உலகின் நான்காவது பெரிய ஆறு
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி, அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. பொதுவாக, ஆறுகள், அவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலில் கலக்கும்வரை உள்ள அளவை வைத்து, அவற்றின் நீளம் கணக்கிடப்படுகிறது. உலகின் மிக நீளமான ஆறுகள் பட்டியலில் வட ஆப்ரிக்காவில் பாய்கின்ற நைல், தென் அமெரிக்காவில் பாய்கின்ற அமேசான், சீனாவில் பாய்கின்ற யாங்சி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாய்கின்ற மிசோரி-மிசிசிப்பி என்று ஊடகங்கள் வரிசைப்படுத்தியுள்ளன. வட அமெரிக்காவின் மிக நீளமான மிசோரி ஆறு, ராக்கி மலைத்தொடரில் உற்பத்தியாகி கிழக்காகவும் தெற்காகவும் 3,767 கி.மீ. தூரம் பயணித்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு வடக்கில் மிசிசிப்பி ஆற்றுடன் கலக்கிறது. இவ்வாற்றுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பத்து மாநிலங்களிலும், கனடா நாட்டின் இரு மாநிலங்களிலும் உள்ளது. இதனை, கீழ் மிசிசிப்பி ஆற்றுடன் இணைத்து கணக்கிட்டால், இது உலகின் நான்காவது நீளமான ஆறாகும். மிசோரி ஆறு, நூற்றுக்கணக்கான துணையாறுகளைக் கொண்டுள்ளது. 12,000 ஆண்டுகளாக மக்கள் மிசோரியையும், அதன் துணையாறுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். மிசோரி ஆறு அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் வடமேற்குப் பெருவழி என்று கருதப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், மிசோரி ஆற்றுப்படுகை, வேளாண்மையிலும், மற்ற தொழில்களிலும் வளர்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் மக்களின் குடியேற்றமும் அதிகரித்துள்ளது. இத்தகைய வளர்ச்சியால், இந்த ஆற்றில் பல்லுயிரின வகைகளும், நீரின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறில் பதினைந்து அணைகளும், துணையாறுகளில் நூற்றுக்கணக்கான அணைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆற்றுப்படுகையில், பொழுதுபோக்கிற்காகவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 1960ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள், ஒரு கோடி மணி நேரத்தை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினர். அந்த நேரம், 1990ம் ஆண்டில் 6 கோடி மணி நேரங்களாக அதிகரித்தது. நீர்வழிப் பயணத்திற்காக வளைந்து ஓடும் இந்த ஆறு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நேராக்கப்பட்டதால், அதன் நீளம் ஏறக்குறைய 320 கி.மீக்குக் குறைந்ததுள்ளது என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment