உக்ரைன் புலம்பெயர்ந்தோரை வரவேற்க லித்துவேனியா தயார்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் போர் தொடங்கியது குறித்த செய்திகள் ஐரோப்பிய ஆயர்களுக்கு மிகுந்த கவலையளித்துள்ள அதேவேளை, அந்நாட்டில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பிப்பதாக, ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, லித்துவேனியப் பேராயர் Gintaras Grušas அவர்கள் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்து வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, வில்னியுஸ் பேராயர் Grušas அவர்கள், உக்ரைன் திருஅவை மற்றும், அந்நாட்டு மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அவர்களுக்காக ஆயர்கள் இறைவேண்டல் செய்கின்றனர் என்று கூறினார்.
உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புகலிடம் அளிக்க, லித்துவேனியா நாட்டின் பல்வேறு நகரங்களின் மக்கள் தயாராகி வருகின்றனர் என்றும், உக்ரைன் நாட்டிற்காக திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இறைவேண்டல் மற்றும், உண்ணாநோன்பு நாளில், லித்துவேனிய மக்களும் அவரோடு இணைந்து அந்நாளைக் கடைப்பிடிக்கவுள்ளனர் என்றும், பேராயர் Grušas அவர்கள் கூறியுள்ளார்.
மத்தியதரைக் கடல் பகுதியின் எல்லையில் அமைதி என்ற தலைப்பில் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் பேராயர் Grušas அவர்கள் பங்குகொண்டு வருகிறார்.
உக்ரைன் நாட்டின் எல்லையிலுள்ள போலந்து நாட்டிற்கு, மிகப்பெரும் அளவில், உக்ரைன் மக்கள் புலம்பெயரக்கூடும் எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக, அந்நாட்டில் இடம்பெற்றுவரும் போர் முடிவடையவேண்டும், மற்றும், நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்பதற்கே ஆயர்கள் அழைப்புவிடுக்கின்றனர் எனவும், லித்துவேனியா நாட்டுப் பேராயர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment