் காரணமாகும் கடும் வறுமையை ஒழிப்பதற்கு நாடுகள் நடவடிக்கை  எடுக்குமாறும் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.


8. உலகில் சிறார் படைவீரரை முற்றிலுமாக ஒழிக்க முடியும் - ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி

ஏப்.04,2012. உலகில் எடுக்கப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் சிறார் படைவீரரை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று ஆயுதத்தாக்குதல் பகுதிக்கான ஐ.நா.சிறப்புப் பிரதிநிதி Radhika Coomaraswamy கூறினார்.
தென் சூடானை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் ஐ.நா.செய்தி மையத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் Coomaraswamy.
கடந்த ஆண்டில் ஆயுதக் குழுக்களிடமிருந்து 11 ஆயிரம் சிறார் மீட்கப்பட்டனர் என்றுரைத்த அவர், அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த திட்டங்களின்படி, உலகில் எஞ்சியுள்ள சிறார் படைவீரர்கள் பொது வாழ்வுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு ஏப்ரலில் Radhika Coomaraswamy பொறுப்பேற்ற பின்னர், 17 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...