தண்ணீர் அருந்துவதில் கவனம் வேண்டும்.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித உடலில் செரிமானம், வியர்வை வெளியேற்றம், சத்துணவை உடலுக்குள் எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவது, உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்வதற்குத் தண்ணீர் அவசியத் தேவையாகிறது. நம் உடலில், 5 முதல் 10 விழுக்காடு வரை தண்ணீர் இழப்பு ஏற்படும்போது அது உயிருக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே 15 முதல் 20 விழுக்காடாக உயரும் பட்சத்தில், அது நம்மை மரணிக்கச் செய்துவிடுகிறது.
நமது உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயல்படுகிறது. நம்முடைய தோலினை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும்போது, தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் தண்ணீரின் அளவு குறைவதே காரணமாக அமைகிறது. மேலும், பிறக்கும் குழந்தையின் உடலில் ஏறத்தாழ 75 முதல் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் இருப்பதால்தான், அக்குழந்தையின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. இத்தண்ணீர் 50 விழுக்காடாகக் குறையும்போது, 65 முதல் 70 வயதான முதியோரின் உடலில் சுருக்கங்கள் காணப்படுகின்றன. தண்ணீர் குறைவின் காரணமாகவே, முதுமையில் எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் நிகழ்கிறது. ஆகவே, மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 கப் வரையிலான தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் அருந்துவதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment