“திருத்தந்தையின் பிரான்ஸ் பயணம் ஓர் அருளின் தருணம்” – அருள்சகோதரி நாதாலி பெக்கார்ட்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் பிரான்சிற்கான திருத்தூதுப் பயணத்தை ஒரு "அருளின் தருணம்" என்று ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் துணைச் செயலாளரான அருள்சகோதரி நாதாலி பெக்கார்ட் அவர்கள் வர்ணித்துள்ளார். இந்தக் கூற்று திருத்தந்தையின் வருகை திருஅவை மற்றும் பிரெஞ்சு சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மெட்ஸ் நகரில் வத்திக்கான் செய்திகளிடம் பேசிய சகோதரி பெக்கார்ட், திருத்தந்தையின் பயணம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், பிரான்ஸின் நீண்ட கிறித்தவ வரலாற்றைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வையும் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.
பிரான்ஸ் பெருமளவில் மதச்சார்பற்ற நாடாக இருப்பினும், பல இளைஞர்கள் திருமுழுக்குப் பெற முற்படுகிறார்கள் என்பதையும், இது திருஅவையின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் திருத்தந்தையின் நிகழ்வுகளில் இளைஞர்கள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வலுவான பங்களிப்பையும் அவர் எடுத்துக்காட்டினார். திருத்தந்தை லியோ அவர்களின் எளிமை, அரவணைப்பு மற்றும் அமைதியான உடனிருப்பு, தனிப்பட்ட முறையில் திருத்தந்தையால் செவிமடுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்கள் உள்படப் பலரைத் தொட்டது.
வணக்கத்திற்குரிய ராபர்ட் ஷூமேனுடன் தொடர்புடைய மெட்ஸ் நகருக்கு திருத்தந்தை வருகை புரிந்தது குறித்துப் பேசிய சகோதரி பெக்கார்ட், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை வலியுறுத்தினார். பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான போர்களால் ஏற்பட்ட துன்பங்களை அனுபவித்த ஷூமன், மோதல்களுக்குப் பதிலாக தொடர்ச்சியான உரையாடலும் நல்லிணக்கமும் ஐரோப்பாவிற்குத் தேவை என்று நம்பினார்.
கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் நல்லிணக்கம் எப்போதும் சாத்தியம் என்பதே திருத்தந்தையின் செய்தி என்று சகோதரி பெக்கார்ட் கூறினார்.
ஐரோப்பாவில் உரையாடல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் திருஅவைக்கு ஒரு முக்கியமான பொறுப்பு உண்டு என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment