An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Tuesday, 24 April 2012
robert john kennedy: Catholic News 23 April 12
robert john kennedy: Catholic News 23 April 12: 1. ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி 2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை...
Catholic News 23 April 12
1. ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி
உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி
2.
திருத்தந்தையின்
அல்லேலூயா வாழ்த்தொலி உரை
3. நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பது
என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு -
அமெரிக்க ஆயர்கள்
4. பிலிப்பீன்ஸில்
நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்கள் குறித்து கிறிஸ்தவ சபைகள்
கவலை.
5.
வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு உதவி வேண்டி இங்கிலாந்து
கத்தோலிக்க அமைப்புகள் வேண்டுகோள்
6. கூடங்குளம் அணுமின்
நிலையத்துக்கு எதிராக AICUF மாணவர்கள் மூன்று நாள்
உண்ணாநோன்பு போராட்டம்
7.
தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 17 விழுக்காடு வீழ்ச்சி
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. ஏழாவது சுற்றுலா மேய்ப்புப்பணி
உலக மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி
ஏப்ரல்,23,2012. உலகின் பல்வேறு மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கை
அழகையும் சந்திக்க நாம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணங்கள் நம்மைக் கடவுளிடம்
அழைத்துச் செல்லும் அரியதொரு வாய்ப்பு என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மெக்சிகோ நாட்டின் Cancún நகரில்
இத்திங்கள் முதல் ஏப்ரல் 27, வருகிற வெள்ளி வரை நடைபெறும் ஏழாவது
சுற்றுலா மெய்ப்புப்பணி உலக மாநாட்டிற்கு, நாடு விட்டு நாடு செல்வோர்
மற்றும் பயணிகளுக்கு மெய்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள திருப்பீட அவையின் தலைவர்
கர்தினால் Antonio
Maria Vegliòவுக்கும் Cancún ஆயர் Pedro Pablo Elizondo Cárdenasக்கும்
அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
"படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப்
படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்." (13:5) என்று சாலமோனின் ஞானம் என்ற
நூலில் காணப்படும் விவிலிய வார்த்தைகளை மேற்கோளாக எடுத்துக் கூறியத் திருத்தந்தை, நாம்
மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் அனுபவமாக மாறவேண்டும்
என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் சுற்றுலா என்ற வர்த்தகத்தால் விளைந்துள்ள
தீமைகளையும் திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். சுற்றுலா
என்ற போர்வைக்குக் கீழ் மனித வர்த்தகங்கள் அதிகரித்து வருவதையும், முக்கியமாக, சிறுவர்
சிறுமியர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதையும் திருத்தந்தை தன் செய்தியில்
சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பணியில் திருஅவை ஈடுபட்டிருப்பதன் நோக்கமே, இதன் வழியாக, உலக
நாடுகளைக் காணும் பயணங்களை பொறுப்புள்ள வகையில் நடத்தும் வழிமுறைகளை கடைபிடிப்பதே
என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
விடுமுறையின் வழியாக மக்கள் தங்கள் உடல்களை அமைதிப்படுத்தும்
வேளையில், அவர்கள்
மனங்களுக்குப் புத்துயிர் வழங்கும் வழிகளை திருஅவையின் மெய்ப்புப் பணி
கண்டுபிடித்து மக்களை வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2.
திருத்தந்தையின்
அல்லேலூயா வாழ்த்தொலி உரை
ஏப்ரல் 23, 2012. உயிர்த்த இயேசு எவ்வாறு தன்
சீடர்களுக்குத் தோன்றினாரோ அவ்வாறே இன்றும் நம்மிடையே தன் வார்த்தை மற்றும்
திருநற்கருணை மூலம் பிரசன்னமாயிருக்கிறார் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி
உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அன்று சீடர்களுக்குச் சமாதானத்தை வழங்கிய இயேசு, நமக்கும்
தன் அமைதியை வழங்கி, நம் வாழ்வை மகிழ்வுக்குத் திறந்து, தீமை, துன்பம், வேதனை
மற்றும் அச்சத்தினால் சூழப்பட்டிருக்கும் இவ்வுலகின் இறுதி எல்லை வரைக்கும் அவரின்
சாட்சிகளாக வாழ அழைப்பு விடுக்கிறார் என, உரோம் நகர் தூய பேதுரு பேராலய
வளாகத்தில் கூடியிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு நண்பகல்
அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய போது கூறினார் திருத்தந்தை.
உயிர்த்த இயேசு கடற்கரையில் கூடியிருந்த சீடர்களுக்கும், எம்மாவுஸ்
வழியில் சீடர்களுக்கும் தோன்றி அவர்களோடு உரையாடிய நிகழ்வுகள் குறித்துச்
சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசு தன் சீடர்களோடு உரையாடியதன் வழி
மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களின் மனக்கண்களைத் திறந்தார் என வாசிக்கிறோம்
என்றார்.
வழக்கமாக உயிர்ப்புத் திருவிழாக்காலத்தில் சிறுவர் சிறுமிகள்
திருநற்கருணை அருளடையாளத்தை முதன் முறையாகப் பெறுவது இடம்பெறும் என்பதையும்
சுட்டிக்காட்டியப் பாப்பிறை, நல்விசுவாசத்தின் இத்திருவிழாவுக்கு
சிறார்களைத் தயாரிப்பதில் பங்கு குருக்கள், பெற்றோர் மற்றும் மறைக்கல்வி
ஆசிரியர்களின் கடமையையும் வலியுறுத்தினார்.
3. நிலக்கண்ணி வெடிகளை ஒழிப்பது
என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர் அவசரமான முடிவு -
அமெரிக்க ஆயர்கள்
ஏப்ரல்,23,2012. நிலக்கண்ணி வெடிகளை
முற்றிலும் ஒழிப்பது என்ற முடிவு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய ஓர்
அவசரமான முடிவு என்று அமெரிக்க ஆயர்கள் அரசுத் தலைவர் பாரக் ஒபாமாவுக்கும், அமெரிக்க
அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நிலக்கண்ணி வெடிகளை உலகிலிருந்து முற்றிலும் அகற்ற 1977ம்
ஆண்டு உருவான உலக உடன்பாட்டில் சேராத 37 நாடுகளில் அமெரிக்க அரசும் ஒன்று.
இந்த உடன்பாட்டில் இணைவதா வேண்டாமா என்ற வாதத்தை அமெரிக்க அரசு
2009ம் ஆண்டு தன் பாராளுமன்றத்தில் துவக்கியது. இந்த வாதங்களின் இறுதிக் கட்டம்
தற்போது நெருங்கி வருவதால், அமெரிக்க ஆயர்கள் ஒபாமா அரசுக்கு இந்த
வேண்டுகோளை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர NATO அமைப்பில் உள்ள அனைத்து
நாடுகளும் உட்பட, உலகின் 161 நாடுகள் நிலக்கண்ணி வெடிகளை முற்றிலும்
ஒழிக்கும் உலக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க ஆயர்கள் அனுப்பியுள்ள இந்த வேண்டுகோளில்
அமெரிக்காவின் எவான்ஜெலிக்கல் லூத்தரன் சபை, மெதடிஸ்ட் சபை, பிரஸ்பிடேரியன்
சபை என்ற பல்வேறு அமைப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன.
4. பிலிப்பீன்ஸில்
நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்கள் குறித்து கிறிஸ்தவ சபைகள்
கவலை.
ஏப்ரல் 23, 2012. பிலிப்பீன்சின் Mindanao பகுதி கிராமப்புறங்கள்
இராணுவமயமாகி வருவதால், நாட்டிற்குள்ளேயே அகதிகளாகியுள்ளவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் துன்புறும் சூழல்கள் உருவாகியுள்ளதாக அந்நாட்டின்
கிறிஸ்தவ சபைகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
மக்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற
கட்டாயப்படுத்தப்படும்போது அவர்கள் தங்கள் விவசாய நிலங்களையும் பள்ளிகளையும்
வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வரவேண்டியுள்ளது என தங்கள் கவலையை வெளியிடும்
பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள், குழந்தைகளின் பள்ளிகளும் மக்களின்
வழிபாட்டுத்தலங்களும் இராணுவமுகாம்களாக மாறி வருகின்றன எனவும் குற்றஞ்சாட்டினர்.
இத்தகைய கட்டாய இடம்பெயர்வுகளால் மின்டனாவோவின் Mamanwa பூர்வீகக்
குடிமக்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவக்
கூட்டமைப்புகளின் அறிக்கை தெரிவிக்கிறது. பிலிப்பீன்ஸில் உள்நாட்டுபோர் இடம்பெறும்
பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தற்போது நாட்டுக்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும்
நிலை உருவாகியுள்ளது குறித்து அந்நாட்டின் மதக்குழுக்களும் மனித உரிமை
ஆர்வலர்களும் இணைந்து இத்திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் இரு நாள்
கருத்தரங்கை நடத்தி வருகின்றனர்.
5.
வறுமையில் வாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு உதவி வேண்டி இங்கிலாந்து
கத்தோலிக்க அமைப்புகள் வேண்டுகோள்
ஏப்ரல் 23, 2012. இங்கிலாந்தில் ஏழ்மையில்
வாடும் அனைத்து 22 இலட்சம் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கும்
திட்டத்திற்கு கத்தோலிக்க கல்வி அமைப்பும், காரித்தாஸ் நிறுவனமும்
இணைந்து தங்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளன.
ஏழ்மையில் வாடும் குழந்தைகளுள் பாதிபேரே இதுவரை இலவச மதிய
உணவுத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருவதாகத் தெரிவித்த இக்கத்தோலிக்க அமைப்புகள்,
அனைத்துக் குழந்தைகளும் பலன்பெறும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுமாறு குரல்
கொடுத்துள்ளன.
12 இலட்சம் குழந்தைகள் எவ்வித உணவு உதவிகளும் பெறாமல் வாழ்ந்து
வருவதாகக் கூறும் இந்த கத்தோலிக்க அமைப்புகள், பள்ளி
விடுமுறைக்காலத்தின்போதும் குழந்தைகளுக்கு உணவு உதவிகள் வழங்க வழிவகைச் செய்யப்பட
வேண்டும் என அரசை விண்ணப்பித்துள்ளன.
6. கூடங்குளம் அணுமின்
நிலையத்துக்கு எதிராக AICUF மாணவர்கள் மூன்று நாள்
உண்ணாநோன்பு போராட்டம்
ஏப்ரல்,23,2012. கூடங்குளம் அணுமின்
நிலையத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்
விதமாக, ஆந்திராவின்
நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இஞ்ஞாயிறு வரை இடிந்தகரையில் மூன்று நாள்
உண்ணாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு அணுமின் சக்தி மிக இன்றியமையாதது
என்று கூறி மக்களை தவறாக வழிநடத்தும் இந்திய அரசு, இயற்கையைப் பாதுகாக்கும்
வகையில் ஏனைய சக்திகளைக் கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்கள் கூறினார்.
AICUF என்று அழைக்கப்படும் அகில
இந்திய கத்தோலிக்கப் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்களான இந்தக்
கல்லூரி மாணவர்கள், அணு உலைகளால் ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களை மக்களுக்கு
எடுத்துரைப்பதும் தங்கள் எதிர்காலப் பணியாக இருக்கும் என்று கூறினார்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற
கோரிக்கையுடன்,
இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும்
நிறுத்திவிட்டு, மாற்று வழிகளில் சக்தி பெறும் முயற்சிகளை இந்திய அரசு
மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசின் முன் வைக்கப்போவதாக இம்மாணவர்கள்
கூறினர்.
7.
தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பவர்களின் எண்ணிக்கை, 17 விழுக்காடு வீழ்ச்சி
ஏப்ரல் 23, 2012. தமிழகத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பவர்களின் எண்ணிக்கை, ஏறத்தாழ 17 விழுக்காடு வீழ்ச்சி
அடைந்துள்ளதாக "அபாக்ஸ்' என்ற இந்திய ஊடக
விளம்பரங்களைச் சந்தைப்படுத்துவோருக்கான நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொலைக்காட்சி பார்த்தவர்களின்
எண்ணிக்கை,
அதற்கு முந்தைய மாதம் பார்த்தவர்களை விட 17 விழுக்காடு வீழ்ச்சி
கண்டுள்ளது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வீழ்ச்சிக்கு, தொடர் மின்வெட்டும், அறிவிக்கப்படாத
மின்வெட்டும் முக்கிய காரணங்களாக இருப்பதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது.
ஆட்சி மாற்றம், அரசியல் திருப்பங்கள் போன்றவை, பொழுதுபோக்கு அலைவரிசைகளில் இருந்து, மக்களின் கவனத்தை, செய்தி அலைவரிசைகள் பக்கம் திருப்பியுள்ளதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
robert john kennedy: Catholic news 21 April 12
robert john kennedy: Catholic news 21 April 12: 1. கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு 2. திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி 3...
Catholic news 21 April 12
1. கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை
அழைப்பு
2. திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி
3. புதிய நற்செய்திப் பணிக்கு அன்னை தெரேசா மீது அன்பு தேவை
– பேராயர் டி சூசா
4. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டம்
குறித்து ஆயர்கள் கவலை
5. கியூபா நாட்டுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க
ஐக்கிய நாட்டு ஆயர் வலியுறுத்தல்
6. Guinea-Bissau வில் அமைதி திரும்ப ஆயர்கள் செபம்
7. அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22
8. மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல்
நோய் : மருத்துவ நிபுணர்கள் தகவல்
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. கிறிஸ்தவர்களின் சுதந்திரத்திற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை
அழைப்பு
ஏப்.21,2012: உலகளாவியத் திருஅவையின் தேவைகளுக்காகவும், குறிப்பாக கிறிஸ்தவர்களின்
சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து செபிக்குமாறு ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு
அமைப்பிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தைக்கும் அவரது பிறரன்பு பணிகளுக்குமென நிதியுதவி செய்யும்,
Papal
Foundation
என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு அமைப்பின் சுமார் 120 உறுப்பினர்களை
இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு செபிக்கக் கேட்டுக்
கொண்டார்.
இக்காலத்தில் உடனடியாகத் தேவைப்படும் அறநெறி விவகாரங்களை நற்செய்தியின்
ஒளியில் அறிவிப்பதற்குக் கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்படும் சுதந்திரத்திற்காகச்
செபிக்குமாறு கேட்டுக் கொண்டார் அவர்.
வட அமெரிக்க அருளாளர்கள் Kateri Tekakwitha, அன்னை Marianne
Cope ஆகிய இருவரையும் வரும் மாதங்களில் புனிதர்களாகத் தான்
அறிவிக்கவிருப்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அமெரிக்கத் திருஅவையைக் கட்டி
எழுப்புவதில் பெண்கள் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க பங்கை இப்புனிதர்கள்
நினைவுபடுத்துகின்றார்கள் என்றும் கூறினார்.
1988ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Papal Foundation என்ற அமைப்பு, 1990 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏழு கோடிக்கு மேற்பட்ட டாலரை உலகின் சில
ஏழை நாடுகளில் பிறரன்புப் பணிகளுக்கென வழங்கியுள்ளது.
வளரும் நாடுகளிலிருந்து குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள்
உரோமையில் இறையியல் படிப்பதற்கும், www.news.va என்ற வத்திக்கான் செய்தி இணையதளம் உட்பட திருஅவையின் ஊடகத்துறை மற்றும்
நற்செய்தி அறிவிப்புக்கும் இவ்வமைப்பு நிதி உதவி செய்துள்ளது.
2. திருத்தந்தை : கலை இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சி
ஏப்.21,2012: அழகின் உன்னதமான இறைவனுக்குச் செலுத்தும் புகழ்ச்சியாக கலை அமைந்துள்ளது
என்று கூறினார் திருத்தந்தை.
ஏப்ரல் 16, இத்திங்களன்று 85வது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களைக் கவுரவிக்கும் விதத்தில் இவ்வெள்ளி மாலை வத்திக்கான் பாப்பிறை
6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் இவ்வாறு அவர்
கூறினார்
உலகின் மிகப் பழமையான மற்றும் உலகப் புகழ் பெற்ற ஜெர்மனியின் Leipzig, Gewandhaus இசைக்குழு நடத்திய இசை மழையின் இறுதியில் சிறிய உரையாற்றிய திருத்தந்தை
இக்குழுவினருக்கு, சிறப்பாக இதனை வழிநடத்திய இத்தாலியரான Riccardo
Chaillyக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த இசைக் கச்சேரியை நடத்துமாறு 2010ம் ஆண்டில் அழைப்பு பெற்ற போது, இதனை
நம்பமுடியாத ஓர் அழைப்பாகவும், இதன் மூலம் தான் மிகவும் கவுரவிக்கப்பட்டதாக
உணர்ந்ததாகவும் வத்திக்கான் வானொலியில் கூறினார் இந்தக் கச்சேரியின் நிர்வாக
இயக்குனர் Andreas Schulz. இசை பற்றிய ஆழமான அறிவும் பற்றும் கொண்ட திருத்தந்தைக்கு இக்கச்சேரி
மிகவும் தனித்துவம் மிக்கது என்றும் Schulz கூறினார்.
3. புதிய நற்செய்திப் பணிக்கு அன்னை தெரேசா மீது அன்பு தேவை
– பேராயர் டி சூசா
ஏப்.21,2012: இந்தியாவில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் தங்களது பிறரன்புப் பணிகள்,
மிகவும் வசதி குறைந்த பகுதிகளிலுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், தொழுநோயாளர்
குடியிருப்புகள் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு
பலவகையான அடக்குமுறைகளால் துன்புறுகின்றனர் என்று பேராயர் Henry D'Souza கூறினார்.
இந்தியாவில் மறைப்பணி மற்றும் அது எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றிய
சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட கல்கத்தாவின் முன்னாள் பேராயராகிய டி சூசா, அருளாளர்
அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டான வாழ்வு பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து
கொண்டார்.
மதமாற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் பல இன்னல்களுக்கு மத்தியிலும்
மறைப்பணியைத் திறம்பட எடுத்துச் செய்வதற்கு இறையன்பும் பிறரன்பும் மிகவும்
உதவுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
அன்னை தெரேசாவுடன் சுமார் 35 ஆண்டுகள் பணி செய்துள்ள பேராயர் டி சூசா,
அன்னை தெரேசா கொண்டிருந்த இறையன்பே அவரது மறைப்பணிக்கு உதவியாக இருந்தது என்று
தெரிவித்தார்.
4. அமெரிக்க ஐக்கிய நாட்டின் 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டம்
குறித்து ஆயர்கள் கவலை
ஏப்.21,2012: அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு 2013ம் நிதி ஆண்டு வரவு செலவு திட்டத்தில்
குறைப்பதற்குப் பரிந்துரை செய்துள்ள விவகாரங்கள் சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்கள்
மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை
வெளியிட்டுள்ளனர்.
பசி
மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
குறைக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற
ஆணைக்குழுத் தலைவர் Stockton ஆயர் Stephen E. Blaire கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு வேளாண்துறைத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில்
இவ்வாறு கூறியுள்ள ஆயர், பொருளாதார நெருக்கடியும் வறுமையும் அதிகரித்து வரும்
இக்காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஏழைகளை அதிகம் பாதிக்கும் என்று
குறிப்பிட்டுள்ளார்.
5. கியூபா நாட்டுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க
ஐக்கிய நாட்டு ஆயர் வலியுறுத்தல்
ஏப்.21,2012: கடந்த ஆண்டில் தளர்த்தப்பட்ட கியூபா நாட்டுக்கெதிரான சில பயணக்
கட்டுப்பாடுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்வேளை, அந்நாட்டுக்கெதிரானப்
பொருளாதாரத் தடைகள் அகற்றப்படுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச
நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கியூபா நாடு பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது ஒருபுறம்
இருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கிடையே ஆழமான உரையாடலும் தொடர்புகளும் இருப்பதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று ஆயர் Richard E.
Pates கூறினார்.
அமெரிக்க அரசு செயலர் ஹில்லரி கிளின்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ள ஆயர் Pates, இவ்விரு நாடுகளுக்கிடையே இடம் பெறும் உறவுகள், கியூபாவில் மனித உரிமைகளும்
மற்றும்பிற நல்ல மாற்றங்களும் ஏற்பட உதவும் என்றும் கூறியுள்ளார்.
50 ஆண்டுகளாக அமலில் இருக்கும் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள்,
அரசியல் யுக்தியாகவும் அறநெறிக்குப் புறம்பானதாகவும் இருக்கின்றது என்று அமெரிக்க
ஐக்கிய நாட்டு அருட்சகோதரி Ondina Cortes கூறியுள்ளார்.
6. Guinea-Bissau வில் அமைதி திரும்ப ஆயர்கள் செபம்
ஏப்.21,2012:
மேற்கு ஆப்ரிக்க நாடான Guinea-Bissau வில்
இடம் பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைப் புறக்கணித்துள்ள அதேவேளை, மக்களாட்சியை
மதித்து அமைதியான முறையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு அந்நாட்டு ஆயர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
Guinea-Bissau வின்
இடைக்கால அரசுத்தலைவர் Raimundo Pereira மற்றும் முன்னாள் பிரதமர் Carlos Gomes Jr.டமிருந்து இராணுவ அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றிய 5 நாள்களுக்குப் பின்னர்
அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், நாடு மிகவும் கடுமையான பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது
என்று கூறியுள்ளனர்.
தேர்தல் இடம் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ள இந்த
இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நாட்டின் சுமார் 16 இலட்சம் மக்களுக்குப்
பிரச்சனைகளையும் துன்பங்களையும் கொண்டு வரும் என்று கூறியுள்ளனர் ஆயர்கள்.
1974ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டிலிருந்து சுதந்திரம் அடைந்த Guinea-Bissau என்ற
சிறிய நாட்டுக்கு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகளும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு
முயற்சிகளும் பழக்கப்பட்ட நடவடிக்கை என்று ஊடகங்கள் கூறுகின்றன.
7. அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22
ஏப்.21,2012:
இயற்கையின் வாழ்வாதார வளங்களையும் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாப்பதற்கு
பூமித்தாய் நாள் அழைப்பு விடுக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்
கூறினார்.
ஏப்ரல்22, இஞ்ஞாயிறன்று அனைத்துலக பூமித்தாய் தினம்
கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், இப்பூமியைப் பாதிக்கும்
உலகளாவிய விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு இந்நாள் அழைப்பு விடுக்கின்றது என்று
கூறியுள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளில் இவ்வுலகுக்கு குறைந்தது 50 விழுக்காடு அதிக உணவும்,
45 விழுக்காடு அதிக மின்சக்தியும், 30 விழுக்காடு அதிகத் தண்ணீரும், இலட்சக்கணக்கான
புதிய வேலைவாய்ப்புக்களும் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே
உலகின் சவால்கள் அதிகம் எனவும், ஒரு பிரச்சனைக்கான தீர்வு எல்லாவற்றிலும்
முன்னேற்றத்தைக் கொணரும் எனவும் பான் கி மூன் கூறியுள்ளார்.
அனைத்துலக பூமித்தாய் தினம் ஏப்ரல் 22ம் தேதி கடைப்பிடிக்கப்பட
வேண்டுமென்று 2009ம் ஆண்டு ஐ.நா.பொது அவையில் தீர்மானிக்கப்பட்டது.
8. மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல்
நோய் : மருத்துவ நிபுணர்கள் தகவல்
ஏப்.21,2012:
மதுப்பழக்கம் கொண்ட 50 விழுக்காட்டினருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது என்றும்,
சென்னையில் 30
விழுக்காட்டினருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடங்கியுள்ள, குடல் இரைப்பை மற்றும்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் இவ்வாறு
மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
பிரிட்டனைச் சேர்ந்த 10 நிபுணர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
70க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதிகமாக மது அருந்துதல், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, ஈரலில் கொழுப்பு அதிகரித்தல் ஆகிய காரணங்களால் ஈரல் நோய் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் ஈரல் நோயால் இறக்கின்றனர். நான்கு
விழுக்காட்டு இந்தியர்கள் ஹெபடைடிஸ் பி நோய்க் கிருமிகளாலும், ஒரு
விழுக்காட்டினர் ஹெபடைடிஸ் சி நோய்க் கிருமிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று
மருத்துவர்கள் கூறினர்.
அண்மைக் கணக்கெடுப்பின்படி, உலக
அளவில் 200 கோடிப் பேர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் என்றும், இதில், 76 இலட்சம் பேருக்கு ஈரல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றும்
தெரியவந்துள்ளது. 30 விழுக்காட்டு இந்தியர்கள் மதுப்பழக்கம் கொண்டுள்ளனர்.
இதில், 13 விழுக்காட்டினர் தினமும் மது அருந்துகின்றனர். சிரோசிஸ் நிலைக்கு வந்த
நோயாளிகளில் 50 விழுக்காட்டினர் மதுப்பழக்கம் கொண்டவர்கள்.
ஈரல்
நோய் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஈரலில் கொழுப்பு சேராமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று
அக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நிபுணர்கள் கூறினர்.
Friday, 20 April 2012
robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 20 ஏப்ரல் 2012
robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 20 ஏப்ரல் 2012: 1. திருத்தந்தை : திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் 2. அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப...
கத்தோலிக்க செய்திகள்: 20 ஏப்ரல் 2012
1. திருத்தந்தை : திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்
2. அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – திருப்பீடத் தூதர்
3. விசுவாச ஆண்டு திருத்தந்தையின் ஏழாம் ஆண்டு பரிசு – பேராயர் கோமெஸ்
4. மெக்சிகோவில் ஏழாவது உலக சுற்றுலா மாநாடு
5. தாய்லாந்து மக்கள் வாழ்வை மதிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்
6. ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது
7. போர்னெயோ தீவில் பருவமழைக் காடுகளைப் பாதுகாப்பது குறித்த கூட்டம்
8. மியான்மாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து நாடுகள் மறுபரிசீலனை
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. திருத்தந்தை : புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்
ஏப்.20,2012. புனித திருமறை நூல்கள் அவற்றின் இயல்புக்கு ஒத்தவகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டியது திருஅவையின் வாழ்வுக்கும் பணிக்கும் இன்றியமையாததும் அடிப்படையானதுமாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கானில் இவ்வெள்ளியன்று ஐந்து நாள்கள் ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்துள்ள பாப்பிறை விவிலியக் கழகத்துக்குச் செய்தி அனுப்பியிருந்த திருத்தந்தை, இவ்விவிலியக் கழகத்தின் தரமான ஆய்வுகளின் அவசியம் குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.
“விவிலியத்தின் உள்தூண்டுதலும் உண்மையும்” என்ற இக்கூட்டத்தின் தலைப்பை மையமாக வைத்து அமைந்திருந்த திருத்தந்தையின் இச்செய்தி, புனித நூல்களின் தூண்டுதலைப் புறக்கணித்து அல்லது அதனை மறந்து அவற்றுக்கு அளிக்கப்படும் விளக்கங்கள், அவற்றின் மிக முக்கியமான மற்றும் மதிப்பு மிக்க கூறைக் கவனத்தில் எடுக்கவில்லை என்று கருதப்படும் என்று கூறுகிறது.
திருத்தந்தையின் இச்செய்தி, பாப்பிறை விவிலியக் கழகத்தின் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடாவுக்கு அனுப்பப்பட்டது.
2. அமெரிக்கர்கள் உலக அளவில் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் – திருப்பீடத் தூதர்
ஏப்.20,2012. தங்களது தாயகத்தில் எதிர்நோக்கும் சமய அடக்குமுறையைத் தடுப்பதற்கும், உலகெங்கும் உண்மையான சமய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்கர் உழைக்க வேண்டுமென்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வியாழனன்று வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய கத்தோலிக்க செப நிகழ்வில் பேசிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Francis A. Chullikatt இவ்வாறு கூறினார்.
மனித சமுதாயத்தின் எதிர்காலமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்றுரைத்த பேராயர் Chullikatt, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக வாழும் போது மரண அச்சுறுத்தலை எதிர்நோக்குவதன் அர்த்தத்தை ஈராக்கில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய போது உணர முடிந்தது என்று கூறினார்.
வகுப்புவாத வன்முறையின் கொடுமைகளைத் தான் நேரில் பார்த்ததாகவும், தனக்குத் தெரிந்த மக்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதையும் தான் அறிந்ததாகவும் பேராயர் விளக்கினார்.
கடவுள் மீதான பற்றுறுதியும் சமய சுதந்திரமும் ஒன்றிணைந்து செல்ல வேண்டுமென்றும் ஐ.நா.வுக்கானத் திருப்பீட தூதர் கூறினார்.
3. விசுவாச ஆண்டு திருத்தந்தையின் ஏழாம் ஆண்டு பரிசு – பேராயர் கோமெஸ்
ஏப்.20,2012. பாப்பிறையாக ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைக்கு வழங்கியிருக்கும் சிறந்த பரிசாக, மலரவிருக்கும் விசுவாச ஆண்டு அமைந்துள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 19 இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பிறைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த Los Angeles பேராயர் Jose H. Gomez, திருத்தந்தை அறிவித்துள்ள விசுவாச ஆண்டு, ஒவ்வொருவரும் தங்களது விசுவாசம் பற்றிச் சிந்திப்பதற்கு ஏற்ற காலம் என்று கூறினார்.
தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள திருத்தந்தை அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வது பெரிய ஆசீர்வாதம் என்றும், அவருக்காக நாம் செபிக்க வேண்டுமென்றும் Los Angeles பேராயர் Gomez வலியுறுத்தினார்.
4. மெக்சிகோவில் ஏழாவது உலக சுற்றுலா மாநாடு
ஏப்.20,2012. “மாற்றத்தைக் கொணரும் சுற்றுலா” என்ற தலைப்பில் இம்மாதம் 23 முதல் 27 வரை மெக்சிகோ நாட்டு Cancún ல் ஏழாவது உலக சுற்றுலா மாநாட்டை நடத்தவுள்ளது திருப்பீட சுற்றுலா அவை.
மெக்சிகோ ஆயர் பேரவையின் ஒத்துழைப்புடன் குடியேற்றதாரர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர்க்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவை நடத்தும் இம்மாநாட்டில் நான்கு கண்டங்களின் 40 நாடுகளிலிருந்து சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆப்ரிக்க நாடுகள், 16 அமெரிக்க நாடுகள், 6 ஆசிய நாடுகள், 13 ஐரோப்பிய நாடுகள் என இம்மாநாட்டில் பங்கு பெறும் பிரதிநிதிகள், சுற்றுலாக்களின் பல்வேறு கூறுகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
UNWTO என்ற ஐ.நா.வின் சுற்றுலா நிறுவனத்தின் கணிப்புப்படி, 2011ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.4 விழுக்காடு அதிகரித்தது என்றும் ஏறக்குறைய 98 கோடி மக்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது.
5. தாய்லாந்து மக்கள் வாழ்வை மதிக்குமாறு ஆயர்கள் வலியுறுத்தல்
ஏப்.20,2012. தாய்லாந்து மக்கள் மனித வாழ்வை மதித்து, கருக்கலைப்பு மற்றும் தற்கொலைகளைத் தவிர்த்து நடக்குமாறு அந்நாட்டு ஆயர் பேரவை அரசுக்கும் குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாய்லாந்து சமுதாயத்தில் நிலவும் ஆன்மீக வெறுமையையும் பிளவுகளையும் அகற்றுவதற்கு உதவும் நோக்கத்தில், வருகிற செப்டம்பரில் வெளியிடப்படும் ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கை அமைந்துள்ளது என்று அருட்பணி Otfried Chan தெரிவித்தார்.
தாய்லாந்து ஆயர்களின் அறிக்கை குறித்துப் பேசிய, அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் அருட்பணி Chan, கருவில் வளரும் குழந்தைகளின் பாதுகாவலரான புனித Gianna பக்தியைப் பரப்பவும், மக்கள் கருக்கலைப்பைப் புறக்கணிக்கவும் ஆயர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர் என்று தேசிய நலவாழ்வுத் துறை கூறியது.
ஆயினும் இவ்வெண்ணிக்கை சுமார் 5 இலட்சம் என்று அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
6. ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு கிடையாது
ஏப்.20,2012. உலகில் ஏறக்குறைய 250 கோடி மக்களுக்கு வங்கிகளில் நிதி சேமிப்பு வசதிகள் கிடையாது என்று உலக வங்கி கூறியது.
கடந்த ஆண்டில் 148 நாடுகளில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களிடம் எடுத்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாக ஊதியம் பெறும் வயது வந்தோரில் 75 விழுக்காட்டினர் வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிகிறது.
சமமற்ற வருவாய்களினால் சுமார் 250 கோடிப் பேருக்கு வங்கிகளில் கணக்குகள் இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
7. போர்னெயோ தீவில் பருவமழைக் காடுகளைப் பாதுகாப்பது குறித்த கூட்டம்
ஏப்.20,2012. இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகளின் 2 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிலான பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், WWF என்ற உலக வனப் பாதுகாப்பு அமைப்பும் அதன் உறுப்பு அமைப்புகளும், இந்தோனேசிய அரசும் சேர்ந்து மூன்று நாள்கள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் “அனைத்துலக புவி தின”த்தையொட்டி ஜகார்த்தாவில், “இவ்வுலகுக்கான பசுமைப் பொருளாதாரம்” என்ற இக்கூட்டத்தை நடத்தியது இவ்வமைப்பு.
Heart of Borneo (HoB) என்ற பருவமழைக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Borneo தீவில் வெப்பமண்டல பருவமழைக்காடுகளைப் பாதுகாக்கும் Heart of Borneo என்ற திட்டத்திற்கு இந்தோனேசியா, புருனெய், மலேசியா ஆகிய நாடுகள் 2007ம் ஆண்டில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
8. மியான்மாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து நாடுகள் மறுபரிசீலனை
ஏப்.20,2012. மியான்மாரில் இராணுவ ஆதிக்கத்துடன் ஆட்சி செய்து வரும் அரசு, தொடர்ந்து மக்களாட்சிப் பாதையில் சென்றால் அந்நாட்டுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய சமுதாய அவையும் தெரிவித்துள்ளன.
மியான்மாரின் Thingyan புத்தாண்டையொட்டி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அரசுச் செயலர் ஹில்லரி கிளின்டன், புதிய வாய்ப்புக்களுடன் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டுவதற்கு முயற்சிக்கும் மியான்மாருடன் அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு தற்போது மக்களாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஏப்ரல் 17ம் தேதி செவ்வாயன்று மியான்மாரில் புத்தாண்டு சிறப்பிக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
India still in shackles On Independence Day, is there anything to celebrate? ...
-
UN committee vice-chair accused of anti-Church bias Critic cites 'a frontal attack on the Church' in UN-Holy See meeting. ...