Tuesday, 20 October 2026

100வது உலக மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு அனைத்துலக மறைப்பணி செபமாலை!

 

100வது உலக மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு அனைத்துலக மறைப்பணி செபமாலை!



100வது உலக மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு, அக்டோபர் 17ஆம் நாள் உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் திருஅவையின் மறைப்பணிக்காகவும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உடல்நலம் மற்றும் விரைவான குணமடைதலுக்காகவும் அனைத்துலக மறைப்பணி செபமாலையைச் செபிக்க உள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

அக்டோபர் 18ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள 100வது உலக மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு, அக்டோபர் 17ஆம் நாள் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் ஒன்றிணைந்து, திருஅவையின் மறைபரப்புப் பணிக்காகவும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உடல்நலம் மற்றும் விரைவான குணமடைதலுக்காகவும் அனைத்துலக மறைப்பணி செபமாலையைச் செபிக்க உள்ளனர்.

திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த இறைவேண்டல், உரோம் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் இணைத் தலைவரும், கர்தினால்கள் அவையின் தலைவருமாகிய கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் இதனை வழிநடத்துவார்.

இந்த இறைவேண்டலில் பங்கேற்பதற்காக, உரோம் நகரில் புனித பேதுரு வளாகத்தை நோக்கியுள்ள அனைத்துலக  மறைபரப்பு பயிற்சி மையத்தில் பங்கேற்பாளர்கள் ஒன்றுகூடுவார்கள்.

இந்த நிகழ்வானது "கிறிஸ்துவில் ஒன்றாக, மறைப்பணியில் ஒன்றிணைந்து" என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செய்தியிலிருந்து உத்வேகம் பெற்று, திருத்தந்தையையும், உலகளாவிய திருஅவையையும், மறைப்பணியாளர்களையும் புனித கன்னி மரியாவின் தாய்மைப் பராமரிப்பில் ஒப்படைக்கும் விதமாக அமையும்.

 1951 ஆம் ஆண்டில் பேராயர் ஃபுல்டன் ஜே. ஷீன் அவர்களால் நிறுவப்பட்ட மறைப்பணி செபமாலை, ஒட்டுமொத்த மனிதக் குடும்பத்தின் தேவைகளையும் திருஅவையின் நற்செய்தி அறிவிக்கும் பணியையும் தன்னுள் உள்ளடக்கியுள்ளது. இதன் ஐந்து மகிமை நிறைந்த மறையுண்மைகள் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களுக்கு அர்ப்பணிக்கப்படும்; அப்போது அந்தந்த உள்ளூர் மொழிகளில் இறைவேண்டல்கள் இடம்பெறும்.

வறுமை, மோதல்கள் மற்றும் கலாச்சார சவால்கள் நிறைந்த இடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றும் மறைப்பணியாளர்களை நினைவுகூர்ந்து சிறப்பு இறைவேண்டல்களும் இடம்பெறும். இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்படும், இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் ஆன்மீக ரீதியில் பங்கேற்கவும், நற்செய்திப் பணி, ஒன்றிப்பு மற்றும் சேவைக்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கவும் இயலும்.


No comments:

Post a Comment

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...