An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Tuesday, 26 June 2012
robert john kennedy: Catholic News in Tamil - 26/06/12
robert john kennedy: Catholic News in Tamil - 26/06/12: 1. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை 2. பேராயர் Augustine Di Noia " கடவுளின் திருஅ...
Catholic News in Tamil - 26/06/12
1. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை
2. பேராயர் Augustine Di Noia "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக நியமனம்
3. ஜூன் 25ம் தேதி ஒப்புரவின் செப நாளையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள செய்தி
4. குழந்தைகள்
அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு
செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது - கத்தோலிக்கத் திருஅவை
5. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது - காப்டிக் கத்தோலிக்க ஆயர்
6. உலகின் அதிகமான இடங்களில் அப்பாவி மக்கள் ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வருகின்றனர் - ஐ.நா. பொதுச்செயலர் கவலை
7. ஜூன் 26 - போதைப்பொருள் ஒழிப்பு தினம்
8. ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் தாய்மைப்பேறு கொண்ட ஒரு பெண் இறக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை
ஜூன்,26,2012. போர்களால் சிதைக்கப்பட்ட இத்தாலி, மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாலும், மற்றவரது உதவிகளாலும் தன்னையே மீண்டும் கட்டியெழுப்பியதுபோல், இந்த நில நடுக்கத்தின் விளைவுகளில் இருந்தும் தன்னை மீண்டும் கட்டியெழுப்பும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மே மாதம் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்ட திருத்தந்தை, நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களையும், திருஅவைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு நாளும் அருள்பணியாளர்கள் சொல்லும் செபங்களைப்பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, கடந்த சில நாட்களாக, திருப்பாடல் 46ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை அருள்பணியாளர்களுடன் இணைந்து தானும் செபித்ததாகக் கூறினார்.
இத்திருப்பாடலில் "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின்
பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே
இல்லை." என்று கூறப்பட்டுள்ள வரிகளை மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை, இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் தங்களைக் காப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கத்தின்போது, கோவில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அருள்பணியாளர் Ivan Martini அவர்களைப்பற்றி குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, மக்களின் துன்ப துயரங்களில் பங்கேற்று சிறப்புப் பணியாற்றும் குருக்களைப் பாராட்டினார்.
இச்செவ்வாய் காலை 9 மணியளவில் Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணித்தத் திருத்தந்தை, மீண்டும் 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 1.15 மணியளவில் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்.
2. பேராயர் Augustine Di Noia "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக நியமனம்
"கடவுளின் திருஅவை" (“Ecclesia Dei”) என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக பேராயர் Augustine Di Noia அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்துள்ளார்.
பழமைப் பாரம்பரிய எண்ணங்களில் உறுதிகொண்டு, கத்தோலிக்கத் திருஅவையுடன் உறவுகளைத் துண்டித்துள்ள பல சபைகளை மீண்டும் திருஅவையுடன் இணைக்கும் ஒரு முயற்சியாக, 1988ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவை உருவாக்கப்பட்டது.
இந்த அவை 2009ம் ஆண்டு விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஓர் அங்கமாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் இணைக்கப்பட்டது.
விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவரான கர்தினால் William Levada, இத்திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இத்திருப்பீட அவையின் உபத் தலைவராக தொமினிக்கன் துறவுச் சபையைச் சேர்ந்த பேராயர் Di Noia அவர்களைத் திருத்தந்தை நியமித்துள்ளதாக விசுவாசக் கோட்பாட்டு பேராயம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னதாக, பேராயர் Di Noia திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஜூன் 25ம் தேதி ஒப்புரவின் செப நாளையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள செய்தி
ஜூன்,26,2012. "வட கொரியாவில் வாழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அமைதி உண்டாகுக" என்று தென் கொரிய ஆயர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போர் மூன்றாண்டுகள் நீடித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புரவு உருவாக வேண்டுமென்றும்,
இரு நாடுகளும் ஒரே நாடாக இணையவேண்டுமென்றும் தென்கொரிய ஆயர்கள் 1965ம்
ஆண்டு முதல் ஒரு செப நாளை உருவாக்கினர். ஜூன் 25ம் தேதியை ஓட்டிவரும்
ஞாயிறன்று இந்த செப நாள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் 25ம் தேதியை நெருங்கிவந்த இஞ்ஞாயிறன்று ஒப்புரவின் செப நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள ஒரு செய்தியில் வடகொரிய மக்களுக்கு நிறைவான அமைதி கிடைக்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய ஆயர் பேரவையில் கொரிய மக்கள் ஒப்புரவுப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Peter Lee Ki-Heon கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த செய்தியில், அரசியல்
காரணங்களுக்காக இரு நாடுகளாய் பிரிந்து கிடக்கும் கொரிய மக்களின்
குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய இறைவனிடம் வேண்டுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
ஒப்புரவு செபநாளையோட்டி சிறப்புத் திருப்பலிகளும், செப வழிபாடுகளும், ஊர்வலங்களும் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்டன என்று கொரியாவின் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகங்களின் தலைவர் அருள்தந்தை John Bosco Byeon கூறினார்.
4.
குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய
அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது - கத்தோலிக்கத் திருஅவை
ஜூன்,26,2012. இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் காக்கும் வழிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகள்
அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு
செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று கத்தோலிக்கத் திருஅவை
கூறியுள்ளது.
இலவசமாகக் கிடைத்துவரும் நலவாழ்வுச் சலுகைகளைக் குறைக்கப்போவதாக, இத்திங்களன்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் பிரதமர் David Cameron கூறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள காரித்தாஸ் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் நாடு பொருளாதாரச் சரிவினால் இன்னல்களைச் சந்தித்துவரும் வேளையில், பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் பெரும் குடும்பங்களை இன்னும் அதிகம் பாதிக்கும் என்று காரித்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 80,000க்கும் அதிகமான இளையோர் வீடின்றி தெருக்களிலும், சாலைகளிலும் தங்க வேண்டியுள்ளது என்று கூறும் Depaul UK என்ற ஒரு பிறரன்பு நிறுவனம், பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் வீடின்றி தவிக்கும் இளையோரை அதிக அளவில் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.
5. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது - காப்டிக் கத்தோலிக்க ஆயர்
ஜூன்,26,2012. எகிப்து நாட்டில் Muslim Brotherhood என்ற இஸ்லாமியக் கட்சியிலிருந்து Mohammed Mursi அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஏற்பதற்கு கிறிஸ்தவர்கள் தயக்கம் கொண்டிருந்தாலும், புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று Luxorல் உள்ள காப்டிக் கத்தோலிக்க ஆயர் Joannes Zakaria கூறினார்.
இஞ்ஞாயிறன்று, எகிப்தின் புதிய அரசுத் தலைவராக Mursi அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் Zakaria, புதிய அரசுத் தலைவர் இஞ்ஞாயிறன்று தொலைக்காட்சியில் பேசியபோது கூறிய வார்த்தைகள் நம்பிக்கை தருவதாய் அமைந்தன என்று கூறினார்.
புதிய அரசுத் தலைவர் அமைக்கவிருக்கும் அமைச்சர்கள் அவையில் அனைத்து மதத்தினருக்கும் இடம் அளிப்பார் என்று நம்புவதாகவும் ஆயர் Zakaria தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
Muslim Brotherhood என்ற கட்சி இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் பல்வேறு வகையில் பேசியிருந்தாலும், தற்போது பொறுப்பில் இருப்பதால், தங்கள் கட்சியின் கொள்கைகளை நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்வர் என்று எதிர்பாப்பதாகவும் காப்டிக் கத்தோலிக்க ஆயர் Zakaria கூறினார்.
6. உலகின் அதிகமான இடங்களில் அப்பாவி மக்கள் ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வருகின்றனர் - ஐ.நா. பொதுச்செயலர் கவலை
ஜூன்,26,2012. இன்று உலகின் அதிகமான இடங்களில், ஆயுதத்
தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வரும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை
கூடிவருகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தன் கவலையை
வெளியிட்டார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பான் கி மூன், போரிடும் குழுக்களுக்கு இடையே நிகழும் ஆயுதத் தாக்குதல்களில் மக்கள் இறக்க வேண்டியுள்ளது என்றும், பல இடங்களில் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகவும் மாறி வருகின்றனர் என்றும் பான் கி மூன் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்படுவது மட்டுமல்லாமல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாதல், எவ்விதத் தடயமும் இன்றி காணாமற் போதல், சித்திரவதைகளுக்கு உள்ளாதல் போன்ற ஏனைய கொடுமைகளுக்கும் அப்பாவி பொதுமக்கள் ஆளாகிறார்கள் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
மக்களைக்
காக்கச் செல்லும் ஐ.நா.பாதுகாப்புப் படைவீரர்களும் அண்மையக் காலங்களில்
வன்முறைகளுக்கு உள்ளாகி இறக்கவேண்டியுள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்
ஐ.நா.பொதுச் செயலர்.
உலகில்
பாதுகாப்பானச் சூழலை உருவாக்க விழையும் ஐ.நா.வின் முயற்சிகளுக்கு
பன்னாட்டு அரசுகளும் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று பான் கி மூன்
அழைப்பு விடுத்தார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உயர் அதிகாரிகளும், ஐ.நா. பொதுச் செயலரின் எண்ணங்களை ஆமோதித்து பேசினர்.
7. ஜூன் 26 - போதைப்பொருள் ஒழிப்பு தினம்
ஜூன்,26,2012.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்தும் விதமாக ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக்
கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும்
பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது
போதைப்பொருள் தான். உலகில் இலட்சக்கணக்கானோர் இதற்கு அடிமையாக
மாறியிருப்பது கவலைக்குரியது.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது
இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 500 பில்லியன்
அமெரிக்க டாலர் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.
போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள்
மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு
அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி
போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் போதைபொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இறப்போரின் எண்ணிக்கை 2,50,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளையோர் என்பது வேதைனையான ஓர் உண்மை.
8. ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் தாய்மைப்பேறு கொண்ட ஒரு பெண் இறக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர்
ஜூன்,26,2012. தாய்மைப்பேறு கொண்ட பெண்களில், ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒருவர், கருவுற்ற காலத்தில் அல்லது குழந்தை பிறப்பின்போது இறக்கிறார், இவர்களில் பெரும்பாலானோர் வளர்இளம் சிறுமிகள் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இப்பிரச்சனையைத் தீர்க்க, 2010ம் ஆண்டில் பெண்கள் மற்றும் சிறாரின் நலவாழ்வு குறித்த வழிமுறைகள் உலக அளவில் எடுக்கப்பட்டன என்றுரைத்த பான் கி மூன், நலவாழ்வு தொடர்புடைய மில்லென்ய இலக்குகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சரியான தகவல், சரியான தலையீடு போன்றவை மூலம் இப்பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று, ஜெனீவாவில்
கடந்த வாரத்தில் மனிதப் பிறப்பு கொள்கை குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு
அனுப்பிய செய்தியில் ஐ.நா. பொதுச்செயலர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டுக்குள் 1 கோடியே 60 இலட்சம் பெண்கள் மற்றும் சிறாரின் வாழ்வைப் பாதுகாப்பதும், இன்னும் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மேம்படுத்துவதும் தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
robert john kennedy: Catholic News in Tamil - 25/06/12
robert john kennedy: Catholic News in Tamil - 25/06/12: 1. திருத்தந்தை : கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை 2. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழ...
Catholic News in Tamil - 25/06/12
1. திருத்தந்தை : கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை
2. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு
3. கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் வழங்கிய உரை
4. இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது – திருப்பீட ஏடு
5. செல்வமும், கடனும் எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன - பேராயர் சில்வானோ தொமாசி
6. "நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" - Boko Haram
7. எகிப்து நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் அனுப்பிய செய்தி
8. இலண்டன் ஒலிம்பிக் விழாவில் சென்னை இசைக்குழு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை
ஜூன்,25,2012. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை, கடவுளுக்கு
எல்லாம் இயலக்கூடியதே என்பதை இஞ்ஞாயிறன்று திருஅவை சிறப்பித்த
திருமுழுக்கு யோவானின் பிறப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான
விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, யோவான், உண்மையிலேயே, அவரது தாயின் வயிற்றிலிருந்தே இயேசுவுக்கு முன்னோடியாக இருக்கிறார் என்று உரைத்தார்.
யோவான் தாயின் வயிற்றில் அற்புதமாக உருவானதே, கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, நமது அன்னைமரியாவுக்குப் பிறகு புனித யோவானின் பிறப்பே திருவழிபாட்டில் திருவிழாவாகச் சிறப்பிக்கப்படுகின்றது, ஏனெனில் இப்பிறப்பு இறைமகன் மனிதஉரு எடுத்தப் பேருண்மையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறினார்.
கிறிஸ்துவுக்கானப்
பாதையையும் புதிய உடன்படிக்கையையும் தயாரித்ததன் மூலம் பழைய உடன்படிக்கையை
நிறைவு செய்த இறைவாக்கினர் என்று புனித யோவானை நான்கு நற்செய்தியாளர்களும்
அழுத்தம்கொடுத்து கூறியுள்ளனர் என்ற திருத்தந்தை, பெண்களில் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிட பெரியவர் இல்லை என்ற இயேசுவின் வார்த்தைகளையும் குறிப்பிட்டார்.
புனித யோவான், யோர்தான் ஆற்றில் மெசியாவுக்குத் திருமுழுக்கு அளித்து, வன்முறை இறப்பிலும் இயேசுவுக்கு முன்னோடியாய் இருந்து தனது மறைப்பணியை நிறைவு செய்தார் என்ற திருத்தந்தை, வயதான
தனது உறவினர் எலிசபெத் யோவானைக் கருத்தாங்கியிருந்த காலத்தில் கன்னிமரியா
அவருக்கு உதவினார் என்று சொல்லி இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
2. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு
ஜூன்,25,2012. வட இத்தாலியில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதி மக்களை இச்செவ்வாயன்று தான் சந்திக்கவிருப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை உரைக்குப் பின் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகளாவியத் திருஅவை இம்மக்களுக்குத் தெரிவிக்கும் ஒருமைப்பாட்டுச் செயலாக இந்தச் சந்திப்பை தான் நோக்குவதாகவும், செபத்தால் தன்னோடு ஒன்றித்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இம்மக்களுக்கு Cor Unum பிறரன்பு அவை வழியாக, ஒரு இலட்சம் யூரோக்களை திருத்தந்தை ஏற்கனவே வழங்கியுள்ளார். இத்தாலிய ஆயர் பேரவையும் 2 இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளது.
இச்செவ்வாய் காலை 9 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, San Marino di Carpi யின் விளையாட்டுத் திடலுக்கு முதலில் செல்வார். பின்னர், ஆபத்தான நிலநடுக்கப்பகுதி எனக் குறிக்கப்பட்டுள்ள பகுதி வழியாகப் பேருந்தில் Rovereto di Novi செல்வார். அந்நிலநடுக்கத்தில் அங்குள்ள புனித Caterina di Alessandria ஆலயம் இடிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுக்கச்சென்ற பங்குத்தந்தை Ivan Martini இறந்த இடத்தைப் பார்வையிடுவார். அதன்பின்னர் நகர அதிகாரிகள், ஆயர்கள், பங்குக் குருக்கள், பொதுமக்கள் என அனைவரையும் திருத்தந்தை சந்திப்பார்.
இஞ்ஞாயிறன்று உலகெங்கும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக உண்டியல் எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தனது பணிக்குத் தாராளமாக உதவும் அனைவருக்கும் நன்றியும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
3. கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் வழங்கிய உரை
ஜூன்,25,2012. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வேளாண்மையைப் பற்றியும், நிலஉடமைப் பற்றியும் திருஅவை சிந்தித்துள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கிராமப்புற
வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாடு உரோம் நகரில்
இஞ்ஞாயிறன்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் இத்திங்களன்று உரையாற்றிய
திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் எழுதிய Mater et Magistra சுற்றுமடலில் காணப்படும் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
இரண்டாம் உலகப் போரிலிருந்து நாடுகள் மீண்டதையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலைப் பெற்றதையும் 1960களில் நாம் கண்டோம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், அக்காலக்கட்டத்தில் திருத்தந்தையாக இருந்த 23ம் ஜான் வெளியிட்ட Mater et Magistra சுற்றுமடல் வேளாண்மையைக் குறித்தும், நில உடமையைக் குறித்தும் பேசியது காலத்திற்கு ஏற்றதாக அமைந்தது என்றும் எடுத்துரைத்தார்.
"மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்" என்ற திருப்பாடல் 24ன் ஆரம்ப வார்த்தைகளை மேற்கோளாகக் கூறிய கர்தினால் டர்க்சன், இன்றைய உலகில் இந்த வார்த்தைகளுக்கு எதிரானச் சூழல் உருவாகியுள்ளது என்பதைக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட அண்மையத் திருத்தந்தையர்கள் அனைவரும், தற்போது உலகில் நிலவிவரும் ஏழ்மையும், பட்டினியும்
ஏற்றுக் கொள்ள முடியாத அவலநிலை என்று கூறி வந்துள்ளனர் என்பதை தன் உரையில்
சுட்டிக்காட்டிய திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், அடிப்படைத்
தேவைகள் இன்றி தவிக்கும் 200 கோடி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உலக
அரசுகள் நிரந்தர முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருப்பீட நீதி, அமைதி அவையும், ICRA எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்கக் கிராமிய அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஜூன் 27, வருகிற புதனன்று நிறைவடையும்.
4. இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது – திருப்பீட ஏடு
ஜூன்,25,2012. குருத்துவத்துக்கான எந்த ஓர் அழைப்பும் இறைவனின் கொடையாக இருந்தாலும், குடும்பங்கள், பங்குத்தளங்கள், கிறிஸ்தவ சமூகங்கள், குருக்கள்
ஆகியோர் கிறிஸ்தவ வாழ்வை இக்காலத்தில் வாழ்வதைப் பொருத்தும்
குருத்துவத்தின் வருங்காலம் அமைந்துள்ளது என்று திருப்பீடம் இத்திங்களன்று
வெளியிட்ட ஏடு கூறுகிறது.
திருப்பீடக் கத்தோலிக்க கல்விப் பேராயமும், குருத்துவ அழைத்தலை ஊக்குவிக்கும் பாப்பிறைப் பணியகமும் இணைந்து, “குருத்துவத் திருப்பணிக்கு அழைத்தல்களை ஊக்குவிப்பதற்கான மேய்ப்புப்பணி வழிகாட்டி” என்ற தலைப்பில் வெளியிட்ட 27 பக்க ஏடு இவ்வாறு கூறுகிறது.
இன்றைய உலகில் இறையழைத்தல்களின் நிலை, இறையழைத்தல் மற்றும் குருத்துவத்தின் தனிப்பண்பு, குருத்துவ வாழ்வுக்கு இறையழைத்தல்களை ஊக்குவித்தல் என மூன்று முக்கிய தலைப்புக்களில் வெளிவந்துள்ள இவ்வேட்டில், மேற்கிலுள்ள
பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் பரவி வரும் உலகப்போக்கான மனநிலை இளைஞர்கள்
குருத்துவ அழைப்பை புறக்கணிக்க வைக்கின்றது என்று கூறியுள்ளது.
பொது வாழ்க்கையிலிருந்து குருக்கள் மெது மெதுவாக ஓரங்கட்டப்படுதலும், பொது வாழ்வில் குருக்கள் தங்களது வாழ்வின் இயல்பை இழந்து வருவதும், பல இடங்களில் கன்னிமை வாழ்வு கேள்விக்கு உட்படுத்தப்படுவதும், உலகப்போக்கு மனநிலை மட்டுமல்லாமல், திருஅவைக்குள்ளே கன்னிமை வாழ்வு குறித்தத் தவறான கருத்துக்கள் இருப்பதும், இப்படி பல காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது இவ்வேடு.
கடவுள்பற்றிய
உண்மையை நேரடியாகப் பெறும் கிறிஸ்தவ அனுபவத்தை சிறுவர்களும் இளைஞர்களும்
பெறுவதற்கு இறையழைத்தல் குறித்த மேய்ப்புப்பணிகள் அமைய வேண்டும் என்றும்
வலியுறுத்தும் இவ்வேடு, இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை உணரச்செய்ய வேண்டுமென்றும் கூறுகிறது.
இறையழைத்தல்களை ஊக்குவிப்பது, குறிப்பாக, குருத்துவப்
பணிக்கென இறைவன் அழைப்பதை வரவேற்பது திருஅவைக்குத் தொடர்ந்து சவாலாக
இருந்து வருகிறது என்றும் அவ்வேட்டின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.
5. செல்வமும், கடனும் எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன - பேராயர் சில்வானோ தொமாசி
ஜூன்,25,2012. நீதி தவறும்போது, மனிதர்கள் ஈட்டும் செல்வமும், அவர்கள் தரும் கடனும் மற்ற மனிதரை, சிறப்பாக, எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறி விடுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன்
18 முதல் ஜூலை 6ம் தேதி முடிய ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் மனித
உரிமை அவையின் 20வது அமர்வில் உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வையாளர்
பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகளைக் காக்கும் வண்ணம் அந்நியநாட்டுக் கடன்
வழங்கப்படும் வழிமுறைகள் குறித்து நடைபெறும் இந்த அமர்வில்
செல்வத்தைப்பற்றியும் கடன் வழங்குவதுபற்றியும் திருஅவையில் காணப்படும்
கருத்துக்களைப் பேராயர் தொமாசி முன்வைத்தார்.
மனிதமாண்பை மையப்படுத்திய பொருளாதாரம், அரசியல், மற்றும் சமுதாய அமைப்பையே திருஅவை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, மனித மாண்பை மிகவும் சீர்குலைக்கும் வகையில், செல்வம், கடன் ஆகிய வடிவங்களில் பணம் உயர்ந்ததொரு இடத்தைப் பெற்றுவருவது வேதனையான ஒரு போக்கு என்று எடுத்துரைத்தார்.
கடன்பட்டிருக்கும் ஏழை நாடுகளின் கடன்களை நீக்கும் முயற்சிகள் தொடர்வதை ஐ.நா.வுடன் இணைந்து திருஅவையும் ஆர்வமாய் வரவேற்கிறது என்று பேராயர் தன் உரையில் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் அரசும், செல்வம் மிகுந்த நிறுவனங்களும் பண விடயத்தில் ஒளிவு மறைவற்ற வழிகளைப் பின்பற்றினால், உலகின் பொருளாதாரச் சரிவை ஓரளவாகிலும் நாம் சரி செய்யமுடியும் என்று பேராயர் தொமாசி கேட்டுக்கொண்டார்.
6. "நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" - Boko Haram
ஜூன்,25,2012. நைஜீரியாவில் வாழும் அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றவும், அடிப்படைவாதக்
குழுக்களின் வன்முறைகளால் மற்ற குழுக்கள் வன்முறையில் இறங்குவதைத்
தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நைஜீரியாவில் உள்ள
திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் விண்ணப்பித்துள்ளன.
"நைஜீரிய
வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக
அமையும்" என்று கடந்த சில நாட்களாய் நைஜீரியாவில் உள்ள Boko Haram என்ற
அடிப்படைவாதக் குழுவினர் விடுத்துவரும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து
கிறிஸ்தவ அமைப்புக்கள் பலவும் இணைந்து அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
நைஜீரியாவில் கடந்த சில வாரங்களாய் நிகழ்ந்து வரும் வன்முறைகளாலும், எதிர் வன்முறைகளாலும் உயிர் இழந்துள்ள இஸ்லாமியக் குடும்பங்களிலிருந்து மகனையோ, மகளையோ தற்கொலைப் படையினராய் தாங்கள் உருவாக்கிவருகிறோம் என்று Boko Haram குழுவினர் கூறி வருகின்றனர்.
இந்த வன்முறை கும்பலுடன், பன்னாட்டு வன்முறை கும்பலான அல் கெய்தாவுக்குத் தொடர்பு இருப்பதாலேயே Boko Haram இதுபோன்ற எச்சரிக்கைகளைத் துணிவுடன் வெளியிட்டு வருகின்றனர் என்று நைஜீரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு Fides செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளது.
7. எகிப்து நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் அனுப்பிய செய்தி
ஜூன்,25,2012. கடந்த 16 மாதங்களாய் எகிப்து நாடு கடந்துவந்த பிரச்சனைகள் நிறைந்த பாதையில் ஒரு முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் அரசுத் தலைவரின் நியமனம் அமைந்துள்ளது என்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் Angaelos கூறியுள்ளார்.
Muslim Brotherhood கட்சியின் சார்பில் போட்டியிட்ட Mohammed Mursi என்பவர் அரசுத் தலைவர் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார் என்று இஞ்ஞாயிறன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேராயர் Angaelosன் இவ்வறிக்கை இலண்டனில் இருந்து வெளியானது.
புதிய அரசுத்தலைவர், மக்களாட்சியில் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தவும், பிளவுபட்டிருக்கும்
மக்களை ஒன்று சேர்க்கவும் இறைவன் அவருக்குத் தேவையான ஞானத்தை வழங்க
வேண்டும் என்று பேராயர் தன் செய்தியில் கூறியுள்ளார்.
தங்கள் அயலவர் எந்த மதத்தையும், அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் என்பதில் எகிப்து மக்கள் அதிக கவனம் செலுத்தாமல், ஒருங்கிணைந்த
நாட்டை உருவாக்க ஒவ்வொருவரும் என்ன செய்யமுடியும் என்பதில் கவனம்
செலுத்துவதே தற்போதையத் தேவை என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவையின்
தலைவர் பேராயர் Angaelos தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
8. இலண்டன் ஒலிம்பிக் விழாவில் சென்னை இசைக்குழு
ஜூன்,25,2012. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த ‘ஸ்டக்காட்டோ’ இசைக் குழுவுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஆசியாவிலிருந்து பல்வேறு குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போட்டியிட்டாலும், இந்தியாவிலிருந்து தங்கள் குழுவுக்கு மட்டும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், சீனாவிலிருந்து ஒரு குழு தேர்வாகியிருப்பாதகவும், அந்தக் குழுவின் மேலாளர் அஜய் ஞானசேகரன் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்தியக்
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையின் தனித்தன்மையை வெளிப்படுத்தும்
வகையில் தங்களது இசையின் மாதிரியை ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளுக்குப்
பொறுப்பாளரான பிரபல இயக்குநர் Danny Boyleக்குத் தாங்கள் அனுப்பியதாகவும் அதுவே தங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 25ம் தேதி தங்கள் குழு இலண்டன் செல்ல இருப்பதாக அஜய் தெரிவித்தார். ஜூலை 30ம் தேதியும், ஆகஸ்ட் 2ம் தேதியும் ஒலிம்பிக் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் குழு நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாகவும் அஜய் தெரிவித்தார்.
‘ஸ்டக்காட்டோ’ இசைக் குழுவில் 12 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
robert john kennedy: Catholic News in Tamil - 23/06/12
robert john kennedy: Catholic News in Tamil - 23/06/12: 1. திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு 2. உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட ...
Catholic News in Tamil - 23/06/12
1. திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
2. உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் : ரியோ+20 மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதி வலியுறுத்தல்
3. புலம்பெயரும் மக்களுக்குத் தேவை நம்பிக்கை : அருள்தந்தை லொம்பார்தி
4. சமய சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் : பேராயர் லோரி
5. சுற்றுச்சூழல் என்ற கடவுளின் தோட்டத்தில் நாம் உடன் பணியாளர்கள் : தென் கொரிய ஆயர்
6. கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு
7. ரியோ+20 உச்சி மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்த உலகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு
8. இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
ஜூன்23,2012.
திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் இச்சனிக்கிழமை
கூட்டம் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இக்கூட்டம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருப்பீடத் தலைமையகத்தின் பணியில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விவகாரங்கள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது என்று கூறினார்.
திருப்பீடத்தின்
பணிக்கு இந்த ஒத்துழைப்பு இக்காலத்துக்கு மிக முக்கியமாகவும் அவசரமாகவும்
தேவைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
உரோமன்
தலைமையகத்தின் பணியில் நல்ல அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த சூழலை
நிலைநாட்டுவதற்கு உதவுகின்ற பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெறும்
நோக்கத்தில் திருஅவைப் பணியில் பல்வேறு துறைகளில் நீண்டகால அனுபவங்களைக்
கொண்டுள்ள கர்தினால்களையும் இச்சனிக்கிழமை மாலையில் திருத்தந்தை
சந்திக்கிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இந்தச் சிந்தனைகளையும் பகிர்வுகளையும் அடுத்த சில நாள்களுக்குத் திருத்தந்தை தொடர்ந்து நடத்துவார் என்றும், தூயவர்கள்
பேதுரு பவுல் பெருவிழாவுக்கென உரோமைக்குப் பல திருஅவைத் தலைவர்கள் வருவது
இதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
தனது அறையிலிருந்து நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியேறியது தொடர்பாக, திருஅவை
நிர்வாகத்தில் அவரோடு பொறுப்பைப் பகிர்ந்து கொள்பவர்களுடன் உரையாடல்
நடத்தித் தனது சிந்தனைகளைத் திருத்தந்தை பகிர்ந்து கொள்கிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியானது குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகள் பற்றிய விரிவான செய்திகளை அறிய விரும்பி, இந்த விசாரணையை நடத்துவதற்கு அவர் நியமித்துள்ள கர்தினால் Julian Herranz
தலைமையிலான கர்தினால்கள் குழுவை கடந்த சனிக்கிழமையன்றும் திருத்தந்தை
சந்தித்தார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி நிருபர்களிடம் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, உரோம் மறைமாவட்ட முன்னாள் துணைத்தலைவர் கர்தினால் Camillo Ruini, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Jozef Tomko ஆகியோரை இச்சனிக்கிழமை மாலை சந்திக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2. உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் : ரியோ+20 மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதி வலியுறுத்தல்
ஜூன்23,2012. உலகின் உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் என்று ரியோ+20 உலக உச்சி மாநாட்டில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Odilo Pedro Scherer.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் இவ்வெள்ளியன்று நடந்து முடிந்துள்ள ஐ.நா. உச்சி மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரேசில் நாட்டு Sao Paulo வின் முன்னாள் பேராயர் கர்தினால் Scherer இவ்வாறு கூறினார்.
இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மையமாக இருப்பவர்கள் மனிதர்கள் எனவும், ரியோவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முதல் அனைத்துலக உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது போன்று, உறுதியான வளர்ச்சியில் மனிதர்கள் மத்திய இடத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கர்தினால் Scherer கூறினார்.
இந்த உலகின் ஏராளமான வளங்கள் நியாயமாகப் பகிரப்படுவதற்குத் திருஅவைத் தனது ஆதரவைத் தருகின்றது என்பதை உறுதிப்படுத்திய கர்தினால் Scherer, உணவு, நீர், நலவாழ்வு, கல்வி
ஆகிய இவற்றை ஒவ்வொருவரும் கொண்டிருப்பதற்கான உரிமையை
உறுதிப்படுத்துவதற்குத் துணிச்சலாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும்
கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பைச் சட்டரீதியாக ஊக்குவிப்பது வளர்ச்சிக்குக் கடும் எதிரி என்பதையும் மாநாட்டினருக்கு நினைவுபடுத்திய அவர், மனித
வாழ்வுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகிய தாயின் வயிற்றிலே மனித வாழ்வு
கொல்லப்படுவதை நலவாழ்வு விவகாரத்தோடு சேர்க்க முடியாது என்றும் கூறினார்.
3. புலம்பெயரும் மக்களுக்குத் தேவை நம்பிக்கை : அருள்தந்தை லொம்பார்தி
ஜூன்23,2012. புலம்பெயரும் மக்களுக்கு உறைவிடமும் உணவும் வழங்குவதோடு, அவர்களுக்குப்
பிறர்மீதும் வாழ்க்கை மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க
வேண்டுமென்று இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி கேட்டுக் கொண்டார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அவர், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பசி
எனப் பல காரணங்களால் தங்கள் நாடுகளைவிட்டுப் புலம் பெயரும் மக்கள்
சொல்வதைக் கேட்டு அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மனித மற்றும்
ஆன்மீக ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையை
ஊட்ட முடியும் என்று கூறினார்.
நல்லதோர்
எதிர்காலத்தை உண்மையிலேயே அமைக்க விரும்பும் விசுவாசிகளுக்கும் நன்மனம்
கொண்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய சவாலாக இருக்கின்றது என்றும் அருள்தந்தை
லொம்பார்தி தெரிவித்தார்.
இந்த மக்கள் புலம்பெயரும் போது பசி, தாகம், திருடர்களின் தாக்குதல், படகு கவிழ்தல் போன்ற பல இடர்களால் இறக்கின்றனர் எனவும், அண்மை ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வர முயற்சித்தவர்களில் இருபதாயிரம் பேர் பயணங்களின்போது இறந்தனர் எனவும், கடந்த ஆண்டில் மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலிக்கு வந்தவர்களில் சுமார் 3,000 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார்.
மக்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டும் வருவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் உரைத்த அவர், மாலி நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையால் Mauritania வின் Mberra முகாமில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அடைக்கலம் தேடினர் என்று தெரிவித்தார்.
4. சமய சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் : பேராயர் லோரி
ஜூன்23,2012.
அமெரிக்கக் கலாச்சாரத்திலிருந்து மதத்தின் தாக்கத்தை அகற்ற முயற்சிக்கும்
சக்திகளுக்கு எதிராகக் கத்தோலிக்கர் போராட வேண்டுமென்று பால்டிமோர் பேராயர்
வில்லியம் லோரி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்துக்காகத் தொடங்கப்பட்டுள்ள இரண்டு வாரப்
போராட்டத்தின் துவக்கத் திருப்பலியில் இவ்வாறு கேட்டுக் கொண்ட பேராயர் லோரி, திருஅவையின் போதனகளும், அந்நாட்டை உருவாக்கியபோது வெளியிடப்பட்ட ஏடுகளும் மனச்சான்றின் சுதந்திரத்தை பலவழிகளில் அங்கீகரிக்கின்றன என்று கூறினார்.
செபம், சமய சுதந்திரத்தை ஆதரித்துப் பேசும் கூட்டங்கள், இந்தச் சுதந்திரம் குறித்த கல்வியறிவு போன்ற நடவடிக்கைகள், இந்த இரண்டு வாரங்களில் அந்நாடு முழுவதும் ஆயர்களால் நடத்தப்படும்.
சமய சுதந்திரத்துக்கான இந்த இரண்டு வார இந்நடவடிக்கை வருகிற ஜூலை 4ம் தேதியன்று நிறைவடையும்.
5. சுற்றுச்சூழல் என்ற கடவுளின் தோட்டத்தில் நாம் உடன் பணியாளர்கள் : தென் கொரிய ஆயர்
ஜூன்23,2012.
சுற்றுச்சூழல் இறைவனின் கொடை என்பதை உணர்ந்து அதனைப் பாதுகாப்பதற்குக்
கத்தோலிக்கர் பொறுப்பேற்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon, நம்
ஆண்டவர் நம்மை நினைத்துப் பெருமைப்படும்படியான பசுமையான புதிய
சமுதாயத்தைச் சமைப்பதற்கு கத்தோலிக்கர் தங்களை அர்ப்பணிக்குமாறு
வலியுறுத்தியுள்ளார்.
இக்காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றுச்சூழல் மிகவும் சேதமடைந்துள்ளதால் கத்தோலிக்கர், சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் செயல்படுமாறு ஆயர் தனது செய்தியில் கூறியுள்ளார்.
6. கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு
ஜூன்23,2012. கணவன்கள் இறந்த பின்னர் பெண்கள் பல்வேறு விதமான இழப்புக்களை எதிர்கொள்ளும்வேளை, கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அழைப்பு விடுத்தார்.
ஜூன்23, இச்சனிக்கிழமை அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், வாரிசுரிமை, சொத்துரிமை, சமூகப்பாதுகாப்பு, நலவாழ்வு, கல்வி போன்றவை கைம்பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன என்று கவலை தெரிவித்தார்.
கைம்பெண்கள் பலவகையானப் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்றும், இயற்கைப் பேரிடர்கள், போர்கள் போன்ற சூழ்நிலைகளில் இவர்களின் நெருக்கடிநிலை கவலைக்குரியதாக இருக்கின்றதென்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
கைம்பெண்களுக்கு
எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படவும் அவர்கள் தங்களின் மனித உரிமைகளை
முழுமையாய் அனுபவிக்கவும் இந்த அனைத்துலக தினத்தில் ஆவன செய்யவும்
உலகினரைக் கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
7. ரியோ+20 உச்சி மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்த உலகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு
ஜூன்23,2012. உலகின் அனைத்து மக்களும் நல்ல பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளமையை அடையும்பொருட்டு ரியோ+20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உலகத் தலைவர்கள் செயல்படுத்துமாறு பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
மாநாட்டின் உரைகள் முடிந்து விட்டன, இப்பொழுது வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்த மூன்று நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கூறினார் பான் கி மூன்.
சுமார் 100 நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், உலகின் உறுதியான வளர்ச்சிக்கென அரசுகளும் தொழிற்சாலைகளும், வணிகர்களும், நிதி அமைப்புகளும், தனியாட்களும் சுமார் 51,300 கோடி டாலர் நிதியுதவிக்கு உறுதியளித்துள்ளனர்.
பத்துக்கோடி மரங்களை நடுதல், ஆப்ரிக்காவில் பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு 5,000 பெண்கள் அமைப்புகளுக்கு உதவுதல், 8 இலட்சம் டன் polyvinyl chloride ஐ மறுசுழற்சி செய்தல் போன்ற திட்டங்களுக்கு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.
ஊடகங்கள் வழியாக 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
8. இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்
ஜூன்23,2012. இந்திய இளையோரின் இறப்புக்களுக்கு இரண்டாவது காரணமாக இருப்பது தற்கொலை எனவும், உலகில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தற்கொலை
செய்து கொள்பவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட
இளம்பருவத்தினர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு
மற்றும் பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட
தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வின்
முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 2010ம் ஆண்டில் 1,90,000 தற்கொலைகள் இடம்பெற்றன என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
உலக அளவில் ஆண்டுக்கு 9 இலட்சம் தற்கொலைகள் நடக்கின்றன, இவற்றில் சீனாவில் இரண்டு இலட்சம் என அந்நிறுவனம் கூறியது.
Subscribe to:
Posts (Atom)
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
India still in shackles On Independence Day, is there anything to celebrate? ...
-
UN committee vice-chair accused of anti-Church bias Critic cites 'a frontal attack on the Church' in UN-Holy See meeting. ...